காதலன் காதலியை வினாவுதல்

மறுமொழி கூறடி மையலே!
பசும்பால் தன் வெண்மையை மறைக்குமோ?
இரவின் இருள்தன் கருமையை விலக்குமோ?
பாயும்குருதி தன் செம்மையை உதிர்க்குமோ?
அகண்ட ஆகாயம்தான் தன்நீலத்தை அழிக்குமோ?

மறுமொழி கூறடி மையலே!
தீட்டிய வைரம்தன் ஒளியை இழக்குமோ?
மீட்டிய யாழ்தன் இனிமையை குறைக்குமோ?
ஆழ்கடல் தன் அலைகளினை விரட்டுமோ?
தாய்பிரிந்த சேய்தான் தன் கூக்குரலை நிறுத்துமோ?

மறுமொழி கூறடி மையலே!
மெல்லிசை தன் அதிர்வின்றி பிறக்குமோ?
பேரிடி தன் மின்னலின்றி இடிக்குமோ?
அழகு செய்யுள்தன் அணியின்றி இனிக்குமோ?
செந்தமிழ் பதம்தான் தன்பொருளின்றி விளங்குமோ?

தேவர்குல மாமை உன்னைவிட்டு பிரியுமோ?
என்பேரின்பம் உன்னை மறந்தால் நிலைக்குமோ?
இவையறிந்த என்கிழத்தியே! மறுமொழி கூறடி!
நாமிருவர் மட்டும் சேர்ந்தில்லாததன் நீதியென்னவோ?

எழுதியவர் : குறள் பொழிலன் (8-Feb-16, 11:02 pm)
பார்வை : 154

மேலே