உனக்கான பாடல்
என்
அலுவலக
அதிகாலைகளில்
அவசரமாய்
எனக்காக
சமைத்து
நீ விரல் சுட்டுக்கொண்ட
தழும்புகளோடு
பரிமாறிய நிமிடங்களும்
கேட்ட
இடத்திலெல்லாம்
கதவடைக்க
என்னிடம்
கேட்டிருக்கலாமேயென
நீ
தாலிச்சரட்டை
கழட்டி நீட்டிய
நொடிகளும்
உன்
மாதாந்திர வலிகளோடு
நீயென்
ஆடை
துவைத்துக்களைத்த
நிமிடங்களும்
என் புருஷன
மதிக்காத
இடத்தில்
எனக்கென்ன
வேலையென்று
உன் வீட்டை
ஒதுக்கிவைத்த உனது
கோபங்களும்
எனக்காக
கோயில்களில்
நீவரைந்த
பிரார்த்தனைகளும்
சுற்றி வந்த
பிரகாரச் சுற்றுகளின் எண்ணிக்கைகளும்
என் நரைமுடியை
உன் கண்மையால்
மறைத்த பொழுதுகளும்
அப்பாவை
கை நீட்டிப்
பேசாதடா என
என் சுயமரியாதை
காத்த நொடிகளும்
உன்
உள்ளங்கைச்சூட்டோடு
உள்ளே
இறங்குகிறது
என் நெற்றியில்
மரணப்படுக்கையை சுகமாக்கியபடி
- நிலாகண்ணன்