இரவுகளின் இராட்சசி

இரவோடு கலந்த இருளாய்
நினைவோடு கலந்த
நீண்ட வழிப்பயணத்தின்
நிதர்சனத் தண்டனை வழங்கும்
(அ)நியாயவாதி - நீ


நினைவுகளின் நீட்சியில் மட்டும்
விட்டுப்போகாத கட்சித் தொண்டனாய்
வெற்றுக் கூச்சல்களோடு
வீரியம் கொண்டு விழித்தெழுகிறாய்


மதி மயங்கும் மாலைநேரம்
மடக்கி அணைத்த இரவுகளில்
மந்திரப் புன்னகையில்
மௌன மொழி பேசுகிறாய்


ஏகாந்த இருளில் உலா வரும்
இராட்சசியாய்
மாயமாய் எனை மடக்கி
ஆதிக்க அரசியலை
அடர்த்தியாய் அரங்கேற்றி
ஆணவம் கொள்கிறாய்


இமை மூடும் பொழுதுகளை
இரக்கமற்று உனதாக்கி
உணர்வுகளின் வாசலில்
ஊஞ்சலாடி மகிழ்கிறாய்
ஊழிக்காவியத்தை உருவாக்கிப்
போகிறாய்


உன் சாதனைக் கழிப்பிலென்
வேதனையை வேரறுக்க
முடிகின்ற இரவிற்கு
விடை சொல்லி விசும்பியழ


விடிகாலைப் பொழுதில்
தலைமறையும் தாரகையாய்
அதிகாலை அவசரத்தில்
அரவமற்று மறைந்து
அரசியலை முடிக்கிறாய்
ஆர்ப்பரிப்பை குறைக்கிறாய்

எழுதியவர் : சர்மிலா (21-Mar-16, 3:30 pm)
பார்வை : 102

மேலே