சிந்திய தூரிகை உதித்த ஓவியம்
வற்றிய குளம்
காற்றிலாடிய அழுக்குத்துணிகள்
மேகம்பார்த்து சலவைத்தொழிலாளி
முன்னோர் நலம் விசாரிப்பு
மயக்கத்தில் மனிதஜென்மம்
திராட்சைக்கருகில் மது
பல்லுடைத்துப் போனது
மாலைநேரப் பதார்த்தம்
கோபம் அதிகம் போட்டிருப்பாளோ!
வண்ணமிகு புதுப் புடவை
உடுத்திப் பார்க்க யாருமின்றி
வானவில்..
தேர்தல் வாக்குறுதி
ஆளுக்கொரு அமைச்சர்பதவி
குடும்பஅட்டையில் குவார்ட்டர்
வெட்கப்படுவது மறந்துபோனது
மல்லிகைப்பூ கருகிப்போனது
ஐம்பதாவதுமுறையாய் பெண்பார்க்கும் படலம்
வெள்ள நிவாரணம்
பல்லிளித்துக் கிடந்தது ஸ்டிக்கரில்
அரசியல் நிர்வாணம்
நீருக்காய் உறுஞ்ச உறுஞ்ச
வலியில் துடிக்கிறதோ பூமி
நிலநடுக்கம்
உப்பில்லா பழைய சோறு
உப்புப்போட்ட ஊறுகாய்
ஏழை வாழ்க்கை
தோட்டமெங்கும் பசுமை
பார்த்த விழிகளிலோ வெறுமை
நேற்று நட்டசெடி பூக்கவில்லை
செய்யாத குற்றம்
தவறாய் மட்டுமே கொற்றவன்
தண்டனைக்கைதி வாக்காளன்
பேச்சே மாறாதவர்
அதே தீர்மானம் இத்தேர்தலிலும்
ஜெயித்தால் தானே...
நீண்ட கவிதை
நீ விட்டாய் பெருமூச்சு
எனக்கு ஹைக்கூ...