நாளைக்கு வா
இந்த கூர்க்காவைப் போல்
இருப்பது என்பது
ரொம்ப கடினம்..
எல்லா தெருக்களுக்கும்
முன்னிரவில் ஒருமுறையும்
பின்னிரவில் ஒருமுறையுமென
விசிலூதி ஒலியெழுப்பி
வலம் வருபவன்..
முதல் தேதி துவங்கி
பத்து பதினைந்து நாட்களுக்கு
வீட்டார்கள் கொடுக்கும்
பத்து ரூபாய் காசுக்கு
பத்து முறையாவது வந்து போவான்
..
நாளைக்கு வா..
வெள்ளிக்கிழமை..
வேலையாயிருக்கேன்..
போய் அப்புறம் வா..
..
என்ற ஒரே மாதிரி அலட்சிய
சைகைகள், குரல்கள்
புளித்துப் போனாலும் ..
ஒன்றிரண்டு வீட்டில்
உடனே கிடைக்கும்
பத்து, இருபதுகளுடன்
சிரித்த முகத்தோடு
அமைதியாய் தெருவில் இறங்கி
ஏதோவொரு இந்திப் பாடலை
முணு முணுத்தபடி
போகின்ற..
இந்த கூர்க்காவைப் போல்
இருப்பது என்பது
ரொம்ப கடினம்..
..
வாழ்க்கை தருவதை
வாங்கிக் கொண்டு
சிரித்தபடி கடப்பதற்கு !