பெண்மையைப் பேணுதல் --- கவியரங்கம் முடிபு
கவியரங்கம் பங்கேற்ற கவிஞர்கள் அனைவர்க்கும்
செவிகுளிர கவிதைகளைச் செப்பிநின்ற அனைவர்க்கும்
புவிமீதில் வரமாகிப் புகழ்சேர்த்த அனைவர்க்கும்
கவியரங்கம் சார்பாகக் கனிவான நன்றிகளே !!!
தலைமையினைத் தந்திட்டத் தரத்தினிலே சிறப்புடையோர்
தலைமையென் தனிவணக்கம் தாள்பணிந்த நன்றிகளும்.
தலைமையினை வணங்கிநின்ற தகைசான்ற பாவலர்காள் !
தலைமையிங்கு நன்றியினைத் தங்களுக்கும் உரைக்கின்றேன் .
பெண்மையினைப் பேணுதலை பெருமையுடன் கவிஞர்கள்
உண்மைவழி நின்றிட்டே உரைத்தனரே கவியரங்கில்
விண்ணவரும் போற்றிடுவர் விடிவெள்ளி பெண்மையினைக்
கண்கவரும் காரிகையைக் காலமெல்லாம் பேணிடுவர்.
பிறந்தவீட்டோர் பேணுவதில் பிறக்கின்ற காலம்தொட்டே
மறவாது செய்திடுவர் மனங்குளிர வாழ்த்திடுவர் .
உறங்காது சமுதாயம் உற்றவராய்ப் பெண்மையினைப்
பிறழாதுப் பேணுதலைப் பிசகாது உரைத்தனரே .
பெண்களெல்லாம் பெண்மையினைப் பெரிதாகப் பேணுதலைக்
கண்களாக நினைத்திங்குக் கருத்துகள் வடித்தனரே .
மண்ணுலகில் ஆண்களுமே பெண்மையினைப் பேணுதலைக்
கண்குளிரக் கண்டிட்டோம் கவிஞர்கள் கவிதையிலே .
கள்ளமில்லாப் பெண்ணினத்தைக் கவனமுடன் பேணுவதில்
வெள்ளமெனப் பணியிடத்தில் வேகமாக விரைந்திடுவார் .
உள்ளமெல்லாம் வெள்ளைமனம் உணர்வுகளின் இருப்பிடமாம்
தள்ளரியப் பெண்மையினைத் தக்கவழி பேணிடுவார் .
எல்லோரும் பேணுகின்றார் எண்டிசையும் பெண்மையினைப்
பல்லோர்கள் முன்னிலையில் பற்றுடனே பேணுதலை
நல்லோராய் நின்றிங்கு நலமனைத்தும் வகுக்கின்ற
செல்வர்கள் அவைதனிலே செப்பிடுவேன் புகுந்தவீடே .
புகுந்தவீடே பெண்டிர்க்குப் புகழ்சேர்க்கும் வீடென்பேன்.
புகுந்தவீடே பெண்மையினைப் பூமியிலே பேணிடுவர் .
புகுந்தவீடே சிறந்ததென்று புவியோரும் மதித்திடுவர் .
புகுந்தவீடே பெண்மைக்குப் புதியதொரு உலகென்பேன்.
நன்றிசொல்ல வார்த்தையில்லை நல்வாய்ப்பு தந்தமைக்கு
என்றனையும் மதித்திங்கே ஏற்றதொரு தலைமையினை
இன்றிங்கே வழங்கிட்ட இன்முகத்தோர் நிலாமுற்றம்
நின்றிங்கே சொல்லுகின்றேன் நிறைவான கவியரங்கம் .!!!