இலவசம் என்னும் வசியம்

இலவசம் என்னும் வசியம்
ஈர்த்திடும் மெல்ல இதயம்
புலன்களின் அறிவைத் தடுத்து
புரண்டிடச் செய்யும் மாயம் !

மக்களை விலைக்கு வாங்க
வழங்கிடும் இலவ சங்கள்
இக்கணம் உதவு மென்று
எண்ணுதல் சரியோ புகல்வீர் !

உழைப்பினை முடக்கிப் போடும்
உண்மையை உறங்க வைக்கும்
தழைத்திடும் நம்பிக் கையும்
சடுதியில் தளர்ந்து போகும்

ஆடியில் ஆடை யகத்தில்
அணிதிரள் மகளிர் வெள்ளம்
கூடிடும் கோல மென்ன
கொடுமையை எங்குச் சொல்ல ?

இலவச மென்னும் உபாயம்
என்றுமே நமக்கு அபாயம்
நலமுற இதனைத் தவிர்ப்போம்
நாளுமே இனிதாய் வாழ்வோம் !!

( 21:01:2016 தினமணி - கவிதைமணியில் வெளிவந்துள்ளது )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Mar-16, 10:59 am)
பார்வை : 61

மேலே