நிரந்தமின்மை

விடியலின் முன்பான
காரிருள் பொழுதில்
நிரந்தரமற்றுக்
கரைந்து போகும்
கருமைக்குள்
வான் வெளியெங்கும்
பறந்து திரியும்
வௌவால்கள்..


தொடர்ந்து பறத்தலின்
நிரந்தரமின்மையும்
தோன்றி மறையும்
இறுதிக் கணங்களும்
மனத்திடை விரிகிறது...


கிளைகளில் தொங்கும்
வௌவால்களின்
தூக்கத்தை இறுகப்பற்றிக்
கொள்ளும் பகல் பொழுதுகள்
விழித்தே இருக்கின்றன
எந்தச் சலனமும் இன்றி ..

மேய்ச்சல் நிலத்திற்குச்
செல்லும் பலியாடோன்று
நம்பிக்கையுடன்
நடந்து செல்கிறது
அடுத்த நாள் வாழ்வின்
நிரந்தமின்மையை
அறிந்தும் அறியாதவனாய்
பாசாங்கு காட்டும்
மேய்ப்பான் வழி..

எண்ணெய் தீர்ந்த
ஒற்றைச் சுடர் மீது
ஒரு நாள் வாழ்வின்
இறுதிக் கணங்களில்
கழித்துக்கொண்டிருக்கும்
சிறகுதிர்ந்த ஈசல்
போராடிக்கொண்டிருக்கிறது
அணையப் போவது தெரியாது


அந்தி சாயும் நேரம்
கடற்கரை ஒன்றில்
நிச்சயமின்மை நூல்களால்
இழைக்கப்பட்ட
மீனவனின் வலைகளில்
நிறைந்தே வழிகின்றன
கரையும் இருளின் நிறம்
தூங்கும் வௌவால்கள்
பலியாடுகளின் விழிகள்
கூடவே சிறகுதிர்த்த ஈசல்கள்..

எழுதியவர் : சிவநாதன் (28-Mar-16, 2:04 am)
பார்வை : 225

மேலே