யுகத் தோன்றல் -கார்த்திகா

எந்த விதத்திலும்
தொல்லை தராத
அவளின் இருப்பு
பூவிதழ்களை வருடி
மென்மை சேர்த்துக் கொண்டிருந்தது

காலடியில் நெருக்கம் காட்டிய
சருகுகள் நொறுங்கி விட அவளால்
அவைகளை மெல்லக் கடந்துவிட முடியும்

காதோரம் சிரிப்பதாய்த் தோன்றுவதெல்லாம்
கற்பனையில்லை நிஜங்களும் நிழல்களும்
நினைத்து கொண்டிருப்பதில்தானே வாழ்கிறது

நீள் வானும் பால் வெள்ளை நிலவும்
மின்னும் நட்சத்திர மின்மினிகளும்
மூடிய கதவின் வழி ஒழுகும் வெளிச்சமும்
திறந்திட வேண்டியதில் யுகங்கள் முடிந்து
பிறவாத நிலை கண்டதில் நகங்கள் தோறும்
சுடர் தரும் வெளிச்சப் புள்ளிகள்

சமாதானங்களின் பெருமுயற்சியில்
நீட்டித்துக் கொள்ளும் நிமிடங்களின்
நீட்சி நேரத்தைத் தழுவி முக்தி கண்டதில்
ஈர முத்தங்களைப் பரிமாறி
எச்சில் தீர்த்துக் கொண்ட
ஜோடிப் பறவைகள்
நாளைய இரவின் குளிர் இதத்திற்கு
பனித் துளிகளை பரிமாறிக் கொண்டதாய்
அதனிடத்தில் புன்னகை வழியும் அவள்

காத்திருக்கிறாள்
மற்றுமொரு ஜென்மத்தின் திறப்பிற்கு...

எழுதியவர் : கார்த்திகா AK (17-Feb-16, 10:22 pm)
பார்வை : 136

மேலே