கருப்பு தாஜ்மகால்

கருப்பு தாஜ்மஹால்

"அப்பா" பூ விரிவதுபோன்ற மிக மெல்லிய குரலில் ஜெகனாரா அழைத்தாள்.
பதிலில்லை.
"அம்மா! இரவு முழுவதும் பேரரசர் தூங்கவில்லை இடையிடையே நீங்கள் வந்து விட்டீர்களா என்று பலமுறை கேட்டுக் கொண்டேயிருந்தார் ! " உடனிருந்த பணிப்பெண் பதில் சொன்னாள்.
நீண்ட நாள் படுக்கையாலும், உடலை வருத்தும் வயிற்றுப்போக்காலும் வாடிய கொழுந்தாய் சுருண்டு கிடந்தார் பேரரசர் ஷா ஜகான். எதோ துர் நிகழ்வை சொல்ல வருவது போல் வழக்கத்தை விட அதிகமான இருள் அறையெங்கும் பரவிக் கிடந்தது.
அவரது மார்புக் கூடு ஒரே சீராக ஏறி இறங்கி கொண்டிருந்தது அருகிருந்த சிறிய விளக்கொளியில் தெரிந்தது
சற்றுப் பிரயாசையுடன் கூர்ந்து கவனித்தால் மேல்ச் சாளரத்தின் வழியே பின்னிரவு நிலவொளியில் யமுனையின் மெல்லிய அலைச் சத்தங்களின் பின்னணியுடன் தாஜ் மகாலின் மேல்ப் பகுதி காணக் கிடைத்தது. அதைப் பார்க்க தவிர்த்து ஜெகனாரா அவசரமாய் பார்வையை திருப்பி அறைக்குள்ளே கூர்ந்து பார்த்தாள்.
இருள்பழக சற்றுநேரம் பிடித்தது. பஞ்சணையின் கால் பகுதிக்கருகில் சிற்றன்னை அக்பராபாடி படுத்திருக்க கண்டாள். " பாவம் வெகுளி!' என்ற வார்த்தைகள் ஒரு நீண்ட பெருமூச்சைத் தொடர்ந்து வந்தது அவளிடமிருந்து.
இன்னும் சற்றுத் தொலைவில் மருந்துக் குப்பிகளும், கலவைகளும் அதை அரைக்கும் அரைப்பான்களும் ,மூலிகைகளும் மற்றும் பீங்கான் கிண்ணங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு
வைக்கப் பட்டிருந்தன . மற்றறொரு புறம் நேற்றுப் பறித்தக் கனிகளும் சில எளிய உணவுகளும் வைக்கப்பட்டிருந்தன . இவை எல்லாவற்றையும் பார்த்துத் திரும்பிய ஜெகனாராவின் விழிகள் மீண்டும் பேரரசரின் பக்கம் திரும்பின .
அவளையும் அறியாமல் அவளது இதயம் தனது இளமை வாழ்க்கையில் மூழ்கியது.. தான் சிறு வயதாக இருந்தபோது தந்தை ஷா ஜகானும் தாய் மும்தாஜும் தன்மேல் காட்டிய பேரளவான அன்பையும் அது தொடர்பான நிகழ்வுகளையும் சுற்றி சுற்றி எண்ணமிட்டது .அப்போதெல்லாம் உலகம் முழுவதுமே இப்படி அன்பு நிறைந்து இருக்கும் என்றும் தனது தாத்தா ஜகாங்கீர் அவ்வப்போது சொல்லும் கதைகளில் வரும் சுவனம் என்பதே தன் இருப்பிடத்தைப் போல் தான் இருக்கும் என்று தான் எண்ணிக்கொண்டிருந்ததும் நினைவில் வந்தது அந்த நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்புநோக்கும் மனதில் எழும் கசப்புணர்வு அவளையும் அறியாமல் முகத்தில் பிரதிபலித்தது .
சக்கரவர்த்தியின் உடலில் சிறு அசைவுகள் எ ற்ப்பட்டதைத் தொடர்ந்து அவரது விழிகளை மெதுவாகத் திறந்து தன்முன் நிற்கும் மகளைப் பார்த்தார்
"ஜெகனாரா ......'
'சொல்லுங்கள் அப்பா 'என்பதைப் போல அவரை நோக்கி குனிந்தாள்
'சக்கரவர்த்தி என்ன சொன்னார்? என்று இளக்காரம் தொனிக்க சக்கரவர்த்தி என்பதை வேண்டுமென்றே அழுத்திச் சொன்னார் கவிஞரல்லவா ? உணர்வுகளை எப்படி மறைக்க முடியும் .
'சக்கரவர்த்தி...... என்ன ...."என்று அவரது வார்த்தைகளையே தனக்குள் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டவள் ஞாபகம் வந்தவளாய் ,
"அப்பா அவுரங்கசீப் மராட்டா எல்லைக்குப் போயிருக்கிறாராம் வந்தவுடன் நானே உங்களது விசயத்திற்கு பேசுகிறேன்"
அவள் விஷயம் என்று சொன்னது ,ஷா ஜகான் , தான் கட்டிய தாஜ் மகாலை சுற்றிப் பார்க்க விரும்பியது , அவராகவே நட ந்து போக முடியாவிட்டாலும் பணியாட்களின் உதவியுடன் பார்க்க முடியும் என்று மகள் நம்பினாள், அது மட்டுமில்லை அவர் உண்மையில் பார்க்க விரும்பியது அவரது காதல் இதயம் மும்தாஜின் கல்லறையை என்பதும் மகளுக்கு புரிந்தது .
சும்மாவா! அவர்களின் அன்பை உடனிருந்தே பார்த்தவளாயிற்றே !
ஆனால் இப்போது அவுரங்கசீப்பிடம் அனுமதி கிடைப்பது என்பது நடவாத காரியம் என்பது தெரிந்தும் பொய் சொன்னாள்.
பல சமயங்களில் தந்தையின் உடல் நலக் குறைவையும் மீறி வெளிப்படும் அறிவுக் கூர்மையும் , ஞாபக சக்தியும் மகளை வியப்பில் ஆழ்த்தும் .
இன்னும் சற்று வாகாக உடம்பைத் தளர்த்திக் கொண்ட தந்தை , மகளை கூர்ந்து பார்த்தார்.
"பெண்ணாக இருந்தாலும் அரச ரத்தமல்லவா ஓடுகிறது! சாதூர்யத்திர்க்கு சொல்லவா வேண்டும் ?' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் . பேரரசரின் மனவோட்டங்களைப் புரிந்து கொண்ட மகளும் ,
அருகிருந்த பணிப் பெண்ணிடம் ,
"வைத்தியர் வந்திருந்தாரா? என்ன சொன்னார் ?"என்றாள்
"காலையில் வந்து பார்த்தார் இளவரசி! குளிகை கொடுத்துள்ளார்" என்றாள் பவ்யமாக
"மருந்தால் மாறக்கூடியது எதுவுமில்லை ஜெகனாரா! நடப்பதெல்லாம் அல்லாவின் ஆக்கினைப்படிதான் நடக்கிறது. என்ன! என்னால் உனக்குத்தான் மிகுந்த சிரமம்"
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்பா உங்களுக்கு பணிவிடை செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே!"
"அரண் மனையின் மணிமகுடம் மும்தாஜின் தலை மகளல்லவா வேறென்ன பதிலை சொல்ல போகிறாய் "
என்று குறும்பு புன்னகையுடன் மெல்ல கண்களை மூடிக் கொண்டார் சக்கரவர்த்தி .
அவரது மனதில் மும்தாஜின் நினைவுகள் நிழலாடத் தொடங்கின .
"ஆமாம் எனக்கு இந்த நிலை வர நானே காரணம் ! மும்தாஜின் அன்பிற்கு ஈடாக அன்பு செலுத்த எனக்குத் தெரியவில்லை ! வேறென்ன செய்ய ஒரு சக்கரவர்த்தியாக இருந்து கொண்டு ஒரு சமான்யனைப் போல் மனைவியே கதியென்று இருக்க முடியுமா?"
சில சமயம்போல் பேரரசர் கேள்வியும் பதிலுமாய் தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார் .
ஜெகனாரா இடைமறித்து
"இல்லையப்பா அம்மாவின் மேல் நீங்கள் வைத்த காதலை வெளிப்படுத்தத்தான் உலகமே புகழும்படி தாஜ் மகாலை கட்டுவித்திருக்கிறீர்கள்தானே"
"இல்லை மகளே காதலின் மேன்மை காதலிப்பதில் தான் இருக்கிறதே ஒழிய அதை பிறருக்கு வெளிக் காட்டுவதில் இல்லை! "
"தெற்கே மதுரையிலே தன் தமையனின் மகிழ்ச்சிக்காக இளவரசர் ஒருவர் துறவியாக மாறி விட்டாராம்!
அதைப்போல என் மும்தாஜுக்காக நான் அனைத்தையும் உதறிவிட்டு சாமான்யனாக மாறியிருக்க வேண்டும் . அதுதான் அவளது அன்பை ஓரளவாவது ஈடு கட்டியிருக்கும் "
பேரரசரின் தோளைத் தொட்ட ஜெகனாரா ,
"அப்பா, கண்டதையும் மனசில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் களைப்பாய் இருக்கிறீர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் "
"இல்லையம்மா உன் அம்மாவிற்குத் தெரிந்ததெல்லாம் அன்பும் காதலும் மட்டுந்தான் அவள் என்னிடம் யாசித்ததும் அதையேதான் . இந்த மரியாதை பட்டாபடோபமெல்லாம் அவள் இதயத்தைத் தொட்டதேயில்லை ....
சற்று இடைவெளி விட்டு .....
இப்படி அன்பை மட்டுமே அறிந்த எங்களுக்கு அவுரங்க சீப் போன்ற ஒரு மகன் எப்படிப் பிறந்தான்? இல்லை இல்லை அவனிடம் தவறில்லை அரியாசனத்துக்காக உடன்பிறந்தவரை கொல்வதும், தாய் தந்தையரை சிறையிலடைப்பதும்தான் நம் வம்சத்தில் வழி வழியாக நடப்பது ஆயிற்றே !"
வேறு வழியின்றி அவரின் மனத்தை மாற்ற
"அப்பா!நேற்று நான் ஒரு துர்கனவு கண்டேன் " என்றாள்.
"என்ன துர்கனவா ? முதலில் நீ இந்துப் பெண்களுடன் அதிக தோழமை பூண்டுள்ளதைக் குறைத்துக் கொள் .
அவர்களைப் போலவே சகுனம் பார்க்க ஆரம்பித்து விட்டாய்! சரி சரி அப்படியென்ன கனவு கண்டாய்?
"நமது தாஜ் மகால் அப்படியே கருப்பாக நிறம் மாறி கருப்பு தாஜ் மகாலாக மாறுவது போல் கனவு கண்டேனப்பா "
"அடப் பயித்தியகாரப் பெண்ணே! இது கனவல்ல நினைவு ! இந்த தாஜ் மகால் கட்டிய போதே இதைப் போலவே கருப்பு பளிங்கில் இன்னொரு கறுப்பு தாஜ் மகால் கட்ட வல்லுனர்களிடம் பேசினோமே அந்த நினவு தான் இப்போது கனவாக வந்துள்ளது"
"இருக்கலாம் ஆனாலும் ஏதோ துர் நிகழ்வு ஒன்று நடக்கப் போவதாக மனசில் தோன்றுகிறது அப்பா "

"எட்டு வருட சிறை வாசம் ! நான் கட்டிய தாஜ்மஹாலைப் பார்க்கவே இன்னொருவர் அனுமதிக்காக காத்திருக்கும் நிலை ! இதை விடத் துயரம் எது ?" என்னைப் பொருத்தவரை எனது இந்த கடைசிக் காலம்தான் கருப்பு தாஜ் மகால் ! எனது முப்பாட்டன் பாபர் தனது மகன் ஹுமாயூன் உயிர் பிழைக்க வேண்டி இறைவனிடம் தனது உயிரை தத்தம் செய்தாராம். ஆனால் நானோ அவ்வாறு இறைவனுக்கு நெருக்கமானவனாகவும் இல்லை. என்னையே கதியென்று இருந்த மும்தாஜுக்கும் முழுமையான காதலைத் தரவில்லை. இப்போதெல்லாம் எனது மனத்தின் கேள்விகளுக்கே என்னால் பதில் சொல்ல முடியவில்லை . எனக்குப் பின்னால் வருபவர்களெல்லாம் தாஜ்மகாலைப் பார்த்துவிட்டு, நான் தான் உலகின் மிகச் சிறந்த காதலன் என்று பொய்யாக நம்ப போகிறார்கள். ஆனால் உண்மையை உணர்ந்த நான் எனது துயரப்பட்ட இதயமான கருப்பு தாஜ் மகாலோடு கல்லறையில் உறங்கப் போகிறேன் "
அவரை அமைதிப்படுத்தவோ என்னவோ ஆக்ரா மசூதியின் தொழகைப் பாங்கொலி கேட்கத் தொடங்கியது .
சற்று நேரம் அமைதியாக இருந்த சக்கரவர்த்தி
"அம்மா எனக்கு ஒரு உதவி செய்வாயா ?"
"சொல்லுங்கப்பா கட்டாயம் செய்கிறேன்!"
" உனக்கு பிடித்ததென்று சொல்வாயே , அந்த திரு வசனங்களை இன்று முழுவதும் நான் சொல்லும் வரை தொழுவாயாம்மா? எனது இதயத்தை இறைவனில் செலுத்துகிறேன் அப்படியாவது அதற்கு அமைதி கிடைக்கட்டும்"
அருகிருந்த விளக்கின் திரியை துண்டி விட்டு
கலிமாவையும் குரான் வசனங்களையும் வாசிக்கத் துவங்கினாள் ஜகனாரா.
ஆரம்பத்தில் பிரகாசமாக எரிந்த விளக்கு நேரம் செல்லச் செல்ல மங்கத் தொடங்கியது .
வெளியே உலகம் தனது இன்னொரு நாளை சுவாசிக்கத் துவங்கியது .

எழுதியவர் : நாராயணசுவாமி ராமச்சந்திர (12-Feb-16, 12:08 pm)
Tanglish : karuppu thajmagaal
பார்வை : 477

மேலே