பேசித் திரியும் மான்கள்
தோ தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்கு அப்பால் மிகப்பெரிய சமவெளியொன்று இருக்கிறதாம். அங்கேதான் மானுட வாழ்வின் பேருண்மைகளைப் பேசித் திரியும் மான்கள் சுற்றித் திரிகின்றனவாம் என்று என் பாட்டி என்னிடம் சொன்னவுடன் மானுட வாழ்வின் பேருண்மையென்று எதைச் சொல்கிறாய் பாட்டி என்று கேட்ட பொழுது....
குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கியிருந்தாள் அவள்.
இறந்து போன தாத்தா புகைப்படத்திலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் புகைப்படத்தின் கீழே ஏற்றப்பட்டிருந்த தீபம் காற்றிலாடாமல் நின்று நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. பாட்டியின் கன்னம் தொட்டுத்தடவி அவளின் தலை நிமிர்த்தினேன்...
கண்ணீரைத் துடைத்தபடி அவள் மெல்ல பேசத் தொடங்கினாள்.... அந்த சமவெளியில் சுற்றித் திரியும் மான்கள் பேசுவது போலவே கற்பனை செய்து கொண்டேன் நான் அல்லது எனக்கு அப்படி தோன்றியது. மெல்ல மெல்ல அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தை தூண்டி விட்டபடி பேசிக் கொண்டிருந்த பாட்டி எனக்கு தேவதையைப் போல தெரிந்தாள். அவள் பிராயத்தில் நிறைய கவிதைகளை எழுதுவாளாம், கனவுகளிலும் கற்பனைகளிலுமே தன்னை விரும்பித் தொலைப்பாளாம். இதுதான் இன்னதுதானென்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத இந்த நிதர்சனமற்ற வாழ்க்கையை சட்டை செய்யாமல் தன் போக்கில் வளர்ந்தவளைத்தான் இந்த கிராமத்தில் மின்மினிப் பூச்சியைப் போல கொண்டு வந்து போட்டிருக்கிறது காலம்.
இதுவரையில் வாழ்க்கையில் நடந்து முடிந்தன யாவும் பொய்களே என்று அவள் கூறிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே வீட்டுக்குள் எட்டிப்பார்த்த நிலவினை நான் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...
சூரியனைப் பார்த்தாயா மாறுவேடமிட்டு இரவிலும் சுற்றித் திரிகிறது என்ற பாட்டியை நான் ஊடுருவிப் பார்த்தேன்....
விளக்கொளியில் பட்டு அவளது மூக்குத்தி ஜொலித்துக் கொண்டிருந்தது....வெளுத்த தலைமுடியும் பளபளக்கும் கண்களையும் கொண்ட அவள் யுகங்களாய் காதலோடு ஜனித்து மரித்து ஜனித்து வந்திருப்பவள் என்று என் மனது சொன்னது....
இதோ ஆயிற்று பத்து வருடங்களுக்கு மேல்....
தாத்தாவுக்கு அருகே பாட்டியும் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்....ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருக்கிறது விளக்கு.....
தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்குப் பின்னாலிருக்கும் அந்தச் சமவெளியில் பேருண்மையைப் பேசும் மான்கள் இன்னமும் சுற்றிக் கொண்டுதானிருக்க வேண்டும்....
-தேவா சுப்பையா...