உயிர் மெய் மொழியே
எங்கள் மொழியே ! நாங்கள் உந்தன் வழியே !
இருவிழியே ! எங்களுக்கும் உந்தன் அமிழ்மழை பொழியேன்!
தொண்மை முன்மை நுண்மை திண்மை
எண்மை ஒண்மை இனிமை தனிமை
இளமை வளமை தாய்மை தூய்மை
மும்மை செம்மை இயன்மை வியன்மையென
ஈரெட்டு செவ்வியல் தன்மையால் மனச்செவியில்
நுழைந்து நாவில் மலர்ந்த மாமொழியே வாய் தாய் மொழியே
பேச்சி மொழியாய் ஆட்சி மொழியாய்
எழுத்து மொழியாய் செழித்தமொழியாய்
பயிற்றுமொழியாய் ஊற்றுமொழியாய்
நீதி மொழியாய் ஆதி மொழியாய்
உருமாறி சொற்சுவை ஏறி
நடுநிலையாக பொதுமறையாக
பூமணமாக பைங்கனியின் கானகமாக
இயற்கையோடு இயைந்த இன்ப தனித்தாயே
செயற்கையாகும் உலகத்திலும் நீ இனித்தாயே
உன்னைக் கண்டு அழியாதாசைக் கொண்டு
வண்டாக உனதுயிர்மெய் தேனுண்டு
மண்டாக இருந்த நானின்று! கவிக்
கன்றாக முளைத்ததில் உனக்கே முழு பங்குண்டு
நன்றாக என்னுள் நீ வந்து நின்று
வென்றாயே உணதியலிசை நாடகத்தால்
எனதையங்களை வென்று
என்றென்றும் சொல்வேன்
நீயேதான் எனதெழுத்தென்று
முன்சென்று நில்வேன்
நீயேதான் தர்மத்தின் சிரமென்று
வையத்தின் வலியதோர் கரமென்று