மெளனம் ஓர் புல்லாங்குழல் --முஹம்மத் ஸர்பான்

சுவாசக் காற்றே!
என்னை விலகிச் செல்லாதே!
அவள் தேகத்தை தீண்டாதே!

எரிமலை பிழம்பை போல்
மின்னிடும் பேதை அவள் பார்வைகள்
தெளிந்த நீரோடை போல்
இன்னிசையில் சுதியாகும் கால் கொலுசுகள்

நான் காதலுக்கு புதிது
கனவுகள் கண்டு அஞ்சுகிறேன்
வாழ்வின் அர்த்தம் பெரிது
சுமையிடம் சுகத்தை கெஞ்சுகிறேன்.

என் இதயத்தின் உள்ளாடை காதல்
உன் என்புகளின் மேலாடை காதல்
என் உயிரின் சுவாசம் காதல்
உன் உமிழின் எச்சம் காதல்

நத்தை போல அவளும் நானும்
ஓர் உயிராகி விட்டோம்
நான் சதை
அவள் என்னை காக்கும் ஓடு

வானம் மேல் நாணயக்குற்றியை போல்
வெள்ளை முகம் கண்டால் உன் ஞாபகம்
கடலின் மேல் தள்ளாடும் அலைகள்
கண்டால் என்னையே எனக்கு ஞாபகம்

நான் செல்லும் பாதைகள்
முகவரியிழந்த சுடுகாடாய் தெரிகிறது
அதில் என்னுடலை புதைக்க
தோண்டும் இடத்தில் ஆத்மா உறங்குகிறது

சிரிப்பதை விட அழும் நேரங்கள் தான் அதிகம்
ஆனாலும் அது தான் என் இஷ்டம்

என் வெள்ளைக்காகிதத்தை காதலெனும்
பேனா குத்தி காயம் தந்து விட்டது
கடவுளிடம் மருந்து வாங்க சென்றால்
அவள் தான் உன் ஆயுள் என்கிறான்

நான் கவிஞனாக வில்லை
உன்னால் பித்தனாகி விட்டேன்
எல்லோரும் என்னை வாழத்
தெரியாதவன் என்றார்கள்
உண்மை தான்...
என் தேடுதல் தூரம் உன்னை போல்
ஆனாலும் நரைத்த பின்னும் முடிவிடமுண்டு.

உன் மெளனங்கள் அழகான வார்த்தைகள்
நான் தினந்தினம் பொருள் தேடி தொலைகிறேன்
மூங்கில் காட்டுக்குள் தொலைந்த பின் தான்
உன் மெளனமெனும் கத்தியால் மூங்கிலை வெட்டி
புல்லாங்குழல் இசைக்கிறேன்..என்னையும்
கவிஞன் என்று உலகம் தேடுகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-Mar-16, 2:37 pm)
பார்வை : 235

மேலே