நகர நரக வாழ்க்கை
நாட்களோடும் நாளிகைகளோடும் நாளாந்தம் சண்டையிட்டு
நகருகின்ற எம் வாழ்க்கை நகர (நரக) வாழ்க்கை
இழைப்பாற நேரமின்றி இயல்புநிலை தொலைந்தவராய்
இரவோடும் பகலோடும் உறவாடும் ஒரு வாழ்க்கை
விரும்பாத இவ்வாழ்க்கை விதி என்று போனதனால்
சதி செய்த காலமதை சபித்தபடி ஒரு வாழ்க்கை
சூழ்ந்திருக்கும் மாடிகளில் யாரிருப்பார் யாரறிவார்
அறியாத அன்னியராய் ஆண்டு பல வாழ்ந்திருப்பார்
அதிகாலை வேளையிலே அலுவலகம் சென்றிடுவார்
மதிமயங்கும் மாலையிலே மீண்டும் மனை வந்திடுவார்
தத்தமது காரியத்தை தயங்காமல் செய்திடுவார்
தனியறையின் தனிமையிலே தவமிழைத்து துயின்றிடுவார்
பட்டணத்துப்பாணியிலே பல கதைகள் சொல்லிடுவார்
பாட்டிசொன்ன கதை மறந்து களையிழந்து நின்றிடுவார்
நெட்ட மரம் நெடுத்தது போல் நிண்டு நீளும் பொருளாதாரம்
பொட்டல் வெளிகளாய் பொழுதுகளை மாற்றிவிடும்
இலையிழந்த கிளைகளைப்போல் இருண்டுபோகும் இரவுகளில்
ஈரம் சொட்டும் நினைவுகளால் இழையோடும் ஊர்வாழ்க்கை
அம்மாவும் அப்பாவும் அக்காவும் அண்ணாவும்
அயலவர் எல்லோரும் அருகருகே அமர்ந்திருந்தோம்
ஊரோடு ஒன்றுகூடி உளமாற உறவாடி
கண்ணியமாய் கதைபேசிக் கழித்திருந்த நாட்களெல்லாம்
காலத்தில் கரைந்து போக இன்றிந்த
நகரத்தில் (நரக) வாழ்கிறோம் நவீனத்தில் வாழ்கிறோம்