குளத்தின் மறுபக்கம்

நீர்சுழி மேலெழுந்து
மீன் கொத்தியின் நிசியில்
சலனத்தை தோற்றுவிப்பது போன்று
குளம் நம் கண்களை
ஏமாற்றி விடுகிறது.

நீராடிப் பறவைகளின் தடாகமாய்
அலாதிகளால் பூசி மெழுகப்பட
குளத்தின் பரப்பு
ஆம்பல் பூத்த கரைவெளியாகி
மாயங்களைத் திணித்து
மீன்கள் துள்ளி விளையாடி குளிக்கும்
நீர்த் தொட்டி என விரிகின்றன..

மூர்ச்சையுற வளிபட்ட துடுப்பினது
வலிமிகு கணங்களை
திரும்பிப் பார்க்காது தோணி
ஒரு கரையை மறு பாகத்திற்கு
இழுத்துச் சென்று பொருத்திவிடும்
தொனியில் ஆடுவது போன்று
நாம் பார்வைகளால்
மேய்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு மேலும்
ஒரு படகோட்டியின்
வாழ்வு நகரும் பிரயத்தனத்தை
சில நாணயங்களைத் திணித்து
செல்லாக் காசாக்கி விடவும்
நாம் பின் நிற்பதில்லை.

குளம் என்பதன் கீழ்
மூடி மறைக்கப்பட்ட மண்
சேற்றில் புதைந்து
மூழ்கி மூர்ச்சையுற்று
அடிமண்டிக் கிடக்கிறது என்பதெல்லாம்
ஒரு நீர் துளி போலேனும்
யாரின் மனதிலும்
படிந்து விடுவதில்லை.

- ரோஷான் ஏ.ஜிப்ரி(கீற்றுக்கு நன்றி.)

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (6-Feb-16, 8:08 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 111

மேலே