புகைப்படம் ஒரு பக்க கதை கவிஜி

அந்த புகைப்படத்தை எல்லா நேரங்களிலும் அவன் பார்த்தான்.. அழுகை கொண்ட நாட்களில் அது அவனுக்கு ஆறுதல் சொனனது.. சந்தோஷ
தருணங்களில் அது அவனுடன் கை கோர்த்துக் கொண்டது.... தனிமையின் வாசலில் பரவி கிடக்கும் முற்களை அந்த புகைப்படமே
ஒவ்வொன்றாகஅகற்றுவதாக அவனின் நம்பிக்கை பூத்தோட்டம் வளர்த்தது...இன்று வரை யோசிக்கிறான்.... ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.. அடிக்கடி வீடு மாறும் நகரவாசி இளைஞன்....அவன்....

ஒரு நாள் ஒரு புது வீட்டுக்கு வந்து, இருக்கும் புகைப்படங்களையெல்லாம் எடுத்து சுவற்றில் ஆணி அடிக்காமல் மாட்டிக் கொண்டு இருந்த போதுதான்.. இந்தப் புகைப்படத்தைக் கண்டான்..

"என்ன இது... யார் போட்டோ இது......!... இது எப்படி இங்கு வந்தது ?........ நம்ம வீட்டு போட்டோ இல்லயே.... பின்ன யாரோடது....?".....என்று தடுமாறிய மனம்.. "அப்படி என்றால் இத்தனை நாட்களாக எப்படி பார்க்காமல் இருந்தோம்"-என்றும் குழம்பியது... யோசித்தான்... புகைப்படத்தை உற்று உற்றுப் பார்த்தான்... சொந்த பந்த முகம் எதுவும் இருக்கிறதா என்று ஆழ்ந்து கவனித்தான்... இல்லை....

ஆக, கண்டிப்பாக அவனுக்கு சம்பந்தமே இல்லாத போட்டோ இது,... எதோ ஒரு வீட்டில் குடியிருக்கும் போது முன் குடியிருந்தவர்கள் யாரோ விட்டு சென்ற போட்டோ, போட்டோவோடு போட்டோவாக சேர்ந்து கொண்டு விட்டது...என்பதை நன்றாக புரிந்து கொண்டான்..போட்டோவை விட்டு போன வர்கள் கண்டிப்பாக தேடிக் கொண்டுதான் இருப்பர்கள்..யோசித்தவன்.... மெல்ல முணங்க வும் செய்தான்..."யார் என்று, கண்டு பிடிக்க...? அல்லது எங்கு கொண்டு கொடுக்க..." எந்த வீட்டில் குடியிருக்கும் போது இந்த போட்டோ சேர்ந்து கொண்டது என்றும் தெரியவில்லை என்று யோசித்தவன், அதன் பின் அந்த போட்டோவை தூக்கி ஓர் ஓரமாய் போட்டு விட்டான்....

ஒரு மழை இரவில்.. மனம் எதையோ தேடிக் கொண்டு ஜன்னல் வழியாக மழை பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் கண்ணில் கூசி பளிச்சிட்ட அந்த
புகைப் படத்தை மென் முறுவலோடு எடுத்து உற்றுப் பார்த்தான்...அழகிய பெண்ணின் புகைப்படம் அது.. கருப்பு வெள்ளையில்... அத்தனை சாந்தமாக
இருந்தது... கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தவன்... புகைப் படத்தை உள்ளங்கை கொண்டு துடைத்தான்.. பின் ஒரு துணி கொண்டு நன்றாகத்
துடைத்தான்..... படிந்து கிடந்த தூசிகளை அகற்றினான்...அகலாத மென் சோகம் புதுக் கவிதையென.. படிந்தே கிடந்ததை..... கண்கள் கொண்டே வாசித்தான்...

"நீ யாரு.. எப்படி.... என்கிட்ட வந்த...?....ம்ம்......... என்று புருவம் தூக்கி மிக மிக ரகசியமாக கேட்டான்.. அவனே சிரித்தும் கொண்டான்... அது அவனிடம் ஏதோ பேசுவது போலவே உணர்ந்தான்.... அவன் தனிமையை அந்த புகைப்படம் ஒரு பார்வையில் போக்கி விட்டதாக நம்பத் தொடங்கினான்...அதை அவன் தலைப்பக்கம் இருந்த மேஜையில் வைத்துக் கொண்டான்.... விடியலும் இரவும் அந்த புகைப்படத்திலேயே விடிந்தது...., முடிந்தது... யாரோ ஒருவரின் நினைவைக் கொண்டிருப்பது போல, உள்ளே ஒரு வகை அமைதியைக் கண்டான்... அவனுக்கு அந்த புகைப்படம் போதுமானதாக இருந்தது வாழ்ந்து கிடக்க.....ஒரு வாழ்தலின் நிதர்சனமாக அந்த புகைப்படம் இருந்தது ..... எதற்கோ ஒரு சாட்சியைப் போல அந்தப் புகைப்படம் இருந்து கொண்டிருந்தது...அது எதையோ தேடுவதைப் போல உணர்ந்த நாளில் அதை சொந்தமாகவே நினைக்கத் தொடங்கினான்...

சில நாட்களில் ஒரு மரணித்த நண்பனின் சவ அடக்கத்துக்கு சுடுகாடு போயிருந்தான்.... நண்பனை புதைத்து விட்டு வரும் வழியில் பக்கத்தில் இருந்த கல்லறையில் பதிந்திருந்து பளிச்சிட்ட ஒரு புகைப்படம் கண்களுக்கு பழக்கமான ஒன்றாக இருக்க சட்டென நின்று குனிந்து நன்றாகப் பார்த்தான்...

ஆம்..அது அவன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தின் முகமே.... திக் என்று இதயம் நிற்பது போல சுழல வேகமெடுத்த மூளை பரபரவென இன்னும் நன்றாகப் பார்க்க சொன்னது..

பெயர்... நியந்தா...
பிறப்பு 1965 இறப்பு 2000
-உன் நினைவுகள் அழிவதில்லை....-

என்று புகைப்படம் பதித்து எழுதி இருக்க.... கண்களை விரித்த மனதுக்குள் பெரும் பயம் பீறிட நடுக்கத்தோடு.. வேக வேகமாய் வீடு நோக்கி நடந்தான்.. மனதுக்குள் ஓடிய ஓட்டத்தில் இத்தனை நாளும் ஒவ்வொரு இரவும்... இன்னும் இருண்மை பூசிக் கொண்டு வழி நெடுக தலை ஆட்டுவது போல இருக்க வீட்டை திறந்து கொண்டு அவன் அறைக்குள் ஓடினான்...

அங்கே அந்த புகைப்படத்தைக் காணவில்லை....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (12-Feb-16, 12:34 pm)
பார்வை : 931

மேலே