ஞான வாசிட்டம் - 1
வடமொழியில் யோகவாசிட்டம் என்றும் தமிழில் ஞான வாசிட்டம் என்றும்
வசிட்டரால் இராமபிரானுக்கு சொன்னதாக அறியப்பட்ட வாழ்வியலை
என்னால் முடிந்தவரை எளிமையான நடையில் எடுத்து வருகிறேன் ஒரு சிறு முயற்சியாக.
என்னை எழுத வைத்தவன் இறைவன்..அவன் விரும்பும் வகை இது தொடரும்..முடியும்!
...அன்பன்-
கருணா (பாலகங்காதரன்)
***********************************************************************************************************************************
நித்தியமானதும் நிலையானதுமான ஞான ஒளியே
அகத்திலும் புறத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது
எல்லா வடிவங்களிலும் எல்லா நேரங்களிலும்
அப் பேரொளியை எந்நாளும் வணங்கித் துதித்தலே பேரருள் !
..
அரிய சத்துவம் நிறை இராமனும்
கொடிய உலகியல் தனில் உழன்றதேன்
எனும் பெருவினாவினை பரதுவாஜரும்
வான்புகழ் வான்மீகரிடம் வினவிட..
விடை பகர்ந்தார் ..வான்மீகரும் இவ்வாறே:
..
நீல நிறமுடைத்து வானம் என்ப
நிஜமன்று ..காட்சிக்கு நீலவண்ணம்
தெரிவதொரு மாயை -அவ்வண்ணம்
பரம்பொருளில் இல்லாத மோகம்
இருப்பதாய் காணப் படுவதே ஈது!
..
தன்னுளே தானே தரிக்கும் எண்ணம்
மனதின் இயல்பினையும் மாற்றி
மாயைதனையே நிஜமென நம்புதலை
மறு நொடியே மறத்தல் நிருவாணம்
எனும் ஏகாந்தப் பேரின்ப நிலை !
..
அப்பேரின்பநிலை பெரு ஒளிவெள்ளம்
தானாய் பிறப்பெடுக்கும் ; யாராலும்
தரப்படுவதன்று.நூல்வழியும் வாராது
அறியாமை பாழ்கிணற்றில் உழலுவார்
காணார்;உணரார்;உய்த்திடார்-அவ்வொளியை !
..
குறிப்பு: மனோ வாசனைகள் மற்றும் அவற்றின் தன்மைகளை நோக்கி அடுத்து தொடர்கிறேன்