கருத்து பேச்சு சுதந்திரம் -- கட்டுரை படித்தது
பொதுவெளியில் போர்னோ பார்ப்பதை கருத்து சுதந்திரமாக கருத முடியாது: உச்ச நீதிமன்றம்
கிருஷ்ணதாஸ் ராஜகோபால்
பொது இடங்களில் போர்னோகிராஃபி (ஆபாச) படங்களைப் பார்ப்பதை தனிநபரின் கருத்து, பேச்சு சுதந்திரம் எனம் எடுத்துக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
போர்னோ வெப்சைட்கள் அதாவது ஆபாச இணையதளங்களை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, எஸ்.கே.சிங் இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.
இன்றைய விசாரணையின்போது, ஆபாச இணையதளங்களை தடுக்க தனிநபர் சுதந்திரம் பெரும் தடையாக இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் "எது தனிநபர் சுதந்திரம்? பொது இடங்களில் போர்னோகிராஃபி (ஆபாச) படங்களைப் பார்பதையோ அல்லது பிறரை ஆபாசப் படம் பார்க்குமாறு வற்புறுத்துவதையோ தனிநபரின் கருத்து, பேச்சு சுதந்திரத்தின் வரம்புக்குள் அனுமதிக்க முடியாது.
சிறார் போர்னோகிராஃபியை முற்றிலுமாக தடுக்க வேண்டும். ஆபாசம் எது, ஆபாசத்தை எட்டாத எல்லை எது என்பதை மத்திய அரசே வகுக்க வேண்டும். சிலருக்கு மோனோலிசா புகைப்படம்கூட ஆபாசமாக தோன்றலாம். எனவே, எது ஆபாசம் என்பதை நிரணயிக்கும் சவாலான பணியை மத்திய அரசு செய்ய வேண்டும்" என்றனர்.
ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பும், இன்டர்போல் துணையும் தேவைப்படுவதால் அரசுக்கு நீதிமன்றமும் உதவ வேண்டும் என அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பின்கி ஆனந்த் தெரிவித்தார்.
ஆபாசம் என்பது தனிநபர் பார்வை சார்ந்தது என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டபோது, நீதிபதிகள் அதை கடுமையாக மறுத்தனர்.
நீதிபதி மிஸ்ரா கூறும்போது, "ஆபாசம் எது என்பதை சட்டம் அங்கீகரித்துள்ளது. பலருடனான பாலியல் உறவு, பாலியல் வக்கிரம், மனப் பிறழ்ச்சி, வாயரிஸம் ஆகியன ஆபாசம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போர்னோ படங்களில் உள்ளன. இவை அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டம் 292-ன் கீழ் தண்டனைக்குரியது என்பதால் போர்னோ ஆபாசமே" என்றார்.
உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மகாலட்சுமி பாவனி, சில பள்ளி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளை பாலியல் வக்கிர படங்களை பார்க்க வற்புறுத்துவதாக கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் "குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வக்கிரங்கள் நடைபெறும்போது, பேச்சு சுதந்திரம் எங்கள் அடிப்படை உரிமை என யாரும் கோரமுடியாது. சுதந்திரம் என்ற பெயரில் தேசத்தின் குழந்தைகள் வக்கிரங்களுக்கு ஆளாவதை அனுமதிக்க முடியாது" என்றனர்.
மேலும், இணையத்தில் போர்னோகிராஃபி படங்கள் எளிதாக கிடைப்பதை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பதிலளிக்குமாறும், பொது இடங்களில் போர்னோ பார்ப்பதற்கு தடை விதிப்பது தொடர்பாகவும் பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.