பிதற்றுதென் உளமே

தென்றல் தழுவுகையில் தேன்மலர்கள் சிந்துகையில்
என்னிதயம் தீயாய் எரித்திடுதே என்செய்வேன் ?
கண்ணில் காத்தக் காதலால்
பெண்ணே பித்தாய்ப் பிதற்றுதென் னுளமே !


தமிழ் மரபிலுள்ள ஐவகைப் பாக்களில் "மருட்பா " ஒரு வகை .
வெண்பா அடிகளும், ஆசிரியப் பா அடிகளும் கலந்து, மருட்டுவதால் (மயக்கந் தருவதால்) "மருட்பா " எனப்பெயர்.
இது வெண்பா அடிகளும், அகவலடிகளும் சமமாக வந்தால் "சமநிலை மருட்பா " எனவும்,
சமமின்றி வந்தால் "வியனிலை மருட்பா " என்றும் அழைக்கப்பெறும்.
மருட்பா நான்கு வகைப்படும்.
அவை,
வாயுரை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை
(இவற்றின் விளக்கங்களைத் தனியே காணலாம்.)
சான்று பாடல் சமனிலையாய் வந்த "கைக்கிளை மருட்பா" ஆகும்.
காண்பது முதல் கலத்தல் வரை ஒருதலையாய் விளங்கும் காதலே "கைக்கிளை " எனப்படும்.
"காட்சி முதலாக் கலவியி னொருதலை
வேட்கையிற் புலம்புதல் கைக்கிளை அதுதான்
கேட்போ ரில்லாக் கிளவிகள் பெறுமே "
(யாப்பருங்கலம்)
ஒருதலைக் காதல் என்பதால் தனக்குத் தானே உரைத்தலும், நெஞ்சொடு கிளத்தலுமின்றி, வேறு யாருடனும் உரைக்கவியலா நிலையைக் குறிக்கும்.
பொது இலக்கணம்
````````````````````````````
*முன் அடிகள் வெண்பாவாகவும் (நாற்சீர்)
* பின்னடிகள் ஆசிரியப் பா ஆகவும், (நேரிசையாசிரியப் பா)
* சமமான வெண்பா அடிகளும், ஆசிரியப் பா அடிகளும் கொண்டு,
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையும்,
* முதல், மூன்றாம் சீர்களில் மோனையும்,(பொழிப்பு மோனை)
* ஒரு பெண்ணை ஒருதலையாய்க் காதலிப்பதை உணர்த்தும் கருவைக் கொண்டும்,
* முதலில் வெண்டளையால் தொடங்குவதால் வெண்பா இலக்கணமும், ஈற்றில் ஆசிரியப்பாவால் முடிவதால் அதற்குரிய இலக்கணங்களும் பெற்று,
* ஈற்றயலடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய்,
* ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிவதும்
சமனிலையான் வந்த "கைக்கிளை மருட்பா " எனப்படும். (வினிலையாகவும் வரும்.

( பைந்தமிழ்ச் சோலையில் கற்றது )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Mar-16, 12:56 am)
பார்வை : 223

மேலே