யட்சினி பூஜை - தொடர்கதை பாகம் 1

..................................................................................................................................................................................................


நல்ல இடமாகத்தான் பட்டது கோடங்கி மாசானத்துக்கு. நெற்றியில் கை வைத்து இடுங்கிய கண்ணால் பார்த்தான். சுற்றிலும் எல்லைக் கற்கள் பதித்த பொட்டல் காடு. பாறை மேல் பட்டு மீள்கிற வெயிலின் தாக்கம் மனிதச் சதையை உலர்த்தி எடுத்தது. இருந்தாலும் பக்கத்து அணைத் தேக்கத்திலிருந்து வீசும் சிலீர் காற்று தேவாமிர்தமாய் இருந்தது. அரை குறையாக எடுக்கப்பட்ட அஸ்திவாரம். மூங்கில்களும் செங்கற்களும் ஒரு ஓரமாய் சிதறியிருந்தன. கொஞ்ச தூரத்துக்கப்பால் பனை மரங்கள், புளிய மரங்கள் மற்றும் அரச மரங்கள்..

“ ஏய்யா, இங்க வா.. ” தியேட்டர்கார பெரியவர் குப்புராஜன் அழைத்தார். குட்டையாய், கட்டையாய், பணக்கார தொந்தியும் பளபளக்கும் மோதிரமுமாய் இருந்தார் குப்புராஜன். பெரணமல்லூரில் தியேட்டர் வைத்திருப்பவர்.

பவ்யமாய் வந்தார் மாசானம்.

“ எடம் தெரியுதுல்ல? மேலூரு மொக்கைசாமி கிட்டயிருந்து வாங்கினது.. வீட்டுப் பொம்பள வேணாம்னுதான் சொன்னா.. வீடு கட்ட ராசியில்லாத எடமாம்.. மொக்கைசாமி வீடு கட்டப் போனபோது கோடாலி தலையில விழுந்து ஒத்தன் செத்துப் போனானாம்.. அப்படியே அல்லாத்தையும் நிறுத்திட்டு என்கிட்ட தள்ளிட்டான். வெல குறைச்சுத்தான் வாங்கினேன்.. ஒன்னை நம்பி வாங்கினதா வச்சுக்கயேன்..... அஸ்திவாரம் தோண்டச் சொல்ல கருமரப்பட்டி முருகன் காமாலை கண்டு செத்துட்டான்.. என்னா இது? பரிகாரம் கண்டு சொல்லு..!”

மாசானம் அந்த இடத்தை ஒரு முறை சுற்றி வந்தான். குறைந்த விலையில் இடம் கிடைத்தால் வாங்கிப் போடுவது குப்புராஜன் குணம்.. அந்த இடம் சுடுகாட்டில் இருந்தாலும் சரி..!

“அய்யா, இன்னைக்கி ராத்திரி பூசை போட்டு என்னா சமாச்சாரம்னு பாத்து சொல்றேனுங்க.. ”

மறுநாள்..

மாசானம், மாடசாமி கோயில் நடை மூடிய பிறகு, கோயிலுக்குப் பின்புறம் குளத்தங்கரைப் படிக்கட்டில் அமர்ந்திருந்தான். ஊரடங்கிய இரவு.. நேர்மையாளர்கள் உறங்குவதற்கும் திருட்டுப் பய புள்ளைகள் தொழிலுக்கு கிளம்புவதற்கும் ஆன இடைப்பட்ட நேரம்..!

குப்புராஜன் வர, எழுந்தான்.

குளக்கரைப் படியில் மாசானம் தூசி தட்டிப் போட்ட மேல் துண்டில் உட்கார்ந்து கொண்டார் குப்புராஜன்.

மாசானம் உடனடியாக விஷயத்துக்கு வந்தான்..

“ என்னய்யா, இப்படி பண்ணிப்புட்டீக? ”

“ என்ன சொல்ற? தேசிய நெடுஞ்சாலை வரப் போகுதுய்யா.. டெவலப் ஆயிடும்.. நிறைய ரூம் வச்சி வீடு கட்டிட்டு, வருங்காலத்துல லேடீஸ் ஹாஸ்டலா மாத்திருவேன்..! ”

“ இந்த இடம் கோயில் கட்ட மட்டும்தா லாயக்கு.. இந்த எடத்தில முந்தி ஒரு கோயில் இருந்திருக்கு.. காலப்போக்குல அது சிதிலமாயிடுச்சி.. ஆனா தல விருட்சம் நல்லா வளர்ந்து நின்னிருக்கு.. அந்த மரத்தை பரிகார பூஜை எதுவும் பண்ணாம வெட்டி சாய்ச்சிருக்கா.. அந்த மரத்துல குடியிருந்த யட்சினி இப்ப கோபமா இருக்கா.. வீடு கட்ட அவ விட மாட்டா..! ”

“ யோவ், மெதுவாப் பேசுய்யா.. ஒனக்கு சீர்காழி கோவிந்தராசன் குரல்.. இப்ப என்ன பண்றது? ”

“ ஏங்கைய்யா, யாராச்சும் கூட வந்திருக்காங்களா? ”

“ வீட்டம்மா வந்திருக்கா.. இங்க இல்ல.. மாடசாமி கோயிலுக்குள்ள ராப்பூசைக்காக உக்காந்திருக்கா.. ”

“ சரி, சரி.. ” மாசானம் நெருங்கி வந்தான்..

“ ஒரு நாப்பத்தெட்டு மாசத்துக்கு ஒண்ணும் பண்ணாம அப்படியே போட்டு வைங்கய்யா.. ”

“ என்னது நாப்பத்தெட்டு மாசமா? கெட்டது போ..! நாப்பத்தெட்டு நாள் கூட பொறுத்துக்க முடியாதுய்யா..! சகாயம் பில்டர்ஸூன்னு கேள்விப்பட்டிருக்கியா? ராசிக்கார பில்டர்...! நல்ல பணக்காரன்..! அவனுக்கு ஒரே பையன்.. அவன் ஏதோ போலிஸ் கேஸ்ல மாட்டிட்டான்.. நாந்தேன்.. அவனை ஜாமீன்ல கொண்டாந்தேன்.. அடுத்த ஆட்சி வரதுக்குள்ள அவன் மேல கேஸே இல்லாம பண்ணிப்புடணும்.. இதுக்காக அந்தாளு ரொம்ப ரொம்ப கம்மி விலையில எனக்கு கட்டடம் கட்டித் தர ஒத்துட்டுருக்கான்.. அந்தப் பையனை வச்சு நா கட்டடம் முட்டிக்கோணும்..! பையனுக்குன்னு கேட்டா எவ்வளவு காசையும் அள்ளி விடுவான் அந்தாளு..! நாளு கடத்துறது நல்லதில்லே.. இது ஒரு விதமான ஒப்பந்தம்யா.. !

“அப்ப பரிகாரம்தான் பண்ணணும்.. ”

“.பண்ணு.... ”

“ அது கஷ்டமுங்க..! ” இப்போது மாசானம் குப்புராஜன் காதோடு வந்தான்.. “ நரபலி கொடுக்கோணும்.. தலைச்சன் புள்ளையா...! அதுவும் மகா சிவ ராத்திரிக்கு அடுத்து வர்ற அமாவாசையில.. அத உட்டா அடுத்தது அடுத்த வருசம்தான்.. ”

“ ஏய்யா, மரத்துக்கு மனுசன் எப்படி சமானம்? ”

“ மனுசன்தானே அய்யா வெட்டினான்? ”

குப்புராஜன் ஓரிரு நிமிடம் மௌனம் காத்தார்.

“ ஏற்பாடு பண்ணிடு.. எவ்ளோ வேணும் ??? ”

மாசானம் வாயடைத்தான்.

“ ஒரு லச்சம்? ரெண்டு லச்சம்? யோசிச்சு சொல்லு.. காதும் காதும் வச்சா மாதிரி பூஜைய முடி..! அப்பால ரத்தக் களறி விழக் கூடாது..! விழுந்தே..., தொலைஞ்சே..! ! !”

குப்புராஜன் புறப்பட்டார்..

தனது தொழில் முறை எதிரி நவநீதத்தை மாசானம் “வச்சுக் கொடுத்த” மைதான் முடக்கியதாக இன்றளவும் நம்புகிறார் குப்புராஜன். இப்படி நிறைய பூஜை, பரிகாரம் தாயத்தெல்லாம் மாசானம் அவர் குடும்பத்துக்கு செய்து கொடுத்திருக்கிறான்...

இரண்டு நாள் கழிந்தது.

இரவு ஜக்கம்மா பேரைச் சொல்லி குடுகுடுப்பை அடித்தபடி வீடு வீடாக வந்த மாசானம், செல்வி குடிசையை எட்டிப் பார்த்தான். செல்வியின் ஆறு மாதக் குழந்தை புட்டிப் பால் குடித்துக் கொண்டிருந்தது. செல்வியின் மாமியார் பாரிஜாதம் குழந்தையின் காலை லேசாகத் தேய்த்து சூடேற்றிக் கொண்டிருந்தாள்..

“ தாயி, சோத்தை நல்லாப் பெசஞ்சி பால் ஊத்தி, கஞ்சி காச்சி வச்சிருக்கேன்.. புள்ள அழுதா அதக் குடு.. நீயும் ரெண்டு மடக்கு குடிச்சிக்கோ... ” மாமியார் வாஞ்சையாக சொல்லிக் கொண்டிருந்தாள்..

“ எனக்கு எதுக்கத்தே..? பாலே சுரக்க மாட்டேங்கு.. பால் வத்தின பசு மாட்டுக்கு புண்ணாக்கு கேக்குதோ?.., ” செல்வி படக்கென்று அழுதாள்..!

“ மனசில வருத்தமிருந்தா பால் சுரக்காதுதேன்.. அந்த தறுதலையை நெனச்சி நீ ஏன் மருகுற? ஒழுங்காத்தேன் வளர்த்தேன்.. இப்பிடியா பிச்சிட்டு போகும்? ”

பணத்தையும் நகையையும் சுருட்டிக் கொண்டு, எவளோடோ ஓடிப் போன மகனை எண்ணி விசனப்பட்டவள், சீக்கிரமே நிலைக்கு வந்தாள்..

“ நானிருக்கேன், உனக்கு..! ! ” மருமகளை அணைத்துக் கொண்டாள்..

கோடங்கி முடிவு செய்தான்.. தலைச்சன் புள்ள கிடைச்சாச்சி..! ! !


தொடரும்..
............................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-Mar-16, 8:43 pm)
பார்வை : 154

மேலே