குருதி வழியும் கூர்வாள்

கிளிகளின் கீச்சல்களுடனும், குயில்களின் கூக்குரலுடனும் அன்றைய காலைப் பொழுது மிக இனிதாக புலரத் தொடங்கியிருந்தது, முகம் மலர்ந்த தாமரை போல் அங்கே ஆதவனும் மலர்ந்து கொண்டிருந்தான். மேகத்திற்க்கென்ன கோவமோ ( ஒருவேளை ஆதவன் மிக சீக்கிரம் வந்து விட்டானென்றொ?!!!), இவையனைத்திற்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பதுபோல் விலகிச் சென்று கொண்டிருந்தது. பச்சைப் பசேலென இருந்த அந்தப் பூங்காவில் பச்சைக் கிளிகளும், குயில்களும் போட்டி போட்டுக்கொண்டு இசைபாடிக் கொண்டிருந்தன, குருவிகளோ அங்குமிங்கும் பறந்து , இல்லையில்லை நடனமாடிக் கொண்டிருந்தன.
அந்த ரம்மியமான சூழலில் மனதை மறந்து வெகு தூரத்தில் இருவர் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர், அவர்கள் அருகே சென்று பார்த்தால், அட நம் தமிழரசனும் , கலையரசியும். அவர்களின் சிரிப்பொலியும், முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும் பார்த்தாலே அனைவரும் கணித்து விடுவர் அவர்கள் காதலர்களென்று. ஆம், காதல் அவர்களை அளவலாவிக்கொண்டிருந்தது, மிக நீண்ட பிரிவிற்குப் பின் நடக்கும் இணைப்பல்லவா, அதுவும் திருமணம் செய்து கொள்ள போகும் புதுமணத் தம்பதிகளாயிற்றே, அவர்களினூடே ஊடலும் அதிகமாகிக்கொண்டே சென்றது, மரத்தில் இருந்த கிளிகளோ, வெட்கத்தில் அங்கே இருந்து பறந்தே போய்விட்டது. சரி சற்றே இளைப்பாறலாமென்று, அருகில் இருந்த மரத்தினடியில் அமர்ந்தனர் இருவரும், கலையரசி தமிழின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள். கலையரசி சிவந்த முகத்துடன் தமிழைப் பார்த்து,” ஏன்டா! எப்டிடா இவ்ளோ நாள் என்னய பாக்காம இருந்த இலண்டன்ல, இங்க ஊர்ல இருக்கும்போது, பால் வாங்கும்போதும், சந்தையிலயும், கோயில்லயும் என்னையே சுத்தி சுத்தி வருவ, அங்க போன உடனே மறந்துட்டேல எனைய?” என்றுச் செல்ல கோவத்துடன் கேட்டாள். ” ஹே, லூசு, உன்னலாம் மறப்பேனா என்ன! இருந்தாலும் எதாவது தமிழ்ப்பொண்ணு மாட்டுதான்னு பாத்துட்டுதான் இருந்தேன், யாருமே கிடைக்கல″ என்று அவளைச் சீண்டினான் தமிழ். “ம்ம்ம்ம், பாப்ப, பாப்ப, கண்ணு முழிய நோண்டிர்வேன், இனிமே எவளையாவது பார்த்த , கொன்றுவேன்” என்று அவளும் சளைக்காமல் மிரட்டிக்கொண்டு செல்லமாய் சண்டையை ஆரம்பித்துவிட்டாள் தன் பிஞ்சுக்கைகளால். சண்டையில் அவளையும் கவனியாமல் ஏதோ கால்களில் குத்துகிறதே என்று சற்று எட்டி உதைத்தால், அடுத்த கணமே அம்மாவென கத்தினால், தமிழ் என்னவென்று பார்த்தான், அவள் காலில் வெட்டுப்பட்டு இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது, சற்றே மண்ணை விலக்கிப் பார்த்தான், அங்கே ஆறு அங்குல நீளத்தில், சற்றே வளைந்து இருந்ததை எடுத்தான், அது கலையரசியின் காலில் வழிந்த குருதி படர்ந்த கூர்வாள்.
அந்தக் கூர்வாளைப் பார்த்த மாத்திரத்திலேயே கலையரசி மூர்ச்சையானாள். ஆனால், தமிழரசனோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் சற்று யோசிக்கலானான் என்ன செய்வதென்று, பாவம் அவனுக்கென்ன தெரியும், இனி அவனுக்கு சிந்திக்க நேரம் கிடைக்கப்போவதில்லை என்றும், அந்தக் கூர்வாள் ஒரு மனிதனை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறதென்றும். ஆள் அரவமற்ற அந்தப் பூங்காவில், தமிழரசன் மட்டும் தனியாய் இருந்தான் மூர்ச்சையிழந்த கலையரசியுடன். இதுவரை மிகப் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த சூரியனோ, இனி நிகழப்போகும் சம்பவங்களைக் காண பயந்தவனாய் மேகக் கூட்டங்களுக்கிடையே மறையத் துவங்கினான். சற்று நேரத்தில் வானம் இருண்டு, கருமேகம் சூழத் தொடங்கியது. இவ்வளவு நேரம் இதையே கவனித்துக் கொண்டிருந்தவன் சட்டென்றுத் திடுக்கிட்டவனாய் கலையரசியின் ஞாபகம் வரவே அவளைப் பார்த்தான், இன்னும் அசையா மலரைப் போல மூர்ச்சையற்றுக் கிடந்தாள் அவள். அவளைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு அவனுடைய வண்டியை நோக்கி வேகமாக நடக்கலானான். இதற்கிடையே கருமேகமும் ஒன்றாகத் திரண்டு இடியும் மின்னலுமாய் காணப்பட்டது, இவையனைத்தும் எதுவோ கேடு நிகழப்போவதை கூறிக்கொண்டிருந்தன. இதையெல்லாம் சற்றும் காணாதவன் போல் அவன் நடக்க, மழையும் அவன் கூடவே சேர்ந்து சட சட சடவென பெய்யத்தொடங்கியது. அனால் அவன் அதற்குள்ளாகவே வண்டியை அடைந்திருந்தான். சாவியைப் போட்டு வண்டியைத் திறந்து, அதிலிருந்த முதலுதவிப் பெட்டியின் உதவியுடன் கலையரசியின் காலிற்குக் கட்டு போட்டான். அவளைப் பின் இருக்கையில் அமர்த்திவிட்டு வேகமாக மருத்துவமனையைத் தேடி வண்டியை செலுத்தினான். அவர்கள் வந்திருந்த பூங்காவோ நகரத்தைவிட்டு சற்றே தள்ளியிருந்தது, அவன் நகரத்தை அடையவே எப்படியும் அரைமணிநேரம் ஆகும், ஆனால் கலையரசியின் காலிலோ இரத்தம் நிற்காமல் வந்துகொண்டிருந்தது. மேகங்களோ அவர்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டுவதாய் தெரியவில்லை, என்றும்போல் இல்லாமல் அன்று பெய்யும் மழையில் நிலத்திற்கே விரிசல் விழும்போலிருந்தது.
தமிழரசனால் சாலையையும் பார்க்க முடியவில்லை, ஒருபக்கம் பின்னால் மனைவியாகப்போகும் தன் உயிர்க்காதலி, மறுபக்கம் விடாது பெய்யெனப் பெய்யும் பேய்மழை. பெய்த மழையில் சாலைகளும் மோசமாக மாறிவிட்டிருந்தன. குழப்பத்துடனும், விரக்தியுடனும், சோகத்துடனும் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான். அந்த அடைமழையிலும் அவன் கண்கள் மிகத் தீவிரமாய் ஏதாவது உதவி கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் ஏதோ கட்டிடம் இருப்பதுபோல் தோன்றியது, அதைநோக்கி வண்டியை செலுத்தலானான். அவன் கண்கள் பொய்க்கவில்லை,அங்கே கட்டிடமும் இருந்தது, சில மனிதர்களும்கூட. அவர்களிடம் உதவி கேட்க விரைவாக வண்டியை விட்டு இறங்கி ஓடினான்.
அங்கே !!!
யாரைப் பார்க்கக் கூடாது, யாரைப்பற்றி நினைக்கக்கூடாதென்று இந்த ஊரை விட்டு இலண்டனுக்குச் சென்றானோ, அதே முகம், அவனையே பார்க்க வேண்டியதாயிற்று. கடந்தகால நினைவுகள் அவனை ஆட்கொண்டன, தமிழரசனின் அழகான குடும்பம், அம்மா, அப்பா, அக்கா அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அழகான இரவுப்பொழுதில், சற்றும் யாரும் எதிர்பாராமல் நுழைந்த அந்த கொலைபாதகன் சில நொடிகளில் அனைவரையும் தமிழரசனின் கண்முன்னே சுட்டுக்கொன்றான். இவையெல்லாம் அவன் கண்முன்னே கனநேரத்தில் நடந்து முடிந்திருந்தது. இவையனைத்திற்கும் காரணம் தமிழரசனுக்கும் மலையசாமிக்கும் இருந்த தொழில்பகையே, இதனாலேயே இனி இந்தத் தொழிலும் வேண்டாம், இழப்பதற்கு இனிமேலும் ஏதுமில்லையென்று இலண்டனுக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அதே மலையசாமியைத்தான் அங்கே அந்த கட்டிடத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
இந்த உலகத்தில்தான் எத்தனை விந்தைகள், ஒரு குடும்பத்தையே கொலைசெய்த “கொலைபாதகனின் பெயர் மலையசாமி” யாம்.
திகைத்து நின்ற தமிழரசனை மலையசாமி ஏளனத்துடன் தட்டி எழுப்பி நிகழ்காலத்திற்குக் கூட்டி வந்தான். தமிழரசனைப் பார்த்து நக்கலாய்க் கேட்டான் மலையசாமி,” ஏன்டா! போனா போகட்டும்னு உன்னைய உயிரோட விட்டா, திரும்ப என் கண்ணு முன்னாடியே வந்து நிக்கிறியேடா! என்ன, வாழ்க்கைய வாழ ஆசையில்லையா?”, தமிழரசனின் கண்கள் கோவத்தில் சிவக்க மலையசாமியை அடிக்கப் பாய்ந்தான். மலையசாமியோ தமிழரசனை இலாவகமாகத் தூக்கி ஓரத்தில் எறிந்தான். தமிழரசனை ஒரே அடியில் கொன்று விட வேண்டுமென்று கையில் கிடைத்த கட்டையை எடுத்துக்கொண்டு வெறி பிடித்த ஓநாயைப்போல் அவனை நோக்கிப் பாய்ந்தான், வேகமாக வந்தவன் தமிழரசன் முன்னாடியே வெட்டுப்பட்ட மரம்போல சாய்ந்தான், கீழே இரத்தம் பெருகி ஓடியது. தமிழரசன் திடுக்கிட்டுப் பார்த்தான் என்ன நடந்ததென்று, அவனே மலையசாமியைக் கொன்றிருந்தான். ஆம், அவனுக்கே தெரியாமல் அவன் கையில் இருந்த கத்தி மலையசாமியின் குடலைக் கிழித்திருந்தது. ஆம், அதே அந்தக் குருதி படர்ந்த கூர்வாள்தான், பூங்காவிலிருந்து வரும்பொழுது அந்தக் கத்தியைக் கொண்டு வந்தது ஞாபகம் வரவே, அங்கேயே பித்துப்பிரமைப் பிடித்தவன் போல் உட்கார்ந்துவிட்டான்.
இத்தனை நேரம் அங்கே நின்றுப் பேசிக்கொண்டிருந்த மலையசாமி, தம் கண்முன்னே பிணமாய்க் கிடப்பதை, அங்கிருந்தவர்கள் தம் கண்களையே நம்ப முடியாதவர்களாய் நின்றிருந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட தமிழரசன், அந்தக் கூர்வாளையும் எடுத்துக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு தன் வண்டியை நோக்கி ஓடலானான். வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து கிளம்பினான். சற்று தூரம் சென்றவுடன்தான் அவனுக்கு கலையரசியின் நினைவே வந்தது. வண்டியை ஓரமாய் நிற்கவைத்துவிட்டுக் கலையரசியைப் பார்த்தான். பின் இருக்கை முழுவதும் இரத்தத்தாலேயே நனைந்திருந்தது. ஆம், இரத்தம் உறையவில்லை, தமிழரசிக்கு சிறு வயதிலிருந்தே இந்த பிரச்சினை இருந்தது, ஊசி போட்டாலும் கூட இரத்தம் உறையாமல் வந்து கொண்டிருக்கும், இவ்வளவு பெரிய கத்தி பட்டால்?!!
தம் தாய், தந்தை, தமக்கை அனைவரையும் இழந்த தனக்கு, தம் வாழ்வில் துணையாக, எதிர்காலத்தில் தன்னுயிர் பாதியாக இருப்பாலென்று இதுகாறும் கனவுடன் இருந்தவன், தன் காதலி, இரத்த வெள்ளத்தில் அங்கே பிணமாய்க் கிடப்பதைக் கண்டு அவன் மனம் புழுவைப் போல துடித்தது, நிலையற்றுத் தவித்தது. தமிழரசனின் காதல் தன் உதிரத்தில் கலந்தது என்று கலையரசி அடிக்கடிச் சொல்வாள். அனால், அவளே தற்பொழுது உதிரமில்லாமல் உயிரற்ற ஜடமானாள். தந்தியில்லா வீணையைப் போல அங்கே தனியாய்க் கிடந்தான் தமிழரசன்.
நிலையில்லா இந்த உலகில், பாவம் நிறைந்த இந்த உடலின் மேல் ஆசைகொண்டு, உண்மையான ஆன்மாவை உணராமல் திரியும், இந்த மனிதர்களையும், அமைதியாக அங்கே நடப்பதைப் பார்த்துக்கொண்டும் இருந்தது அந்தக் குருதிக் கறை படிந்த, குருதி வழியும் கூர்வாள்.

எழுதியவர் : வெண்தேர்ச்செழியன் (28-Mar-16, 2:22 pm)
பார்வை : 214

மேலே