கந்தன்
வரப்பில் கொலுசு சத்தம் கேட்டு காலை வெயிலை இடக்கையில் மறைத்து வலக்கை மண்வெட்டியுடன் தொலை நோக்கினான் கந்தன்.வழியில் முளைத்த எருக்கஞ்செடி ஒன்றினையும் ,களைச்செடிகள் சிலதையும் பிடுங்கிக்கொண்டே வந்தாள் சிவந்தி. அவளுக்கு இதே வழக்கம் உட்கார்ந்தாலும் நடந்தாலும் படுத்தாலும் ஏதாவது வேலையை செய்துக் கொண்டே இருப்பாள் .இல்லையா என்ன செய்ய வேண்டும் என யோசித்துக்கொண்டிருப்பாள்.
அசந்து மசந்து படுத்துத் தொலையேன் என கந்தனும் சொல்லிச் சலித்திருக்கிறான்.அவளோ மெளனமாக வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பாள் . நேற்று போல இருக்கிறது .சிறு வயதில் கணவனை இழந்த அம்மா 24 வருடங்களுக்கு முன் ஆசைப்பட்டு தேடி வைத்தவள்தான் இந்த சிவந்தி. வயதே தெரியாது அவள் முகத்தில் ,அருகில் வந்துவிட்ட சிவந்தியிடம் கேட்டான் கந்தன், நாந்தான் படிக்கல .நீ படிச்சு முடிச்சு பள்ளிக்கூடத்துல மார்க்குலாம் வாங்கிருக்கியே நம்ம ராசுப்பய என்னமோ போன கேட்கிறானே அது ஒன்னு பாத்து வாங்கிக்கொடேன்.
ம்க்கும்...நான் படிச்சது பத்தாங்கிளாசு என்னமோ பட்டப்படிப்பு படிச்சாப்புல பேசுறீயே நீயுந்தான் பத்து போய்ட்டு பாதில நின்னுட்ட.அவன் கேக்குறது ஸ்மார்ட் போன் .,என்றவளைப் பார்த்து விட்டு கையில் இருந்த மண் வெட்டிய தரையில் வைத்தவாறு உட்கார்ந்தான்.
ஏன் சிவந்தி அந்த போன் தானே எல்லாரும் வச்சிருக்காங்க தெரியும், தெரியும். இந்த வட்டம் கடலய ஒரு லோடு ஏத்திப்புட்டம்னா போதும் அந்த போன வாங்கிரலாம் . மீதி கல்லய செட்டியார் கடைல தள்ளி விட்டுரலாம். தூந்து போன கிணறு ,அடிக்கொருதரம் வேல வைக்குற மோட்ருனு இழுத்துப் பிடிக்கவே மேமூச்சு வாங்குது .
அவன் நல்ல நேரமோ ராசுப்பய நல்ல நேரமோ கடலை நல்ல விலைக்குப் போனது.அடுத்த வாரத்தில் ராசுப்பய ஸ்மார்ட் போன் கையில் வைத்திருந்தான் . இவன் சிறிது கருவினாலும் மனதிற்குள் பெருமையாகவே இருந்தது .ராசு திருமணமாகி 5வருடங்கள் கழித்து பிறந்த செல்லப்பிள்ளை . பக்கத்து டவுனில் இருக்கும் கல்லூரியில் மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சீட்டு வாங்கி விட்டான் .அவன் வழி அவனுக்கு .
மொபைல் போனில் வருகிற பதிவுகளையும் செய்திகளையும் படங்களையும் ராசுக்குட்டி சிவந்தியிடம் காண்பித்து விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பான். அம்மாவும் பையனும் ஏகத்துக்கும் பேசிக்கொள்வார்கள். இவன் வாசலில் கட்டிலைப் போட்டுக்கொண்டு படுத்து விடுவான் நிலா வெளிச்சத்தில் . அவர்கள் பேசுவதும் சிரிப்பதும் கேட்கும்.
இன்று அசதியாய் இருந்தாலும் தூக்கம் வராமல் இழுத்தடித்தது . தாயும் பிள்ளையும் வெளியே வந்து விட்டார்கள் . காற்று போத வில்லை போலும். தெரு விளக்கு வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிவந்தி போனை வாங்கி கொஞ்சம் பார்ப்பதற்கு கற்றுக் கொண்டு விட்டாள் .
ராசுவிடம் இருந்து வாங்கிஅப்போதுதான் வந்து இருந்த செய்தியை என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
ராசு, அம்மா இது நம்ம நாடாளுமன்ற எம்.பி ங்களுக்கு பாராளுமன்றத்துல இருக்குற கேண்டீன்ல சாப்பாடு டீ டிபனுக்கு நம்ம அரசு கொடுக்கற சலுகை விலைங்க , இது அவங்களுக்கு அரசு கொடுக்குற சம்பளம், செஞ்சு கொடுக்குற வசதிங்க என்று சொல்லி விட்டு விரிவாகப் படித்து காண்பித்தான் .
கேட்டுக் கொண்டிருந்த இவன் கட்டிலை பின் தள்ளி விருட்டென வேகமாக எழுந்த சத்தம் கேட்டு சற்று பயந்துதான் போனார்கள் ராசுவும் சிவந்தியும்.
உள்ளே சென்றவன் ஒரு அலமாரியில் வைத்திருந்த. நோட்டுப் புத்தகங்களைக் கொண்டு வந்து போட்டான் .இது நிலத்தை குத்தகைக்கு எடுத்ததிலிருந்து எழுதியிருந்த வரவு செலவுக் கண்க்கு.வருடா வருடம் கணக்கு மொத்தம் போட்டு சுபம் எழுதி வைப்பான் .குத்தகை எடுத்து பத்து ஆண்டுகள் ஓடியிருக்கும் .அதற்கு முன் அடுத்தவர் நிலத்தில் கூலி வேலைதான் பார்த்துக் கொண்டிருந்தான் . சிவந்திதான் ஆலோசனை கொடுத்தாள் அப்படியே செய்தாயிற்று. முன்பு இருந்த நிலைக்கும் இப்போதைக்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் ஊரில் மரியாதை அதிகமாயிற்று. மாமனார் பெருமைப் பட்டுக் கொண்டார் செல்லும் இடமெல்லாம் புகையிலையைக் குதப்பிக்கொண்டு .
நோட்டுகள் கீழே போட்ட சத்தம் கேட்டு தாயும் மகனும் உள்ளே வந்தனர்.மகன் கணக்கில் புலி என்னும் பெருமை உண்டு இவனுக்கு .
ராசு இந்த கணக்கெல்லாம ஒரு பேப்பர்ல எழுதி கூட்டி கழிச்சு தா ராசா என்றான் .
ராசு பத்து வருடங்களாக உள்ள கணக்குகளையும் கவனித்தான் .ஒரு ஒரு வருடமும் செலவும் அதிகரித்திருந்தது .குத்தகைத் தொகையை வருடத்திற்கு இருமுறை கொடுத்து வந்தனர். 2000, 2000 என வருடத்திற்கு 4000 .பத்து வருடத்திற்கு 40000 குத்தகைத் தொகைக்கு மட்டுமே 40000போயிருந்தது .மிஞ்சியது உரம் , எரு அடிப்பதற்கும் மோட்டார் செலவுக்கும் போக இவர்கள் கையில் வருடத்திற்கு 50000 வருகிறது . கையில் இருக்கும் கோழிகளும்,ஆடுகளும் உதவி புரிந்தது மீதி நாட்களை சமாளிக்க . ராசு ஆழ்ந்த சிந்தனையுடன் மெளனமாக பேப்பரை நீட்டினான் இவனிடம் . இவன் மனதில் போட்டு வைத்திருந்த கணக்குதானே வாங்கி கண்களை எணகளில் ஓட விட்டான் . வெளியே வந்து ராசுக்குட்டி வைத்துச்சென்ற ஸ்மார்ட் போனின் திரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ....... .