கள்ளன் துறவியான கதை

காட்டோரமாக இருந்த ஓர் சிற்றூரில் ஓர் மண்டபம் இருந்தது. அம்மண்டபத்தில் ஓர் துறவி தினமும் மாலை 6 மணிக்குமேல் தனது தியானத்தைத் தொடங்குவார். தியானத்தை முடிப்பதற்கு 8 மணியாகிவிடும். பிறகு, அவர் தன் அறையில் சென்று உறங்குவார். தினசரியாத் தியானம் செய்வார்.

அதேபோல் ஓர் மாலை வேளையில், தியானம் செய்து முடித்துவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது அக்காட்டிலிருந்த ஓர் கள்ளன் துறவியின் முன் கத்தியைக் காட்டித் தன் உடைமைகளைத் தனக்களிக்குமாறு கூறினான்.

துறவி: ஏனப்பா! நானோ ஓர் துறவி. என் இல்வாழ்க்கையை விட்டுவிட்டு இம்மண்டபத்தில் வாழ்ந்து வருகிறேன். என்னிடம் போய் பொருள் கேட்கிறாயே, இருந்தால் நான் ஏன் தவ வாழ்வு மேற்கொள்ளப் போகிறேன்?

கள்ளன்: அஃதெல்லாம் எனக்குத் தெரியாது? நான் யார் என்று நீ அறிவாயா?

துறவி: முதலில் நீ யார் என்று நீ அறிவாயா?

கள்ளன்: ஏன் அறியேன்? நான் இக்காட்டிற்கே தலைவன். என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? ஏன் நீ அறியாயா?

துறவி: இல்லை. நீ யார் என்று நான் கூறுகிறேன் பார். இங்கு வந்து உட்கார்.

கள்ளன்: நான் யார் என்று கூறு பார்க்கலாம்.

துறவி: அப்பா! இவ்வண்டத்தில் பல்வேறு கோள்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பூமி.

இப்பூமியில் பல்வேறு நாடுகள் உள்ளன, அதில் ஒன்றுதான் இந்தியா.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் உள்ளன, அதில் ஒன்றுதான் தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் உள்ளன, அதில் ஒன்று தான் காஞ்சிபுரம்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு பேரூர்களும் சிற்றூர்களும் உள்ளன, அதில் ஒன்று தான் இந்த ஊர்.

இவ்வூரில் பல்வேறு தெருக்கள் உள்ளன, அதில் ஒன்று தான் நமது தெரு.

நமது தெருவில் பல்வேறு வீடுகள் உள்ளன, அதில் ஒன்று தான் நீ வசிக்கும் வீடு.

உனது வீட்டில் நிறைய பேர் வாழ்கின்றனர், அதில் ஒருவன் தானடா நீ!

கள்ளனின் மெய்சிலிர்த்தது.
அதனைக் கேட்ட அடுத்த நொடி, அவன் துறவியின் காலில் விழுந்துவிட்டான்.

ஓர் மனிதனுக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளித்தப் பெருமை துறவியைச் சேர்ந்தது.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (20-Mar-16, 8:02 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 322

மேலே