கண் கொத்திப்பறவை

பேருந்தின் சன்னலோரத்தில்
பட்டென படரும் இந்தக்கொடி.

படுத்ததும் தூங்குபவர்கள்
பாக்யசாலிகள்.

அவ்வளவு எளிதாய்
கிடைத்துவிடுவதில்லை
நிம்மதியான தூக்கம்யாவருக்கும்.

மாத்திரைகளைவிழுங்கிவிட்டு
மாடியில் உலவிக்
கொண்டிருக்கிறார்கள்.

ஏழை சாலையோரமும்
நிம்மதியாய் தூங்கிவிடுகிறான்.

இமைகொண்ட உறக்கம்
மிதக்கும் இறகைப்போலானது.

வருடும் காற்றுக்கு
வண்ணப்பூ கண்ணுறங்குகிறது.

கூட்டின் ஏற்பாட்டில்
குருவியுறங்குகிறது.

இரவில் உறங்காத ஏதொரு
பறவையின் கண்ணீர்
பனித்துளியாகிவிடுறது.

நாணலின் தொடுகையில்
நகர்ந்தபடி நதியுறங்குகிறது.

உறங்குநிலை இல்லையேல்
உருகுநிலையாகும் உயிர்.

உறக்கம்
கண்களின் ஓய்வு.

உறக்கம்
காட்சிகளின் இடைவேளை.

உறக்கம்
கனவுகளின் கூடாரம்.

உறக்கம்
இரவின் பாடல்.

உறக்கம்
உயிர்களின் உள்ப்பூட்டு.

உறக்கம்
இருபகலுக்கான ஒரு முடிச்சு.

உறக்கம்
உயிரின் ஊற்று.

உறக்கம்
மரணத்தின் மாறுவேடம்.

உறக்கம்
விளக்கனைத்தபின்
விழி ஏற்றும் தீபம்.

உறக்கம்
விழியில் கூடடையும் பறவை.

உறக்கம்
இரவின் முன்னுரை.

உறக்கம்
பகலின் முடிவுரை.


- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (24-Mar-16, 11:22 am)
பார்வை : 122

மேலே