சோழனின் கனவு இறுதி உரை
தன் உயிர் பாராது
என் உயிர் விதைத்தவளே
மீண்டும் உன்னுடன் நான் வாழ
ஒர் நாள் கேட்கின்றேன்;
கண்ணில் சிறைவைத்து
காதலை பொழிந்தவளே
உன்னுடள் போர்வையாய்
உன் இதழ் சுவை காண
ஓர் நொடி வேண்டுகிறேன்;
தஞ்சை தாய் மண்ணில்
தவறாக நுழைந்தவர்கள்
குருதியில் நீராட
பிண குவியலில் மதில் செய்ய
இன்னும் ஒர் நாள் வேண்டுகிறேன்;
உடல் பாய்ந்த அம்புகளும்
வாள் துளைத்தோடும் குருதியும்
போதாது போதாது என
நெஞ்சம் கொதிக்கிறது
இன்னும் ஓர் நாள்
இறுதியாய் வேண்டுகிறேன்;
இதோ சத்தமின்றி
எனை கைது செய்யும் காலனே
தஞ்சையில் நான் பிறக்க
ஓர் நாள் வேண்டுகிறேன்;
போய் வரவா
என் புகழ் சொன்ன ஊரே!
தமிழ்த்தாய் தினம் தாலாட்டும்
காவிரி நாடே!
என்னுயிர் பிரிந்திங்கு
உன்மடி சேர்கின்றேன்
உன் முகம் நான் காண
ஒர் வரம் கேட்கின்றேன்;
போய் வரவா
என் புகழ் சொன்ன நாடே!