உன் குலசாமி ஆகிடுவேன்

கண்ணுக்குள்ள உன்ன வெச்சென்
காதலிச்சு நெஞ்ச தெச்சென்...
காடு மலை சுத்தி வந்த,
காதலத்தான் காணோமே...
காட்டுப் பூ போலத்தான்
உன்நினைப்ப நட்டு வெச்சேன்- நட்ட
நினைப்பெல்லாம் சாஞ்சிடுச்சே,
மலை உச்சியில மாட்டிகிட்டேன்...
நீ இல்லாத பக்கத்துல
நானும் கூட தூரமடி...
தூரமெல்லாம் உசிரெடுக்க
உள்ளுக்குள்ள பாரமடி...
ஆகாயம் நழுவி வந்து
ஐயோன்னு கத்துதடி...
வெந்த புண்ணு வேதனல
இன்னும் கொஞ்சம் வேகுதடி...
என்ன சொல்லி இன்னும் சொல்ல..
சொல்லு சொல்லு நானும் சொல்ல...
உன் நெஞ்ச தொட்ட ஞாபகத்த,
எங்க கொண்டு நானும் கொல்ல...
காலையில கலியாணம்
மத்தியானம் புருஷன் ஊரு...
நோவு புடிச்ச கோழி போல
வீதியெல்லாம் தேடுறேனே...
மருதாடி வெச்சு விட்ட
மசமசப்பு தீரலியே...
அதுக்குள்ளே வேரோட
நட்டமரம் சாஞ்சுடுச்சே...
அரட்டி அழுது ஓய
ஆத்தாவ தேடுதடி...
அவளும் இல்லையடி..
அநாதை நாயானேன்...
வருஷம் பல ஓடும்..
வாழ்க்கை திசை மாறும்...
சொல்லியனுப்ப நான் மாட்டேன்..
ஆனாலும் வந்து பாரு...
செத்த பொணம் அழுகுமம்மா...
செத்தும் கனம் தாங்காது...
கத்த கத்த கூடுமம்மா
ஆசை மனம் தூங்காது...
அழுகை வந்தாலும்
படக்குன்னு அழுதுடாத...
பாவிப்பய உன் புருஷன்
மன்னிக்க மாட்டானே...
ஊரோடு கசங்கிட்டு
ஊரோடு போய்ச் சேரு...
குளிக்கையில அழுது தீரு- உன்
குலசாமி ஆகிடுவேன்...
உன் குலசாமி ஆகிடுவேன்...
கவிஜி