உயிரே ப்ரியத்தமா
உயிரே ப்ரியத்தமா
=================
அன்று முழுப்பவுர்ணமி நாள்,,,
உனக்கான கவிதையை
என் எண்ணம்
அன்றுதான் இறுக்கத்துடன் பிரசவித்தது
உன்னை பிடித்திருப்பதை
தாமதித்தாவது சொல்லிவிட்டேன்
என்னும் சந்தோசம் மட்டுந்தான் எனக்கு ,,
ப்பார்த்த அன்றே சொல்லியிருந்தால்
நானும் பலர்ப்போல்
உன்னால் விலக்கப்பட்டிருப்பேன்
ஏதோ உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாவது
சந்தோஷந்தானே
உன் ஆடையில்லாத பொழுதின் தனிமையில்
என் கண்களைப் பொற்றி
உன்னருகேதானே நின்றிருந்தேன்
ஆனால் என் உஷ்ண மூச்சுதான்
உன் நிர்வாணத்தை
உடுத்தியிருந்தது அன்று,,
நீ உணர்ந்திருப்பாயா அறியேன்,
அப்பொழுதும் என் கண்கள்
உன் நிர்வாணத்தின் முன்னால் மூடியேதான் கிடந்தன
எத்தனைப்பேருக்கு உன்னை இரசிக்கத்தெரியும்
என
எனக்குத்தெரியாது
ஆனால்
உன்னிடம் இரசிக்க
நிறைய இருக்கு என்னிடம் ம்ம்
சிறுநேரம் ஒளிசிந்தும் மின்மினிபோல் அழகாய் மிளிர்ந்துவிட்டுபின்
ஆயுள் முடிய விரும்புகிறேன்
விட்டிலாய் ஆபத்தைச்சுற்றிவிட்டு அன்றிரவு மட்டும்
வாழ்ந்தாலே போதும் என்றிருப்பேன்
விடியலில் வேறொரு பிறவி எடுத்து வருவேன்
நிறங்கள் உதிர்க்கும் ஒரு வண்ணாத்திப்பூச்சியாகவோ
இளந்தளிர்கள் கால் படரும்
ஒரு பரந்த புல்வெளியாகவோ
அடுத்தநொடியின் யாரோவுடைய அலும்புதலிற்காகவே
கிளையில் தொடர்புவிட காத்திருக்கும்
உதிரா மலர்களாகவோ வருவேன்
உன் கனவில் காற்றுவீசி
பூப்பூக்கச்செய்த ஆம்பல் மலரை சலனிக்கச்செய்து
இனி பறிக்கப்போவதில்லை
ஏதும் பேசத்தெரியாதவள்போல் புருவங்களால் பேசி
எல்லோரையும் பேச வைக்கிறாயே ம்ம்
இன்னும் இப்படிச்செய்து எத்தனைக்கொலைகள்
செய்யப்போகிறாய்
இப்போதாவது சொல்
இந்த முத்தங்களை ஏற்றுக்கொள்ளவேனும்
என் செய்கைகளில் நீ
மயங்கிக்கிடப்பதாக
நடிக்கப்போகிறாயா இல்லையா என்று
சரி சரி இன்றொருநாள் பொறு
என் முகத்தை
முழுச்சவரம் செய்துவிட்டு வருகிறேன்
என் மீசை வன்முறையால் நீ தவிப்பாயானால்
என் எல்லா நாளின் கனவுகளிலும்
ஒரு அப்சரஸ் வந்து சொல்கிறது
ஏவாளின் குணமுடைய
விலைமதிக்க முடியாதவளை விட்டுவிடாதே என்று
கொஞ்சம் இலாவகமாக ஈர்க்கோதுகிறேன் வா
என் கதகதத்த அணைப்பிற்குள்
உன் ரகசியங்களை அவிழ்த்துவிட்டு கன்னங்களைப்பதி
அன்றைய இதமான இரவில்
நானுன் நம்பிக்கைக்குறியவன் ஆகிவிடுகிறேனே :)
இறக்கமில்லாமல் தூங்கச்சொல்கிறாயே
உன்னோடு கதைக்கக் கிடைத்த
இந்த சந்தர்பத்தை
எப்படி இழக்கநேரிடுவேன் ம்ம்,
நானொரு உறக்கத்திருடன் பார்த்தியா ம்ம்
உன் உறக்கம் களவாடிட்டேன்
ஆனாலும் சொல்லேன்
உன் பெண்மை களவாடினேனா என்று ம்ம்
நாம் எப்போதாவது பிரிந்துவிடுவோம் என்றுத்தெரியும்
விதி நம்மை இந்த குறுகிய காலத்தில்
எப்படி சந்திக்கச்செய்தது ,,
நீ என்னோடும் நான் உன்னோடும்
எதையாவது மிச்சம் வைத்துபோகிறோமா ம்ம்,,
நீ கீதைப்பொழிகின்ற
கருணாகிரகணத்தினால்
உன் பெயரிருக்கும்
எல்லோரையும் பிடிக்கச்செய்துவிட்டாய்
யாரோ அழைக்க
அவர்களுக்கு முன்னால்
பொல்லாதவன் போலாகிறேன்
ஆனால் நீ
என்றோ ஒருநாள்
பூவாசம் காட்டிவிட்டுப்பின்
இன்றெல்லாம் வெறும் பேச்சில் முழம் போடுகிறாயே
நீ அழகானவள் இல்லை என்று சொல்லாதே
எப்போதும் என் மீது தணலாகப்பாயும்
இளவேனிற்காற்று
உன்னோடு பேசுகிறபோதுமட்டும்
மெதுவாக வெம்மையுறுவதைக் காண்
"பூக்காரன் கவிதைகள்"