இன்று வரை தேடுகிறோம்
கட்டிய கூட்டை
குரங்குகள் கலைத்தெறிய
ஊரிழந்து உறவிழந்து
ஊயிர்காக்க வழியிழந்து
கூடிழந்த குருவிகளாய்
கூச்சலிட்டுக் கலைந்து போனோம்
கலை(ளை) இழந்து
நிலை இழந்து
நித்தமும் நிம்மதியிழந்து
நெடுந்தூரம் பறந்தலைந்து
அகதி என்ற நாமத்தோடு
முகாம்களில் முடக்கப்பட்டோம்
மூடப்பட்ட முகாம்களின்
வக்கிர வதைப்புகளில்
வலிதாங்கி விழி பிதுங்கி
மனம் சிதைந்து மகிழ்விழந்தோம்
கல்வியிழந்து கனவிழந்து
நிகழ்கால வாழ்விழந்து
நிச்சயமற்ற நிமிடங்களுடன்
நெருக்கமாய் நாமிருந்தோம்
கூடி வந்த குடும்பமிழந்து
எண்ணிக்கையில் பொலிவிழந்து
ஒருவர் பின் ஒருவராய்
களவாடப்பட்ட கலாசாரத்தில்
காணாமல் போனோரை
கண்டு கொள்ள வழியிழந்து
இன்று வரை தேடுகிறோம்
ஊர் திரும்ப வாடுகிறோம்