காதலர் நாள்
காதலர் நாள்.
இந்த நாள் பல இதயங்கள் தங்கள் காதல் தடயங்களைத்தேடி அலைந்து கொண்டிருக்க, இங்கே இரண்டு இதயங்கள் ஈகோவால் சண்டையிட்டு காதல் தடையங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறன. அவன் பெயர் கவின் இவள் பெயர் மலர். இதோடு இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. பெற்றோர்களையும் மீறி காதலித்து திருமணம் செய்தவர்கள் இருவரும். இன்றுவரை இருவரின் பெற்றோர்களும் இவர்களது திருமணத்தை ஏற்காமல் பிரிந்தே வாழ்கின்றனர். இந்த இரண்டு மாதங்களாய் இருவரும் இடும் சண்டைகளில் இவர்களும் பிரிந்துவிடுவார்கள் போல. இரண்டு நாட்களாக இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே இருந்து இன்று பணிக்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். நேற்று அவள் மேல் உள்ள கோபத்தால் உணவை உண்ணாமலேயே தூங்கிவிட்டான். சமையலறையில் இவள் சமைக்கும் வாசம் இவன் தூக்கத்தைக் கலைத்தது. அவன் வயிறும் நாவும் அவனிடம் கேட்டன "உனது சண்டைக்கு எங்களை ஏண்டா துன்புறுத்துகிறாய்?" ஆனால் அவனது மூளையோ "அவளுக்கே அவ்வளவு திமிரு இருக்கும் போது என்க்கு எவ்வளவு இருக்கும்" என்றது.
"என்மேல எவ்வளவு கோபம் இருந்தா என்ன. சோறு மேல ஏன் கோபத்தைக் காட்டுற?" - மலர் மனதுக்குள் கேட்டுக் கொண்டாள். .
அந்த சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அவர்களின் சிந்தனை.
"இந்த சோறு மாதிரியே என்னையும் கைவிட்டுருலாம்னு நினைக்கிறியா?" அவள்.
"சீக்கிரம் கிளம்புடி பசிக்குது சாப்பிடனும். கெத்த உடக்கூடாது".
அவன் மதியம் சாப்பிட சாப்பாட்டு பெட்டியில் சாப்பாட்டு போட்டு வைத்துவிட்டு அவள் சாப்பிடாமலேயே வேலைக்குச் சென்றுவிட்டாள்.
"ஏண்டி நீ ஒரு வார்த்தைக்கூட சாப்பிட்டியானு கேட்கல நான் இத மீண்டும் சாப்பிடுவன்னு நினைக்கிறியா?"-கவின்.
வயிற்றுக்கும் மூளைக்கும் நடந்த சண்டையில் இறுதியில் மூளையே வென்றது. முட்டாள் மூளை.
இவனும் கிளம்பினான்.
படைக்கப்பட்ட பயன் வீணாகிவிடுமோ என்று ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டன அங்ககே உள்ளே இருந்த சோற்றுப் பருக்கைகள்.
மலருடைய அலுவலகத்தில் மலர் மற்றும் அவளது தோழி கயல் உடனான உரையாடல்.
"என்னடி இன்னைக்கு செம அழகா வந்துருக்க?"- மலர்.
"இன்னைக்கு என்ன நாள்னு மறந்துட்டியா? "- கயல்.
"என்ன நாள்"-மலர்.
"அடிப்பாவி காதலர் நாள் டி. இன்னைக்கு நானும் என் காதலனும் கோயிலுக்கு போகலாம் னு இருக்கோம். அதுதான் இந்த கொண்டாட்டம்"- கயல்.
"இந்த நாள்ளாம் யார்டி கொண்டாடுவா. சும்மா வீண் வேலை" - மலர்.
"போன வருடம் நீ பண்ண அலும்பலெல்லாம் மறந்துட்டியா. அப்பத்தான் கவின் உன்கிட்ட காதல சொன்னான். அவன் சொல்லுவான்னு தெரிஞ்சே என்ன அந்த பூங்காக்கு கூட்டிட்டு போயி அவன அலையவிட்டு கடைசியாதான காதல ஏத்துக்கிட்ட. இப்ப திருமணமும் பண்ணி ஆறுமாசம் ஆகிடுச்சு. இப்ப போயி வெறுப்பா பேசுற"- கயல்.
"அதுலாம் சும்மாடி. இப்ப பாரு எங்களுக்குள்ள எப்பவும் சண்டைதான். அவன் என்கிட் பேசுறதே இல்ல தெரியுமா? எதுவும் தெரியாத வயசுல காதலிச்சுடுறோம். அப்புறம் திருமணம் பண்ணிக்கிட்டு துன்பப்பட வேண்டியதா இருக்கு"- மலர்.
"ஏண்டி என்னடி ஆச்சு"- கயல்.
"அவன் இப்ப முன்ன மாதிரி இல்லடி. நான் எங்க கூப்பிட்டாலும் எனக்கு நேரம் இல்ல அப்படினு சொல்றான். என் மேல இப்ப நிறைய கோபப்படுறான். நாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசியே இரண்டுநாள் ஆச்சி"-மலர். கண்களில் வழிந்த நீர் மிகவும் வேகமாக கன்னத்தில் குடி கொண்டது.
"அட ச்சீ அழாத நிறுத்து. காதலிக்கும் போது மாதிரியே உன் பின்னாலயே இப்பவும் சுத்தமுடியுமா? இதுலாம் சின்ன சண்டடி. இத போயி பெரிசு படுத்திக்கிட்டு இருக்க"- கயல்.
"இல்லடி. அவன் நான் சமைச்ச சோறு கூட சாப்பிட மாட்டேன்கிறான். நேற்று இரவில் இருந்தே நான் சாப்பிடல. இன்னைக்கு காலைலயும் சாப்பிடல. அவன் ஒரு வார்த்தைக்கூட என்ன நீ சாப்பிட்டயானு கேட்கவே இல்ல"-மலர்.
"ஆமா நீ அவன சாப்பிட்டியானு கேட்டியா?"- கயல்.
"இல்ல"- மலர்.
"அப்புறம் அவன் எப்படி சாப்பிடுவான். நீ அவன சாப்பிடு னு ஒரு வார்த்தை சொல்லிப்பாரு. அவன் எவ்வளவு கோபம் இருந்தாலும் மறந்துடுவான். ஆம்பளங்கனா வெத்து கெளரவம் இருக்கத்தான் செய்யும். நாம தான் அனுசரிச்சு போகனும்"- கயல்.
"சரி அதவிடு. நீயாவது நல்லபடியான துணையா தேர்ந்தெடு"- மலர்.
"நீ முதல்ல அவன்ட போயி பேசு. அப்புறம் எல்லாம் தானா மாறும். இன்னைக்கு வேற சிறப்பு நாள். நீயும் போயி கொண்டாடு"- கயல்.
மலரின் தோழியின் வார்த்தைகள் தன்மீதும் தவறு இருப்பதாக மலரை உணர வைத்தது.
இதோ அவனது அலுவலகம்.
"என்னடா சோகமா இருக்க மாதிரி தெரியுதே இது அவன் தோழன்"- நகுன்.
"ஒன்னும் இல்லடா. அவ கூட கொஞ்சம் சண்டை அதுதான். அவ முன்ன மாதிரி இல்லடா. எதுக் கெடுத்தாலும் கோபப்படுறா. நான் எப்பவும் அவ பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க முடியுமா என்ன."- கவின்.
"சரி கடைசி நாலு மாசத்துல எங்கயாவது கூட்டிட்டு போயிருக்கியா?"- நகுன்.
"இல்லடா. வேலை அதிகம் டா"- கவின்.
"உன் வேலைய தூக்கி குப்பையில போடு. குடும்பமும் முக்கியம் டா. முதல்ல ஆசையா அவள்கிட்ட பேசிருக்கியா நீ காதலிச்ச போது பேசினியே அது மாதிரி?" நகுன்.
"நாங்க நல்லா பேசியே இரண்டு மாதம் ஆச்சு. இந்த இரண்டுநாளா முழுசா பேசவே இல்ல. இதுல எங்க ஆசையா பேசுறது. அவ என்ன சோறு சாப்பிடு னு ஒரு வார்த்தைக் கூட சொல்ல மாட்டேங்குறா. அவகிட்ட எப்படி பேசுறது"- கவின்.
"சரி மலர் சாப்பிட்டாங்களா? சாப்பிட்டியானு அவங்ககிட்ட நீ கேட்டியா?"- நகுன்.
"இல்ல. அவ சாப்பிட்டாளானு தெரியல நானும் கேட்கல"-கவின்.
"ஏண்டா காதலிக்கும் போது சாப்பிட்டியா ன்ற வார்த்தையத்தான்டா நாள்தோறும் நூறு முறை பேசி இருப்ப. இப்ப ஒரு முறை கேட்பதற்கே கசக்குதா? காதலிக்கும் போது நீ தப்பு பண்ணாலும் அவ தப்பு பண்லாம் நீதான முன்னாடியே மன்னிப்பு கேட்ப. அதுமாதிரி மன்னிப்பு கேட்டுருந்தா இப்ப இவ்வளவு சண்ட ஏன் வர போகுது?"- நகுன்.
"நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கனும்"- கவின்.
"மன்னிப்பு ன்ற ஒரு வார்த்தை உங்க இரண்டு பேத்தோட சண்டையும் தீர்க்கும் னா அத கேட்கிறதுல என்ன தப்பு இருக்கு. சரி வா சாப்பிட போலாம்"- நகுன்.
"இல்ல நான் சாப்பாடு எடுத்து வரல. வெளிய போயி சாப்பிட்டு வரேன்"- கவின்.
"ஏன் மலர் சாப்பாடு செய்யலயா? "-நகுன்.
"செஞ்சி சாப்பாட்டு பெட்டியில போட்டு வச்சா. நான்தான் கோவத்துல விட்டுட்டு வந்துட்டேன் "-கவின்.
"போடா. நீ எல்லாம் ஒரு மனிதனா. சரி நானும் வரேன் வா போலாம்"- நகுன்.
"சரி என் பைய எடு"- கவின்.
"என்ன பை கனமா இருக்கு? அடப்பாவி சோத்து மூட்டை உள்ளார தாண்டா இருக்கு. யாருக்கிட்ட காது குத்துற"- நகுன்.
"இல்லடா நான் எடுத்துவரல. அவ எதோ திட்டம் போட்டே இத பண்ணிருக்கா. மேசை மேல என் சாப்பாட்டு பெட்டி இருந்துச்சுடா. இது அவளோடது"- கவின்.
"ஆமா அவங்க உன்ன கெடுக்கறத்துக்கு திட்டம் போட்டுருக்காங்க. நீ சாப்பிடனும்னு இந்த வேலைய பண்ணிருக்காங்க. முதல்ல கோபத்தெல்லாம் மறந்துட்டு சோத்த தின்னுட்டு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டு சரியாகிற வழியப்பாரு"- நகுன்.
மன்னிப்பாளா? என்று அசடு வழிந்து கொண்டே கேட்டான் கவின்.
"இன்னைக்கு என்ன நாள்னு மறந்துட்டியா? காதல் நாள்டா. போ எல்லாம் நல்லா நடக்கும்" - நகுன்.
"ஐயய்யோ நான் மறந்தே போய்ட்டேன். இதுக்கும் சேர்த்து ஒரு ஆயிரம் மன்னிப்பு கேட்டுற வேண்டியது தான்"- கவின்.
இருவரும் என்ன நினைத்தார்களோ. தங்கள் முதல் காதல் பேச்சுக்களை மீண்டும் கேட்க, காதலைச் சொன்ன அதே இடத்திற்கு இருவரும் வந்தனர். முதலில் அவள் வந்து அந்த புல்வெளியில் புதிதாய் மலர்ந்த பூவாய் அமர்ந்திருந்தாள். அவன் சிறிது தாமதாமாக வந்தான். அவளைக் கண்டதும் அவனுக்கு இதயத்துடிப்பு இருமடங்கனது. சுற்றிலும் பார்த்தான் அங்கே இருந்த ரோசா மலரை அதன் அனுமதி இல்லாமலேயே பறித்துவிட்டான். அங்கு எழுதப்பட்ட வாசகமோ "பூக்களைப்பறிக்காதீர்கள்".
அவளோ அவன் காதலைச் சொன்ன நிமிடங்களை நினைத்து நிமிர்ந்த நேரம் அவன் மலரோடு மலரிடம் சொன்னான்,
"நான் செய்தது பிழைதான்.
என்னை தண்டித்துவிடு
உன் காதலால் மட்டும்".
அவள் இனியும் மன்னிக்காமல் இருப்பாளா என்ன.
ஒரு மலரைப் பறித்து இன்னொரு மலரை வென்றுவிட்டான். விட்டுக் கொடுத்து வாழ்வது தான் காதலும் இல்லறமும்.
இதோ இருவரும் மீண்டும் இணைந்து, நாளை அசைபோட இனிய நிகழ்வுகளை உருவாக்குகின்றனர்....
இதோ இதைப்பார்த்த இருவர்.
"பார்த்தீங்களா இவங்க பண்ற அக்கிரமத்த. எல்லோரும் இருக்கிறாங்கனு ஒரு மரியாத வேணாம். பொது இடத்துல பூவைக் கொடுத்து காதல சொல்றான். இவங்களாம் எங்க உருப்பட போறாங்க"- ஒருவர்.
"டேய் அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவிடா. எங்க பக்கத்து வீடுடா. ஏதோ கொஞ்ச நாளா சண்ட . இன்னைக்கு சமாதானம் ஆகிட்டாங்க போல"- மற்றொருவர்.
"அதுக்காக இப்படியா பொது இடத்துல"- ஒருவர்.
"சரி நீ இப்படி உன் மனைவிகிட்ட கொடுத்திருக்கியா?"- மற்றொருவர்.
"இல்ல டா?"- ஒருவர்.
"கொடுத்துபாரு....."- மற்றொருவர்.
பூக்கடையில்.
"தம்பி இரண்டு ரோசா கொடுப்பா"- ஒருவர்.....
" இந்த வயசுல உங்களுக்கு ரோசா எதுக்கு"-கடைக்காரர்.
"என் பொண்டாட்டிக்கு கொடுக்கத்தான் . காதலிக்க வயசு எதுக்கு. நீங்களும் வீட்டுக்கு கொண்டு போங்க." ஓருவர்.
"10 வருடமா பூக்கடை வச்சிருக்கேன். இது வரைக்கும் கொடுத்ததில்லை. இதுக்கு மேல நான் எங்க கொடுக்கிறது." என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் இரண்டு ரோசாவை எடுத்து தனது பைக்குள் வைத்தார் கடைக்காரர்.......
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.