பெருந்தலைவரின் தாக்கம் ------------------காமராஜர் கட்டுரைத் தொகுப்பு

கும்பகோணத்தில் எங்களது வீட்டு வாயிலில் நிலைப்படிக்கு மேலாக புன்சிரிப்புடன் காணப்படுகின்ற மகாத்மா காந்தியின் படம் இருக்கும். அதனைக் கடந்து உள்ளே உள்ள ஹாலில், காமராஜர் படம் நடுவிலும் அடுத்தடுத்து காந்தி, நேரு, விவேகானந்தர், சுபாஷ் சந்திரபோஸ் படங்களும் பெரிய அளவில் பிரேம் போடப்பட்டு இருக்கும். காமராஜரின் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார் எங்கள் தாத்தா.

60-களின் இறுதியில் கும்பகோணத்தில் காமராஜர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்துக்குத் தாத்தா எங்களை அழைத்துச் சென்றார். காமராஜரை நேரில் பார்த்தபோது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மறுநாள் பள்ளியில் அவரை அருகில் பார்த்ததைப் பற்றிப் பெருமையுடன் பேசிக்கொண்டேயிருந்தேன். ஒழுக்கம், நேர்மை போன்ற விழுமியங்களை இப்படியான மனிதர்கள் மூலமாகத்தான் முன்னோர்கள் எங்கள் தலைமுறையில் எங்களிடம் கடத்தினார்கள். இன்றைக்கு என்னிடம் என் தாத்தாவின் தாக்கம் மட்டும் அல்ல; பெருந்தலைவரின் தாக்கங்களும் இருப்பதை உணர்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விருதுநகர் சென்றபோது அவரது இல்லம் சென்றேன். ஒவ்வொரு தமிழனும் தம் பிள்ளைகளை அழைத்துச் சென்று காட்ட வேண்டிய முக்கியமான இடம். இப்போது என் வீட்டிலும் நுழைவாயிலில் காந்தி மற்றும் காமராஜரின் படங்களே உள்ளன.

- பா.ஜம்புலிங்கம், தஞ்சாவூர்.

எழுதியவர் : (21-Mar-16, 7:12 am)
பார்வை : 77

மேலே