பாரதியும் யேட்ஸும் – ஓர் ஒப்புமைக் காட்சி

பாரதியை மேற்குநாட்டுக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைகள் பெருகி வருகின்றன. ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் போன்றோருடன் பாரதி ஒப்பிடப்பட்டுள்ளார். பாரதியை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுடன் (W.B. Yeats) ஒப்பிடவும் வாய்ப்புண்டு. எனினும் ஒரு வேறுபாடு. மேற்குறிப்பிட்ட அயல்நாட்டுக் கவிஞர்கள் அனைவரும் பாரதிக்கு முன் னோர்கள். யேட்ஸ், பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் இன்று ஒரு குறியீட்டுக் கவிஞராக அறியப்படுபவர். தாகூரின் மொழியாக்கங்களைச் செம்மைப்படுத்த உதவியவர். தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைத்தவர். எனினும் பாரதியுடன் இவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி் இவரை அறிந்திருந்தாரா என்பதும் கேள்விக்குரியதே.

யேட்ஸ் 1865 ஜூன் 13ஆம் நாள் தோன்றினார். 73 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 1939 ஜனவரி 28ஆம் நாள் மறைந்தார். பாரதிக்குப் பதினேழு ஆண்டுகள் முன்னர் பிறந்து, பதினேழு ஆண்டுகள் பாரதிக்குப் பின்னும் வாழ்ந்தவர். யேட்ஸ், 1885 முதல் 1836வரை 51 ஆண்டுகள் எழுத்துலகில் இருந்தவர். பாரதியின் எழுத்துக் காலமோ 1905 முதல் 1921 வரை ஏறத்தாழ பதினேழு ஆண்டு களே. (இச்சமயத்தில் பாரதிக்கு 20 ஆண்டுகள் முன்னர் பிறந்து அவருக்குப் பின்னரும் 20 ஆண்டுகள் வாழ்ந்த தாகூரின் நினை வும் வருகிறது.)
பாரதி தோன்றிய காலத்தில், இந்தியா போன்றே அயர்லாந்தும் ஆங்கில ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த நாடு. அந்நாடும் இந்தியா போன்றே தன் அடிமைத்தளையை வெறுத்தது. இந்தியா மேல் அனுதாபம் காட்டியது.

யேட்ஸின் கவிதைகளை அரசியல் கவிதைகள், குறிக்கோள் சார்ந்த கவிதைகள், ஒரு புதிய கனவுலகைநோக்கித் தப்பிக்கும் கருத்துடைய கவிதைகள், காதற் கவிதைகள், அனுபூதிக் கவிதை கள், நினைவுகூர் கவிதைகள் என்றெல்லாம் வகைப்படுத்துவர். இதே வகைப்பாடுகளை பாரதியின் கவிதைகளிலும காணலாம் என்பது கவனிக்கத் தக்கது.

இருவருமே தத்தம் வெளியீட்டுக் கருவியாகத் தன்னுணர்ச்சிக் கவிதை வடிவத்தை (லிரிக் வடிவத்தை)க் கொண்டனர்.

இருவருமே மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் நாடகவடிவத்தில் யேட்ஸுக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. நாவல்-சிறுகதை வடிவங்களில் அவருக்கு ஆர்வமில்லை. பாரதியோ, நாவல் சிறுகதை வடிவங்களிலும் ஆர்வம் காட்டியுள் ளார்.

யேட்ஸின் கவிதைகள் அவர் வாழ்நாளிலேயே 14 தொகுதிகளாக வெளிவந்தன. நாடகங்கள் 9 தொகுதிகள். இவை தவிரப் பல உரை நடை நூல்கள், திறனாய்வுகள். ‘தி விஷன்’ என்பது அவர்தம் முக்கிய உரைநடை நூல். பல மொழிபெயர்ப்புகளைப் படைத்தார். பல நூல்களைப் பதிப்பித்தார். ‘டென் பிரின்சிபல் உபநிஷத்ஸ்’ என்பது அவர்செய்த முக்கிய மொழிபெயர்ப்புகளுள் ஒன்று. ‘தி ஆக்ஸ்போர்டு புக் ஆன் இங்லீஷ் வெர்ஸ்’ அவரது தொகுப்பு நூல். பாரதியைப் போலவே யேட்ஸும் பகவத்கீதையால் கவரப்பட் டவர்.

இந்தியத் தத்துவஞானத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. யேட்ஸின் வாழ்க்கையில் மூன்று இந்தியர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஒன்று தாகூர். மற்றவர், மோகினி சட்டர்ஜி என்ற தியாசாபிகல் சொசைட்டி சார்ந்த இளைஞர். இன்னொருவர் புரோகித் ஸ்வாமி என்பவர். உபநிடதங்களை மொழிபெயர்க்க யேட்ஸுக்கு உதவியவர். பாரதிபோலவே யேட்ஸுக்கும் முக்தி அல்லாத புத்தமதம் கூறும் பரிநிர்வாண நிலை போன்றவற்றில் நம்பிக்கையில்லை. இவற்றிற்கு பதிலாகத் தாமே ஒரு தீர்வு காணமுடியுமா என்று பார்க்கவும் முயன்றிருக்கிறார். எனினும் இந்தியத் தத்துவங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு, அவரை ஒரு இந்தியக் கவிஞர் என்று கூறுமளவுக்கு நெருக்கத்தில் கொணர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக்கவிதை, கற்பனாவாத இயக்கத்தின் (ரொமாண்டிக்) பிடியில் இருந்தது. பின்னர் நடப்பியற் பாணி மிகுந்துவரலாயிற்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத்துவ இயக்கம் தோன்றியது. யேட்ஸ் இம்மூன்று இயக்கங்களிலும் தொடர்புகொண்டவர். அவருடைய முதற்காலக் கவிதைகள் ரொமாண்டிக் தன்மை கொண்டவை. பின்னர் நடப்பியல் பதிவுகளைக் கொண்டவை. இதன் பின்னர், முக்கியமாக மல்லார்மே, ரிம்போ, வெர்லேன் போன்ற ஃபிரெஞ்சுக் கவிஞர்கள் வழிவந்த குறியீட்டிய இயக்கம் சார்ந்த நவீனத்துவக் கவிஞரானார்.

தமிழில் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த நூற்றாண்டின் தொடக்கத் தில்தான் புனைவியப் போக்கு கவிதையில் தோன்றியது. புனைவியப் போக்கு நடப்பியப் போக்கு என்னும் இரண்டுமே இன்றைய கவிதையில் காணப்படுகின்றன. நவீனத்துவப் போக்கு குறைவு. பாரதியின் வசனகவிதைகூட, வால்ட் விட்மன் போன்ற முந்திய தலைமுறைக் கவிஞர்களின் பாதிப்பு என்று சொல்லக் கூடியதே தவிர, நவீனத்துவக் கூறுகள் கொண்டதல்ல. தமிழ்ப் புனைவியக் கவிதை, தமிழ் நாவலைப்போலவே, உலக இயக்கத் திற்கு ஒரு நூற்றாண்டு பிந்தியது.

எனினும் பாரதி, யேட்ஸ் போன்றே பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாக அமைந்தவர். யேட்ஸ், பழைய ரொமாண்டிக் மரபுக்குத் தான் கடைசிப் பிரதிநிதி என்பதை உணர்ந்தே பாடுகிறார்.
We were the last romantics…
Chose for the theme traditional sanctity and loveliness

பாரதியும் இப்படிப் பழைய மரபின் பிரதிநிதியாகவே தம்மை உணர்ந்தவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் தரலாம். பாரதியை யேட்ஸுடன் ஒப்பிடும்போது, இருவர்தம் புனைவியக் கவிதைகள், நடப்பியக் கவிதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். நவீனத்துவக் கவிதைகள் இருவர்தம் வேறுபாட்டையும் நன்கு சுட்டுவதாக அமைகின்றன.

கற்பனாவாத அல்லது ரொமாண்டிக் கவிதைகளின் ஒரு முக்கியமான அம்சம், அவை நடப்புலகிற்கு மாறான, குறிக்கோள் உலகு ஒன்றினைப் படைத்துக்காட்டுவதாகும்.. இது தன்னிச்சை யின்றியும், கவிஞரின் அகமன வெளிப்பாடாகவும் அமையலாம். தன்னைச் சுற்றியுள்ள நடைமுறை உலகின் கோரங்கள், கொடு மைகள், ஏற்றத்தாழ்வுகள், வேதனைகள் ஆகியவற்றைக் காணும் கவிஞன் அதிலிருந்துமாறுபட்ட, தொல்லைகளற்ற, இனிமையான, ஏற்றத் தாழ்வற்ற உலகினைக் காண விரும்புவது இயல்பே. நடைமுறையுலகில் உடனே இதனை நிகழ்த்தமுடியாத கவிஞன், தான் விரும்பும் இனிமையான உலகைமனத்திற் படைத்து நிறைவடைகின்றான். தப்பிப்புப் போக்கு (எஸ்கேபிசம்) என்று கூறு வது இதையே.

யேட்ஸின் கவிதைக் காலப்பகுதிகள் நான்கனுள், முதலிரண்டு காலப்பகுதிகளிலும் நழுவற்போக்கு அல்லது தப்பிப்புப் போக்கு மிகுந்தே காணப்படுகிறது, பாரதியைப் பொறுத்தவரை இறுதிவரை யிலுமே இப்போக்கு உண்டு. பாரதி குறுகிய காலமே வாழ்ந்து படைப்பில் ஈடுபட்டதால் தப்பிப்பு என்பது ஒரு குறையுமன்று. நடைமுறையுலகின் உக்கிரம் தாங்காதவர்கள் மிக எளிதில் அடை யக் கூடிய இயல்பே அது. ஏனெனில் புறஉலகின் உக்கிரங்களால் தனிமனிதன் சுட்டெரிக்கப்படுவது போல எந்தத் தனிமனிதனாலும் சமூகத்தை உடனடியாக மாற்றிவிட முடிவதில்லை.

யேட்ஸின் ஆரம்பக் காலக் கவிதைகளில் ஒன்றான The Lake Isle of Innisfree (இன்னிஸ் ப்ரீ ஏரித்தட்டு) என்ற கவிதையில்

இப்போதே புறப்பட விழைகிறேன் இன்னிஸ்ப்ரீக்கு
என்கிறார் யேட்ஸ். பரபரப்பும் சந்தடியும் மிகுந்த லண்டன் தெருக்களிலே நடந்து கொண்டிருந்த யேட்ஸுக்கு ஒரு கடையிலிருந்த செயற்கை நீரூற்றைப் பார்த்தவுடன் தன் இளமைக் காலத்தில் கழித்த இனிய சொர்க்கம் போன்ற இடம் நினைவுக்கு வருகிறது. ஒரு தவிப்பின் மனோஆவேசத்துடன் தொடங்கிவிடு கிறது கவிதை. உடனே அங்குச் சென்றுவிட வேண்டும் என்ற அவரது ஆற்றாமையைத் தொடக்க வரியான

I will arise and go now to Innisfree
என்பது காட்டுகிறது. அங்குச் சென்றதும் கவிஞர் விரும்புவது என்ன? ஒரு சிறிய மண்குடிசை கட்டிக்கொண்டு அமைதியாக நிம்மதியாக வாழ்வது ஒன்றே. அங்கே வெட்டுக்கிளிகள் பாடும் இனிய காலைத்திரைகளிலிருந்து அமைதி சொட்டிவிழும்.

And I shall have some peace there:
For peace comes dropping from the veils of the morning
When the cricket sings.

பாரதியின் ‘காணிநிலம் வேண்டும்’ பாடலுக்கும் இதற்கும் மிகுந்த அளவு ஒற்றுமையிருக்கிறது. காணிநிலத்தின் மையத்தில் ஓர் அமைதியான தனி மாளிகை வேண்டும். கேணியருகினில்
தென்னை மரம் கீற்றும இளநீரும்.
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும்
எனத் தொடரும் பாரதியின் விருப்பங்கள் யாவும் அமைதியின் ஆட்சியை வேண்டியே.
பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் என்று போகிறபோக்கில் ஒரு வீச்சாக பாரதி கேட்பதுபோலவே

Nine bean rows will I have there
A hive for the honey bee
என்று யேட்ஸும் கேட்கிறார். இருவர் தம் சொல்லாட்சிகள்கூட ஆச்சரியமான ஒற்றுமை கொண்டிருக்கின்றன.

பின்னர் ஒரு ஒளிப்படிமம். ஒளிப்படிமத்தைத் தொடர்ந்து ஒரு ஒலிப்படிமம்.

நல்ல முத்துச்சுடர் போல நிலாவொளி முன்பு வரவேணும். (பாரதி)

There midnight’s all a glimmer, and noon a purple glow (Yeats)

கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழவேணும்

And evening full of linnets’ songs
I hear lake water’s lapping with the sounds on the shore

இவ்வாறு நிகழும் மனவுணர்வின் ஒருமைப்பாடு நம்மைக் களி கொள்ள வைத்தாலும், நுணுக்கமான வேறுபாடுகளும் உள்ளன. அவைதான் இருவரது ஆளுமைகளின் தனித்தன்மைகளையும் நிறுவுகின்றன. யேட்ஸின் கவிதை தப்பிப்புக்கு மத்தியிலும் நிகழ்வுப் பாங்கைக் கொண்டுள்ளது. இன்னிஸ்ப்ரீ தீவு அவருக்குப் பொய்ம்மையில்லை, மெய்யானது. உண்மையான இடமே. யேட்ஸ் தனது தப்பிப்புப் போக்குக்கு உறுதுணையாகக் கடவுள ருளை வேண்டவில்லை. தானே செல்லுவது இயலும், அங்குச் சென்று வண்டுகள் முரலும் தனிமையில் வாழமுடியும்.

And I live alone in this beeland glade

ஆனால் பாரதி முற்றிலுமாகத் தப்பிப்புப் போக்கிற்கு ஆடபட்டவர்.

பாட்டுக்கலந்திட ஒரு பத்தினிப் பெண்ணும் வேண்டும். கூட்டுக் களியினில் கவிதைகள் கொண்டு தந்திட வேண்டும். அந்தக் காட்டுவெளியினில் ‘பராசக்தி நின் காவலுற வேண்டும்’. இந்த வையம் முழுவதையும் ‘பாட்டினால் பரிபாலிக்கவேண்டும்’ என்பன முற்றுமுழுதான கனவுகள். பாட்டினால் உலகைப் பரிபாலித்தல் என்றும் நிறைவேறாக் கனவென உணர்ந்ததனால் தான் பிளேட் டோ கவிஞர்களைக் கனவுகளை விதைப்பவர்கள் என்றுகூறி அவர் களை நாடுகடத்தச் சொன்னார் போலும். இவ்வாறு இரு பாக்க ளிலுமே கவிஞர்களாகத் தனிஆளுமையுடன் கவிஞர்கள் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். இதேபோல பாரதியின் அரசியல் சார்ந்த நடப்பியக் கவிதைகளையும், யேட்ஸின் நடப்பியக் கவி தைகளையும் ஒப்பிட்டுக் காணவழியுண்டு. பொதுவாகவே இருவர் தம் கவிதைகளையும் ஒப்பிட நிறைய வாய்ப்புகள் உண்டு என் பதை அவர்கள் தம் கவிதைப் போக்குகள் காட்டுகின்றன

எழுதியவர் : கே.பூரணச்சந்திரன் (23-Feb-16, 9:35 pm)
பார்வை : 336

மேலே