இதன் பின்னொரு நாளில்

இதன்
பின்னொரு நாளில்
வெகு காலத்தின் பின்

குலதெய்வ
நேர்த்திக் கடனோ
பெருசொன்றின்
மரணப் படுக்கையோ

மீண்டுமுன்னை
நம் கிராமத்து
மண்மிதிக்கச் செய்யும்

தோளில் சாய்ந்த
உறக்கம் கலையா
பிள்ளையை
இன்னுமொருமுறை
இழுத்து தோள்சேர்த்து
நகரும் உன்னை

நல விசாரிப்புகள்
தொடரும்
வீடு வரும் வரை -

உறவும் நட்புமென
கேள்விகள் சூழ
புன்னகை பதில்களினூடே
ஒரு முறை கூட
என் நினைவு வராது
உனக்கு

காரணம்
என் பெயர் தந்த
பரவசங்கள் மறந்திருக்கும்

தனிமைகளிலான
நம் முத்தங்கள்
சுவடுகளேதுமின்றி
மறைந்திருக்கும்

எனது புதைகுழி
மண்மேவி
காலம் பலவாயிருக்கும்

எழுதியவர் : (3-Mar-16, 5:57 pm)
Tanglish : ithan pinnoru nalil
பார்வை : 70

மேலே