ஓய்வூதியம்

ஒன்றாம் தேதி ஓய்வூதியம்
வங்கிக் கணக்கில் வந்துவிடும்..
முதல் நாளே பணம் எடுக்கும்
கட்டாயத்திலும் பிடிவாதத்திலும்
கால்கடுக்க வரிசையில் நிற்கும்
நடுத்தர மூத்த குடிமக்களில்
அப்பாவும் ஒருவர்..

மருமகளின் முணுமுணுப்பையும்
சட்டை செய்யாது சட்டையணிந்து
கிளம்பி விடுவார் முதல் தேதியில்..

நாலுமாதம் முன்பு வரை
நண்பர் நாராயணசாமியோடு
பழங்கதைகள் பேசி செல்வதுண்டு..
நிரந்தரமாய் வாழ்விலிருந்தும்
நாராயணசாமி ஓய்வு பெற்றபின்
அப்பா பாவம் தனியாகத்தான்..

இன்று சீக்கிரமாய் கிளம்பி விட்டார்..
உயிரோடு இருப்பதற்கான
சான்றிதழ் சமர்ப்பித்து விட்டு
பணம் எடுக்கவேண்டுமென
சொல்லிச் சென்றவரின்
உயிரற்றவுடல் ஆம்புலன்சில் திரும்பியது..

அவர் வைத்திருந்த மஞ்சப் பையை
யாரோ ஒருவர் என்னிடம் நீட்ட
உள்ளே இருந்தது
ஓய்வூதியப் பணமும்
நீரிழிவு நோயின் மாத்திரைகளும்
நேற்று தொலைகாட்சி விளம்பரத்தில்
பேத்தி காண்பித்திருந்த
விலை அதிகமுள்ள
சாக்லேட்டு பாக்கெட்டும்..

எழுதியவர் : ஜி ராஜன் (4-Feb-16, 10:44 am)
பார்வை : 228

மேலே