வேறு நிலாக்கள் 21 சிற்பி பாலசுப்பிரமணியம்
(சிற்பி ஐயாவின் அனுமதியுடன் சாகித்ய அகடெமி விருது பெற்ற ஒரு கிராமத்து நதியின் அற்புத சித்திரம் …..வேறு நிலாக்களின் சிறப்புக் கவிதைகளுள் ஒன்றாக .. இந்தக் குறிஞ்சிநிலக் காட்டு நதி அந்த கிராமத்து நதியின் கால்களை எப்போதும் நனைக்கும் )
மலையாளக் காற்று
***************************
காற்றே வா
மலையாளக் காற்றே வா
இளங்காலைப் போதில்
தெருவே மணக்கவரும் பூக்காரிபோல்
வாசனை போட்டு வா
தாய்வீடு வரும்
செல்வமகள் உனக்கு
அடையா நெடுங்கதவாய்த்
திறந்தே கிடக்கும்
பாலக்காட்டுக் கணவாய்
*
அரபிக் கடலின் நீலச் சுரங்கத்தில்
புதையல் எடுத்து
திமிரோடு கரையணைக்கும்
அலைச்சுகத்தை அள்ளிவா
சங்கம்புழைக் கவிதைகள் போல்
அடர்ந்து செறிந்த தேக்குமரக் காடுகளின்
தோளில் உராய்ந்து வா
தென்னை மரங்களைக் கதகளி ஆடவிட்டு
மிளகுக் கொடிகளோடு
கண்ணாமூச்சி ஆடிவா
பச்சைக் கிளிகளைப் போல்
பலா இலைகள் பறக்கவும்
மஞ்சள் கிளிகளைப் போல்
தாழம்பூக்கள் சிறகடிக்கவும்
விந்தைகள் செய்யும் மோகினி வா
கோடையில்
குருவாயூர்ச் சந்தனம் ஆவதும்
குளிர் காலத்தில்
காதலியின் பெருந்தனம் ஆவதும்
உன் வாடிக்கை
ஆடி மாதம் (உன் கற்கடக மாதம் )
தமிழ்நாடே வெயிலில் கிறங்கும்
அப்போது உன் தோளிலிருந்து
எம் கணவாய் வாசலில்
முகில் தங்கம் இறங்கும்..
அது உன் 'கால வர்ஷம்'
பாலக்காடு மணியின்
மிருதங்க ஆவர்த்தனமாக
எரிமேலிப் பேட்டைத் துள்ளலாக
பளிங்கு மழைப்பந்து
விளையாடி வருகிறாய்
தாகித்த எங்கள் மண்ணுக்கு
அம்பலப்புழைப் பால் பாயாசமாகிறாய்
*
என்னென்ன கொண்டு
வந்தனை காற்றே !
ரோமானியர்களோடு கைகோர்த்து
அன்றொரு காலம்
வெள்ளியும் தங்கமும்
விதைத்துப் போனாய்
விம்மியழும் தேவகியைக்
குலசேகரப் பெருமாளோடு
கூட்டிக்கொண்டு வந்தாய்
சேரமான் பெருமாளின்
ஈரச் சொற்களால்
ஆதியுலா நடத்தினாய்
காட்டு யானையின் தந்தம் போல்
தத்துவக் கூர்மைபூத்த சங்கரனை
இடுப்புப் பிள்ளையாய்
எடுத்து வந்தாய்
சாதி இருட்டைத் தகர்த்த
கேரளத்துஞாயிறு
ஸ்ரீ நாராயண குருவின்
தேவாரங்களோடு
திருவாசகங்களோடு
குருவின் ஆத்மதரிசனக் கண்ணாடியாய்
மலையாளக் கவிதையில் பிரதிஷ்டையான
குமாரன் ஆசானின் சிம்மகர்ஜனையையும்
ஏந்தி வந்து தந்தாய்
நீலக்கடலோரம்
கருத்தம்மா அழுதகுரல்
காயம் சுமந்து வந்தாய்
மனப்புண் தழும்பாகக்
கனராக கந்தருவன்
ஏசுதாஸ் சிந்தும் இசையமுதில்
கரைந்து கரைந்தெம்மைக்
காணாமல் போக வைத்தாய்
வைகை பெருகிவரப்
பெரியாற்றில் தேங்கிநின்றாய்
கோவைக் களைப்பாறச்
சிரறுவானியால் விசிறினாய்
பரம்பிக்குளத்தால் நெஞ்சில்
பச்சை பிடிக்க வைத்தாய்
*
இத்தனையும் செய்தாய்
மலையாளப் பூங்காற்றே !
என்ன கைம்மாறு செய்தோம்?
நீ வரும்
கணவாய்ப் பாதையில்
உன்னை வரவேற்கப்
பளிங்குக்கல் பதித்து
அதன் மேல்
பட்டு விரித்தது போல்
ஓர் இளம் நதியை ...ஆழியாற்றை
அன்போடு அனுப்பிவைத்தோம்.
அதிசயம் பார்..
நல்லோர்க்குச் செய்த உபகாரம்
பன்மடங்கு பெருகுமென்பார்
உனக்காக விரித்த நடை பாவாடை
அந்தச் சின்னஞ்சிறு நதி
கேரளத்தின் சரித்திரத்துச் சீதனமாய்க்
கலைநதியாய்க் குலதனமாய்ப்
பாரதப் புழையாயிற்று.
வள்ளுவன் சொன்னது போல்
தினைத் துணை நன்றியைப்
பனைத் துணை ஆக்கினாய்
வாழ்க நீ
மலையாளக் காற்றே !
- சிற்பி