காதல் சொல்ல வந்தேன் - கற்குவேல் பா

கடைசி நொடிவரை ,
திக்கித் திணறியே வடித்த - உனக்கான
காதல் கவிதைகள் ;
அங்கொன்றும்
இங்கொன்றுமாய் - அறைமுழுதும்
சிதறிக் கிடக்கிறது ..

ஒருநூறு முறை ,
கண்ணாடி முன்நின்று - எனக்குள்ளே
சொல்லிப் பார்த்தாகிவிட்டது ;
ஆனாலும் ,
சரியாக ஒப்புவிக்க மறுக்கிறது - உன்
பிம்பம் ஏற்ற உள்மனது !

* *

மின்சார ரயிலில் ,
மூச்சுரசும் இடைவெளியில் நீ நிற்கையில் ,
உருவாகாத சலனம் ;
கடற்கரை மணலில் ,
உன்னோடு கைகோர்த்து விளையாடுகையில் ,
காணாத நடுக்கம் ;

உலகம் மறந்த ,
உன்னோடான அலைபேசி சினுங்கல்கலில் ,
எழாத பயம் ;
என அனைத்தும் - இன்று
மொத்தமாய் தொற்றிக்கொண்டது - உன்னிடம்
" காதல் சொல்ல வந்தபோது " !

* *

உனக்கு பிடிக்குமென்றே ,
கருநீலநிற சட்டையணிந்து வருகிறேன் ;
காதல் ஆத்திகனாய் ..
எப்படியேனும் ,
சொல்லியே ஆக வேண்டும் இன்று - நீ
ஏற்பாயா என்பது இரண்டாவது !

மனனம் செய்தவற்றை ,
தடுமாறியபடியே உன்முன் மொழிகிறேன் ;
தவறேதும் இருப்பின் , திருத்திவிடு ..
மௌனம் பூசிய - சிறு
புன்னகையோடு ஒருமுறை நோக்கு - என்னுள்
தவில் வாசிக்கட்டும் ஹார்மோன்கள் !

~ பா . கற்குவேல்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (14-Feb-16, 1:47 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 1879

மேலே