இயற்கையின் தாலாட்டில்

மழை நீரில் நீராடும் சிட்டுக் குருவி
சிலிர்த்தது சிறகினை
சிறகடித்தது வானில் !
கூரலகால் சேர்த்தது குருவி
சிறு துரும்புகள்
குஞ்சுகளுக்கு மரக்கிளை தொட்டில் !
ஆலோ வேலோ நானறியேன்
சாலை நெடுகிலும்
நட்டவர்க்குகு நன்றி சொன்னேன் !
தொட்டியில் என்றோ நட்ட
ஒரு குச்சி
பூத்திருந்தது புது ரோஜா !
தென்னனங் கீற்றில்
தெம்மாங்கு பாடுது தென்றல் காற்று
தென்னையும் சேர்ந்தாடுது !
வைகறை வானம்
நீலத்தில் சிவப்பு வண்ணம்
கதிரவன் காலை ஓவியம் !
ஒற்றைக் காலில் குளத்தில் கொக்கு
தவம் செய்கிறதோ ? ஆம்
மீன் கொத்திட தவம் கலையும் !
சிக்கிய வலையிலிருந்து
இறுதி மூச்சுடன் துள்ளிய மீன்
சலனத்தில் ஒரு புதிய ஜனனம் !
-----கவின் சாரலன்