சீனி டப்பா மீசைக்காரன்
பல்லாங்குழி ஆடையில
பதினாறு வயசிலயே
பரி கொடுத்தேன் என் மனச,
பாவி மக புரியலயா....
பவுசா பவுடர் போட்டு
பாதக் கொலுசு மாட்டி
பாலமுருகன் தியேட்டருல
ஊரோடு படம் பாத்த...
உன்னத்தான நான் பாத்தேன்...
ஊரெல்லாம் தேடினாலும்
உன்னப் போல யாருமில்ல...
உள்ளுக்குள்ள உதறுதடி- நீ
உசிரள்ளி போன புள்ள...
உச்சி வெயிலுல
கால்கடுக்க நீ போகயில
மனசெல்லாம் பதறுதடி,-உன்
தலை மேல விறகு சுமை...
உன்ன சுமக்க நானிருக்கேன்
ஒய்யார நட போடு....
உள்ளம் குளிரும்படி ஒத்த
சொல்லு தந்தா போதும்...
தெரிஞ்சும் தெரியாம நீ
பாக்கறது தெரியுமடி...
தெரிஞ்சே கேக்கறனே
களுக்குன்னு சிரிச்சா என்ன...
நிலாவ புடிச்சு தர்றேன்
நெத்தியில பொட்டு தர்றேன்
நிஜமா சொல்லுறேன்டி...
நெல்லு சோறு பாதி தர்றேன்...
ஜென்மம் ஏழு வந்தாலும்
இந்த ஜீவன் போனாலும்
சத்திமா சொல்லுறேன்டி
மொத்த வாழ்க்கை நீ தான...
செக்கசிவப்பி நின்னாலும்
சித்தம் கலங்கி போனாலும்
மூக்குத்திக்காரி உன்ன
மட்டும்தான நினைப்பேனே...
சீக்கிரமா சொல்லிபுடு- இந்த
சீக்கு தீரலயே...உன்ன
சிணுங்காம பாத்துக்கறேன்...நான்
சீனி டப்பா மீசைக்காரன்....
கவிஜி