இப்படியும் வாழ்ந்து பார்ப்போமே

இப்படியும் வாழ்ந்து பார்ப்போமே!!!
-----------------------------------------------------

"மதுமிதா! என்ன யோசிச்சியா? ஒரு வாரம் ஆச்சு .... நவீன் அம்மா நேத்து போன் பண்ணிருந்தா.... அவன் அப்பாவும் என் கூட பேசணும்னு சொன்னாராம்... உன் அபிப்ராயத்தை கேட்டு அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டேன்....." அப்பா சொன்னது இவள் காதில் விழுந்ததோ இல்லையோ ஆனால் அவர் பேசிய விஷயமாகத்தான் யோசித்திருந்தாள் !!

இவள், தனியார் வங்கியில் பணிபுரிகிறாள்.... நிரந்தர உத்தியோகம்....நல்ல சம்பளம்....இவளுக்கு ஒரு அண்ணா....

" வாங்கோ ! நவீன் அம்மா இவர்களை வரவேற்றாள்...மதுமிதா மற்றும் பெற்றோர் அந்த பெரிய ஹோட்டலில் ஓரமாக இருந்த மேஜையில் அமர்ந்தனர்..... நவீன் மற்றும் அவன் அம்மா இவர்களை போனில் பேசி சாப்பிட அழைத்தனர் கல்யாண சம்மந்த விஷயமாக பேச..... நவீன் அப்பா லண்டனில் வேலை .. 3 வருஷம் முன்னாடி அங்கு கிடைத்தது... 5 வருஷ ஒப்பந்தம்... இவனுக்கு இங்கு பெரிய கம்பனியில் வேலை கிடைத்ததால் இவனுக்கு அங்கு போக இஷ்டம் இல்லை... அம்மா மட்டும் சென்றாள்.... 10 நாள் முன்னர்தான் இவன் கல்யாண விஷயமாக வந்து முடிவு செய்ய வந்திருக்கிறாள்... நவீன் குடும்பம் மதுமிதா தாத்தாவிற்கு தெரிந்தவர்கள்தான்.... ரொம்ப நெருக்கம் என்று எல்லாம் சொல்ல முடியாது...

நவீன் அம்மா ஆரம்பித்தாள்... " நான் இன்னும் ஒரு மாசம் இங்கதான் இருப்பேன்... இவன் கல்யாணம் நிச்சயம் ஆனதும்தான் போகணும்.... இவன் விவரம் எல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே சொல்லிட்டேன்... நீங்கள் செக் பண்ணிக்கோங்கோ.... நவீன் அவனுடைய சில எண்ணங்களை சொல்லத்தான் இங்கு வர சொன்னேன்.... "

" ரொம்ப சந்தோஷம்... நாங்களும் ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்தோம்.நல்லா இருக்கு.... என்ன பேசணும் சொல்லுங்கோ நவீன்" அப்பா கேட்டார்...

" எங்க அம்மா இரண்டு வருஷம் வரைக்கும் வொர்க் பண்ணிண்டிருந்தா... பெண்கள் வேலைக்கு போய்டு ஒரு குடும்பத்தை பராமரிக்கிறது என்பது சுலபமான காரியம் இல்லை... மேலோட்டமா பார்த்தால் ஒன்றும் தெரியப் போவது இல்லை. இதை நான் என் அனுபவத்தில் எங்க அம்மாவை பார்த்து தெரிஞ்சுண்டேன்...... அவா காலத்தில் ஆரம்பிச்சதுதான் இது... அதற்கு முன் ஒரு பெண் பொருளாதார தேவைக்கு மட்டும்தான் வேலைக்கு போனார் ள்.. அது சற்று மாறி என் அம்மா காலத்தில் ஆண்களின் ஆசையினால்தான் .... "வேலைக்கு போகிற பெண்தான் எங்களுக்கு வேண்டும்" என்று கூற ஆரம்பித்தார்கள்... இரண்டு சம்பளம் என்கிற ஒரு காலகட்டம் ...!! வாழ்க்கை சௌகரியத்தை பெருக்கிக்கொள்ள... என்று ஆரம்பித்தது.... அது பழகி
பெண்கள் கட்டாயம் தாங்களும் வேலைக்கு போக ஆரம்பித்தனர்..... ஆனால், அது ஒரு வைராகியத்தொடு இருந்தாலும் அதில் உள்ள வேதனைகள், கஷ்டங்கள், தியாகங்கள் எல்லாம் எவ்வளவு என்று எனக்கு எல்லாம் தெரியும்.... என்னை என் அம்மா கிரெச்ல் தான் விட்டாள், என் பாட்டியால் முடியவில்லை.... எனக்கப்புறம் என் தங்கை... மோசம்... அம்மா கதை கதையாக சொல்லிருக்கா... அவள் பட்ட துன்பங்கள், துயரங்கள்???? " சற்று நிறுத்தினான் நவீன்...

முதலில் சூப் வந்தது... சாப்பிட்ட பிறகு தொடர்ந்தான் " சாரி! உங்களை போர் அடிக்கனும்னு கூப்பிடலே... வாழ்கையின் எதார்த்தத்தை கூற ஆசைப்படறேன்.... நாங்கள் வளர, வளர, எங்கள் படிப்பு அப்படி இப்படின்னு அம்மா தொடர்ந்து வேலைக்கு போனா? அப்பாக்கு கொஞ்சம் மனவேதனைதான் ,,, இருப்பினும் வேறு வழி இல்லை.... தொடர்ந்தது.... இதைப் பார்த்து , பார்த்து என் அம்மா சொல்லுவா " ஒரு ஆண் வேலைக்கு போய் சம்பாதிக்கறது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை... ஆனால், ஒரு பெண் குடும்ப பாரத்தையும், உடம்பு உபாதையும் தாண்டி வேலைக்கு போய்ட்டு வருவது என்பது சிரமம்... உனக்கு நான் சொல்வது சரி என்று பட்டால் உன் மனைவியை உன் குழந்தை கொஞ்சம் பெரிதாகும் வரை வேலைக்கு அனுப்பாதே.... அவளுக்கு கொடுக்கும் பெரிய பரிசு அதுதான்.... " நான் நிறைய யோசித்தேன்... ஒரு முடிவிற்கு வந்திருக்கேன்.. என்னுடைய மனைவி கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கும் வரை வேண்டுமானால் வேலைக்கு செல்லட்டும்.. அது அவளுடைய விருப்பம்.. குழந்தை பிறந்ததும் ஒரு 5 வருஷங்களாவது அவளை நான் தாங்க வேண்டும்... அவளை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை... எனக்கு நிறைய சம்பளம்.. பொருளாதார கஷ்டம் இல்லை... அவள் மனமும், உடலும் நன்றாய் இருந்தால்தான் எங்கள் இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பது என் விருப்பம்.... மேலும், அந்த 5 வருஷம் அவள் பார்ட் டைம் வேலை வீட்டிலிருந்து செய்யலாம், அது அவள் இஷ்டம்... " ஒரு பெருமூச்சு விடு வதற்குள் அவர்கள் கேட்டிருந்த சாப்பாடு வரவே அதை ருசித்து சாப்பிட ஆரம்பித்தனர்...

அனைவரின் கவனமும் சிறுது நேரம் சாப்பாட்டில் இருந்தது.... மதுமிதா மட்டும் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் நவீனை பார்த்தாள்... அவன் பேசியது கொஞ்சம் கோபத்தை கொடுத்தாலும் யோசிக்கவேண்டிய ஒன்று என ஒரு பக்கம் மனசாட்சி சொல்லியது... சரி... அதை அப்புறம் பார்க்கலாம் என்பதுபோல் கையில் இருந்த பால்பேனியை ருசித்து சாப்பிட்டாள்... அவள் குழந்தைதனமாய் சாப்பிடுவதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தான் நவீன்....

மதுமிதாவிற்கு இது எல்லாம் புதியது... அவள் அம்மா வேலைக்கு போனதில்லை... எனவே அவளுக்கு அதன் விளைவுகள் எதுவும் பழக்கமில்லை....

" நவீன் பேசியதை தப்பா நினைக்காதீங்கோ.... அவன் மனசில் இருந்ததை சொல்லிட்டான்... அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்கிறது என் விருப்பம்... நீங்க நல்ல யோசிங்கோ... ஒருவாரம் ஆனாலும் பரவாயில்லை... கலந்து ஆலோசித்து நல்ல முடிவா சொல்லுங்கோ... " அம்மா நிதானமாகவும், அழுத்தமாகவும் சொன்னது மதுமிதாவிற்கு பிடித்திருந்தது....

இதோ.... மதுமிதா யோசனையில்....

" உங்க எண்ணம் என்னப்பா? " ....

"எனக்கு நவீன் சொன்னது தப்பு என்று தோணலே..... ஒன்று நல்ல புரியறது.... அந்தப் பையன் கட்டாயம் தன் மனைவியை நேசிப்பானு.... அவள் வாழ்க்கையில் சுகப்படனும்னு நினைக்கிறான்... அதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை... கட்டாயம் அவளை நல்ல பார்த்துப்பான்.... ஒரு அப்பாவா எனக்கு அதுதான் வேண்டும்....." அப்பா தெளிவாய் பேசினார்..

அம்மா தன பங்கிற்கு..... " நல்ல பையண்டி அவன்.... உன் கையில் தான் இருக்கு..... லட்டு கொடுத்தால் யாராவது வேண்டாம்னு சொல்லுவாளோ.? நீதான் முடிவெடுக்கணும்...... அதான் வீட்டிலேயே வேலை செய்யலாம்னு சொல்றாளே? "

" எனக்கு இன்னும் 2 நாள் டைம் வேணும்... யோசிக்கணும்.... " பட்டென்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள் மதுமிதா....

அப்பா பேப்பரில் முழுகினார்....அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்...

மொட்டை மாடியில் தனியாக அமர்ந்திருந்தாள் மதுமிதா... வட்ட நிலவின் அழகில் மெய்மறந்தாள் .... "எத்தனை நாட்கள் ஆச்சு இப்படி நிதானமாய் உட்கார்ந்து இந்த நிலவை ரசித்து... படிக்கும் காலத்தில் இங்கே தான் கதியாய் கிடப்பேன்... அப்புறம்? வேலைக்கு போக ஆரம்பித்ததிலிருந்து ..... இது எல்லாம் சூன்யமாசே..... எப்போதும் கம்ப்யூட்டர், லேப்டாப்? ஈ. மெயில் ...... என்றாகிவிட்டது.... 6 வருஷம் ஆனது என்னமோ 60 வருஷங்கள் ஆனால் போல் தோன்றது...... " மனம் வேதனைப்பட்டதை உணர்ந்தாள்....

நவீன் கூறியதில் தவறு என்ன? இருப்போமே? கொஞ்ச வருஷம் இப்படி , இயற்கை காற்று, நிலா, மேகம் ,, பச்சிளம் குழந்தை??? அஹ... அதில் ஒரு சுகம் தானே? ஒரு முடிவிற்கு வந்தாற்போல் உணர்ந்தாள்...

அந்த வாரத்தில் ஒரு நாள் ஒரு மாலில் மதியம் , நவீனும், மதுமிதாவும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர் சந்தோஷமாக....

அப்பா லண்டனில் இருந்து வந்தார்... கல்யாணம் முடிந்தது....

மற்றுமொரு குடும்பத்தாருடன் வருவேன்

மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (15-Feb-16, 11:40 am)
பார்வை : 363

மேலே