சூனியப் பெருவெளி

உயிரின் சங்கமம்
உணர்வின் சங்கமம்
அத்தனையும் அறியவைத்தாய்
அருகிருந்து உணர்ந்தபோது
உயிர்வலி உணர்வும்
உடலின் அடக்கமும்
இயல்பாய் பரிசளித்தாய்
வனாந்தரத் தனிமையிலே
அமைதி தேடி
அகல்கயிலே
அடங்கிக் கொண்டேன்
அலை கழன்ற ஆழியாய்
பின்னிரவில் முன்னிறுத்தும்
நட்சத்திர நீட்சியாய்
ஆழ் மன ஓடையிலே
ஆர்பரிக்கும் நிதர்சனங்கள்
நிதர்சனத்தின் விம்பங்களை
நிரந்தரமாய் நிலைக்கவிட்டு
நீ மட்டும் சென்றுவிட்டாய்
நீண்ட ரயில் பாதையிலே
வருடுகின்ற நினைவோடும்
வளையாத வலியோடும்
நிசப்த நடையுடன்
நீண்ட வழிப் பயணமதில்
கண்களில் கண்ணீரில்லை
முகத்திலும் வலியில்லை
உள்ளம் மட்டும் அழுகிறது
ஊமையின் உணர்வுகளாய்
ஒரு சூனியப் பெருவெளியில்