ஒற்றைக் கால் தவம் - வினோதன்
எனைத் தாக்க வரும்
பந்தை எறிந்தவரை
விரக்தியடைய வைக்கும்
மட்டை வீரனை
மலையளவு பிடிக்கும் !
பந்தயப் போருக்கு
நடுவே - பயந்தபடி
நிற்போம் மூவரும்,
மூன்று அங்குலத்தில்
மூச்சை அடக்கி !
ஒட்டுக் கேட்பு
கருவிகள் நிறுவி
என் காது வழி
தரவுகள் பெற்றே
தரப்படுகிறது - சில
வெளிநடப்பு ஆணைகள் !
தடுப்பாளர்கள்
தடுக்கி விழுந்து
எடுத்து அடிக்கும்
நொடிகளில் - எம்
வலிகள் - மைதானப்
புல்லேங்கும் வீசும் !
எங்களை காக்கும்
கள வீரனின் மீதான
வெறியில் - எமை
தெறிக்க விடும்
வீச்சாளர்களை
என்ன செய்யலாம் ?
எமைத் தாக்கும்
பந்தின் வேகத்தில்
குட்டிப் பாலங்கள்
குப்புற விழும்
கூடவே நாங்களும் !
ஓட்டப் பேரணியில்
வலிகளை மீறி
நடுவரும்
நாங்களும்
தானே நின்று
கொண்டிருக்கிறோம் !
வெற்றியின் பின்
ஏதாவது ஒரு கை
எங்களை பிடிங்கி
எடுத்துச் செல்லாதா
என்ற பேரேக்கத்துடன்
ஒற்றைக் கால் தவத்தில் !