காதலே, என் காதலே
சறுக்கு மரமாய் இருந்தாய்,
என் காதல்
உன் கண் பட்டு
நம் காதில் கேட்கும் வரை.
ஒரு தலையாய் இல்லைதான்
நம் காதல் என்பதை
விழிகளில் விதைத்து நீ பயிரிட்ட பின்
நானறிவேன்;
இருந்தும் ஏனோ
மௌனமும் மறுப்பும்
உன் கேடயங்களா?
உன் உதாசீனம்
ஓடி ஒளிதலில்,
என்னைத்தவிர்த்தலில்...
கிடக்கட்டும், என் காதல்
வழுக்குப்பாறையின் விளிம்பில்;
வாலிப சிறையின் நடுவில்.
காதல் என்னில் பிரசவம்,
ஓர் அவசரகதியில்!
அவிழ்ந்து கிடக்கிறது
உன் முகவரியில்
ஓர் அனாதையாய்!
பார் இல்லை பார்க்காமல் போ,
பேசு நீ இல்லை பேசாமல் போ,
கானல் நீராயினும் என் காதல்
எனக்கு அழகு தான்;
என்னை அழ வைத்தாலும்
கிழிந்து போன பட்டமாய்
என் கைகளில் நான் ஏந்தி
நினைவுகளில் நீந்துகிறேன்,
என் காலமெல்லாம்
நீ இருக்கும் திசையில்.
நினைவுகள் இனிக்கும்,
வலிக்கும்
அந்த இனிய வலியில்
என் துடிப்பை
ஒரு நாள்
நீ உணரும் போது
யார் இருந்தாலும்
இல்லை என்றாலும்
காதல் இருக்கும்..
உன்னில் கரைசலாய்,
என்னில் கலந்ததாய்.
அது என்னுள்
அமரத்துவம்.
வடுவாய்,
உன் வாழ்க்கை தத்துவம்...