காந்தி -----பற்றி ஜெயமோகன்

காந்தியின் உலகியல் என்பது சுயஒறுப்பு சார்ந்தது. காமமும் காதலும் சுயமலர்தல் சார்ந்தவை. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. ஆகவே காந்தியம் அடிப்படையிலேயே காதலுக்கும் காமத்துக்கும் எதிரான ஒரு தரிசனம். அதன் ஆகப்பெரிய குறைபாடே அதுதான்.

நித்ய சைதன்ய யதி அவரது கட்டுரைகளில் காந்தியை கடுமையாக நிராகரிப்பது இந்த விஷயம் குறித்தே. காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நித்யா இருந்தபோது ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் இடையே காதல் இருப்பதாக ‘புகார்’ காந்தி வரை சென்றது. காந்தி பிரார்த்தனைக்கூட்டத்தில் அந்தப்பெண்ணை எழுப்பி நிற்கவைத்து பொது விசாரணை செய்தார். தேசசேவைக்கு வந்த இடத்தில் புலனடக்கம் தேவை என்று உபதேசம் செய்து உண்ணாவிரதம் இருந்து தன் தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய ஆணையிட்டார்.

நித்யா அந்தப்பெண் கண்ணீருடன் கூசிக்குறுகி நின்ற கோலத்தை வர்ணிக்கிறார். அந்தப்பெண்ணின் மனத்தில் நீங்காத ஒரு வடுவாக அந்த நிகழ்ச்சி பதிவாகியிருக்கும். அவளுடைய நுண்ணுணர்வுகள் கெட்டிப்பட்டு போகும். ஒருவேளை அவள் வீம்பாக எதிர்மறைச்செயல்களில் ஈடுபடலாம். அல்லது அப்படியே குறுகி தனக்குள் ஒடுங்கிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் அவளுக்கு காமத்தையும் காதலையும் அனுபவிப்பதில் நிரந்தரமான ஒரு குற்றவுணர்ச்சி உருவாகிவிட்டதென்பது உறுதி.

ஆனால் அதேசமயம் காமத்தை குற்றவுணர்ச்சி இல்லாத ஒரு வெளிப்படைத்தன்மையுடன் பேசுவதென்றால் அதன் விளைவுகளே வேறு. உள்ளே உறைந்திருக்கும் எத்தனையோ தடைகளை தாண்டி ஆன்மா விடுபடும் தருணம் அது. ஆனால் காந்தி அதை பகிரங்க குற்றவிசாரணைதான் செய்தார்.

அதற்கிணையான ஒரு நிகழ்ச்சி நித்யாவின் குருகுலத்தில் நடந்தது.நித்யாவின் தோழரும், நடராஜகுரு அவரது அடுத்த வாரிசாக எண்ணியிருந்தவருமான இளம்துறவி வினய சைதன்யா திடீரென ஆசிரமத்துக்கு வந்திருந்த இளம்பெண்ணிடம் காதல்வயப்பட்டார். அந்த தகவல் நடராஜகுருவுக்கு சிலரால் புகாராகக் கொடுக்கப்பட்டது. அவர்களை அழைத்து பேசியபின் ஆடல் பாடலுடன் அவர்களின் திருமணத்தை நடராஜகுரு நடத்தி வைத்தார்.

காந்தி குறைந்த பட்சம் அந்தப்பெண்ணை அவரது அறைக்குள் கூட்டிவந்து பேசியிருக்கலாம். ஆனால் அதுகூட அவருக்கு உறைக்கவில்லை. ஏன் என்றால் அவரைப்போல தூய்மைவாத நோக்கு கொண்டவர்களுக்கு காமத்தை சுயவதை மற்றும் துன்பம் மூலமே ஒடுக்க முடியும் என்ற எண்ணம்
இருந்தது. ஆகவே முடிந்தவரை கடுமையாக, அதிகளவுக்கு அவமானத்தையும் துன்பத்தையும் அளிக்கும்விதமாக, அந்த விஷயத்தை ஒறுப்பதற்கே அவர்கள் முயல்வார்கள்

காந்தி தனக்கே கூட அதைத்தான் செய்துகொண்டார். தான் தவறுசெய்ததாக உணர்ந்ததும் பொது மேடையில் அதை முன்வைத்து தன்னையே குற்றவிசாரணை செய்துகொண்டார். அதன் மூலம் யாருக்கு என்ன மனச்சிக்கல் உருவாகும் என அவர் யோசிக்கவில்லை. காந்தியின் கொள்கைப்படி காமம் என்பது ஓர் அழுக்கு. அதைக் களைவதே சுயத்தூய்மை. அதற்குரிய சிறந்த வழி வெளிப்படையாக இருப்பதுதான்.
இந்த மனநிலையை காந்திக்கு அளித்தவை இரு பெரும் மரபுகள். ஒன்று சமணம். இன்னொன்று கிறித்தவம். சமணம் காமத்தை மூன்று மன அழுக்குகளில் முதன்மையானதாக சித்தரித்து [காமம் குரோதம்,மோகம்] மொத்த ஆன்மீகமும் காமத்துக்கு எதிரானதே என்று வலியுறுத்திய ஞான மரபு. அப்பட்டமாக வெளிப்படையாக இருப்பதே காமமீட்பு என்று சொன்னது அது. ஆகவே சமணத்துறவிகள் முழுநிர்வாணமாக இருக்கிறார்கள்.

காம ஒறுப்பு என்பது கிரேக்க ஒறுப்புவாத மரபுக்கு இந்தியாவில் இருந்தே சென்றிருக்கவேண்டும். வணிகர் மதமான சமணத்தின் செல்வாக்கு வணிக வழிகளில் எல்லாம் உண்டு. பட்டுவணிகப்பாதை வழியாக மைய ஆசியாவிலும் கிரேக்கத்திலும் ரோமிலும் அதன் கருத்துக்கள் சென்று சேர்ந்திருக்கலாம். உலகியல் இன்பங்களை ஒறுப்பதே ஆன்மீக நிறைவின் வழி என்று ஒறுத்தல்வாதிகள் [Gnosticism] நம்பினார்கள்

அவர்களில் இருந்து அந்த நம்பிக்கை கிறித்தவ மரபுக்குள் ஆழமாக ஊடுருவியது. ரோமாபுரித்திருச்சபைக்கு மாற்றாக இருந்த ஒறுத்தல்வாதக் [Gnostic Christians] கிறித்தவக்குழுக்களிலேயே சுய ஒறுத்தல்

ஒரு ஆன்மீக வழியாக இருந்தது. பின்னர் ரோமாபுரிக்கிறித்தவம் அதை ஏற்றுக்கொண்டது. துறவு என்பது திருச்சபைக்குள் ஓர் அதிகாரமாகவே உருவெடுத்தது.

காந்தியின் துறவுவழிக்கு இந்த இரு மரபிலும் தொடக்கங்கள் உண்டு. புலனடக்கத்தை அவர் தனக்கான பாதையாக வகுத்துக்கொண்டார். அது அவருக்கு அபாரமான ஆற்றலை அளித்தது என்பதிலும் ஐயமில்லை. ஆனால் காந்தி அதை ஒரு முழுமையான வாழ்க்கை முறையாக தன் மாணவர்களுக்குப் பரிந்துரைத்தார். அதை சுதந்திரப்போராட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்றாக ஆக்கக்கூட முயன்றார்.
ஆனால் காந்தியின் மாணவர்கள் அதைக் கடைப்பிடிக்க முடியாமல் தத்தளித்தார்கள். ஆகவே கடுமையான குற்றவுணர்ச்சிக்கு ஆளானவர்கள் உண்டு. இளம் வயதின் இலட்சியவேகத்தில் , எதிர்பார்ப்பில் பிரம்மசரியத்தை பலர் கடைப்பிடித்தார்கள். ஆனால் நடுவயதான, மணமான காந்தியர்கள் அவதிப்பட்டார்கள். எம்.ஓ.மத்தாய் அவரது சுயசரிதையான நேரு யுக நினைவுகள் நூலில் அரசியலில் லீடுபட்ட காந்தியர்களில் மொரார்ஜி தேசாய் மட்டுமே பிரம்மசரியத்தை உண்மையில் நம்பினார் என்கிறார்.

காமத்தை கையாள்வது மிகக் கடினம். ஏனென்றால் அதனுடன் நுட்பமான ஏராளமான உணர்ச்சிகள் ஊடு கலந்துள்ளன. அவற்றுக்கு மிகவிரிவான பண்பாட்டுப்பின்புலம் உள்ளது. அதை கறாராக அணுகுவது வன்முறையாகத்தான் ஆகும். நல்லெண்ணம்கொண்ட கனிவேகூட எதிர்மறை விளைவுகளை உருவாக்கலாம்

எழுதியவர் : (26-Feb-16, 6:52 am)
பார்வை : 101

மேலே