விழியோரத்தில் ஒரு செய்தி
நீ
பூவிதழை
மெல்லத் திறந்தாய்
புத்தகங்கள் மூடிக் கொண்டன !
நீ
புன்னகை இதழில்
மெல்லச் சிரித்தாய்
பூக்கள் ஓய்வு எடுத்துக் கொண்டன !
நீ
அழகிய இமைகளை
மெல்லக் கவித்தாய்
அந்திப் பொழுது நன்றி சொல்லி விடை பெற்றது !
நீ
நீல வானத்தை சற்று
நிமிர்ந்து பார்த்தாய்
நிலவு வரவோ வேண்டாமோ என்று தயங்குகிறது !
நீ
விழிகள் இரண்டையும்
மெல்லச் சிமிட்டினாய்
தாரகைகள் நீல வானத் தாளில் குறிப்பெடுத்துக் கொண்டன !
நீ
விழியோரத்தில் ஒரு
செய்தி விடுத்தாய்
நானும் குறிப்பெடுத்துக் கொண்டேன் நாளைய கவிதைக்கு !
~~~கல்பனா பாரதி~~~