போய் வருகின்றேன் மகனே
பெண் அகிலத்தின் ஆதாரம் அன்பின் அடித்தளமாய், தாயாகி, தாரமாகி சேயாகி, இன்னும் எத்தனை எத்தனையோ உறவாகி உலகின் ஓட்டத்திற்கு உருச்சேர்ப்பவளே பெண்.
அம்மா எனும் பாத்திரத்தில் தன்னைக்கரைத்து வாசம் வீசி எம்மில் வசந்தம் வீசச்செய்பவள். இப்படியாக எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்வின் ஆதாரமாக விளங்குகின்ற தாயானவள் தன் பிள்ளைகளுக்காக எத்தகைய துயரத்தையும் துச்சமென தூக்கியெறிந்து தியாகத்தில் திரியாகி ஒளிவீசும் உயிர்ப்பிளம்பு.
இத்தகைய ஒரு ஒளிப்பிளம்பினை என் கற்பனையினூடாக இக் கதையில் காட்சிப்படுத்துவதுடன் உணர்வுகளிற்கு மதிப்பளிக்காமல் அதீத விஞ்ஞானத்தின் பாதையிலே பயணிக்க முற்படுகின்ற புதியதோர் மனமிழந்த மனிதர்களையும் கோடிட்டுக்காட்ட முற்பட்டுள்ளேன்.
.......................................................................................................................................................................................
போய் வருகின்றேன் மகனே...
*******************************************
பிளைற் இஸ் றெடி ரு லான்ட் அற் லோடிக் எயார்போர்ட் இன் பியு செக்கன் பசன்ஸேஜ் பிளீஸ் வெயா யுவ சீட் பெல் ட் (Flite is ready to land at Lodic airport in few second passengers please wear your seat belts)
விமானப்பயணத்தின் ஆசனங்களின் சொகுசில் அயர்ந்து தூங்கிவிட்ட அன்னம்மாப்பாட்டி தஸ் புஸ் என்று ஏதோ ஒலிபரப்பப்படும் சத்தத்தினைக்கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தவளாய் சுற்றும் முற்றும் விறு விறு என பார்வையைச் செலுத்தினாள். கண்ணயர்ந்தபோது தெரிந்த அதே அன்னிய முகங்கள்.
“என்னத்த உந்த இங்கிலிசில சொன்னாங்களோ தெரியாது .. ஒண்டுமே விளங்கேல்ல இதுக்குத்தான் சொல்றது படிச்சிருக்கோணுமெண்டு, அது சரி என்ர அப்புவும் ஆச்சியும் பட்ட கஸ்ரத்தில எனக்கெங்க படிக்கக்கிடைச்சுது..ம்ம் ஆனா ஒரு சந்தோசம் என்ர பையன் படிச்சிற்றான் என்ர மகன் படிச்சிற்றான்.. அதாலதானே ஏதோ ஒரு ஸ்கொலசிப்பில வந்து இந்த நாட்டில இருக்கிறான் அதுகும் ஏதோ றோபோக்களோட வேல செய்றானாம் ம் ம் நானும் இத்தின நாளைக்கு பிறகு என்ர மகன பாக்க போறன்..ம்ம்ம்
நீண்ட பெருமூச்சொன்றை உள்ளிளுத்து வெளியிட்டாள். “சால் ஜ கெல்ப் யு மெடம்? (Shall I help you madam?)
அன்னம்மா பாட்டிக்கு புரியாத மொழியில் ஏதோ கேட்டுக்கொண்டு வந்த விமானப் பணிப்பெண் சீட் பெல்ட்டை பூட்டிவிட்டாள்.
“ஓ…. இதத்தான் கேட்டுக்கொண்டு பிள்ள (பொண்ணு) வந்திருக்கு என்ன வடிவான பிள்ள ஆனா இரவு பகலெண்டு இப்பிடி அந்தரத்தில பறந்துகொண்டு வேல செய்யுது பாவம்”தனக்குள்ளே முணுமுணுத்தாள்.
தேசப்படத்திலே தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குக்கிராமத்திலே பிறந்து அங்கேயே வளர்ந்து கோயில் குளம் வீடு வாசல் என்று இத்தனை காலமும் தனது கிராமத்து மண் வாசனையோடு உறவாடி புளுதி படிந்த கால்களைத் தட்டியபோது எழுந்த மண்வாசனையை நுகர்ந்தபடி பொழுதைக்கழித்த பாட்டிக்கு நேற்று விமான நிலையத்திற்கு புறப்பட்டதில் இருந்து நடப்பவை எல்லாமே அதிசயமாகவும் ஆட்சரியமாகவுமே இருந்தன.
“ஜயோ கடவுளே இதென்ன பிளேன் விளப்போகுதோ …. இப்பிடி ஒரு ஆட்டம் ஆட்டுதே … கடவுளே.” தனது கிராமத்துத் தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்தவளாய் சிறியதொரு அசைவோடு தரை இறங்கிய விமானத்தில் இருந்து மெல்ல வெளியே வந்தவளை சக்கர நாற்காலியில் அழைத்துச்சென்ற நபர் சகல ஆவணப்பதிவுகளையும் முடித்து விருந்தினர் வரவேற்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
பழக்கமற்ற பல நடைமுறைகளால் படபடவென அடித்துக்கொண்ட மனதை ஒருநிலைப்படுத்தி மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
“அட அது… அது… என்ர பையன் கடவுளே என்ர மகன்… எப்பிடி இப்பிடி இவளவு மாறி இருக்கிறான்.. சின்ன வயசில பாத்ததவிட ரொம்ப மாறி இருக்கிறான். மெல்ல நாற்காலியில் இருந்து எழுந்தவளாய்
“மகன்… என்ர பையன்…” நீண்ட நாள் பிரிவு தொண்டையை அடைக்க ஓ என்று அழ வேண்டும்போல வெளிப்பட்ட குரலை மெல்ல அடக்கினான் பையன்.
“அம்மா இங்க எல்லாம் இப்பிடி எல்லாம் பெரிசா சத்தம் போட்டுக் பேச கூடாது. சத்தம் போடாதீங்க… வீட்ட போய் பேசலாம்.”
தாயின் கையைப்பிடித்து மெல்ல அழைத்துச் சென்றவன் “ அம்மா இதில வெயிற் பண்ணுங்க கார் எடுத்திற்று வாறன்”என்றபடி நகர்ந்த பையனை கண் கொட்டாது பார்த்தபடி
“அட காரோ” என்று அதிசயித்த மறு நிமிடம் “ஏறுங்கம்மா”என்று கார்க் கதவைத் திறந்து விட்டான்.
“ஆ அம்மா, மீற் மை வைப் யசுசி சங் அன் மை சண் டொங்” (Ah Amma meet my wife Jasusi sang and my son Dong)
மகன் அறிமுகப் படுத்திய காரில் இருந்த பெண்ணையும் பையனையும் பார்த்த பாட்டிக்கு மயக்கம் வராத குறையாக “ என்ன வைபோ வைப் எண்டா உன்ர மனுசி தானே?” மெல்லக் கேட்டாள்.
ஒம் அம்மா… சொல்லோணும் எண்டு நினைச்சனான் பிறகு விட்டிற்றன் வரேக்க பாப்பீங்கள்தானே எண்டு... மகனின் பதிலைக்கேட்டு வார்த்தைகள் அற்று தொண்டை அடைக்க “ஓ… வீட்ட போவம்” அவரோகணத்தில் முனகினாள்.
இத்தனைநாட்களாக மெல்ல மெல்லக் கட்டி வைத்திருந்த கோட்டையில் சிறிய துவாரம். “போவம்” மீண்டும் முனகினாள்.
காற்றை கிழிக்கின்ற வேகத்தடன் விரைந்த கார் வானை முட்டுவதுபோல அமைந்திருந்த பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் நடுவில் சென்று நின்றது.
புதிய பூமி! புதிய உலகம்! மருமள் பேரன் என்று புதிய உறவு! இன்னும் புதிய பல பழக்க வழக்கங்களுடன் புதிதாய் தெரிந்த பழைய பையன். இயந்திர மயமான வாழ்க்கை மனதை பிசைகின்ற ஆனால் வெளியே சொல்ல முடியாத ஏதோ ஓர் வெறுமையோடு நாட்கள்கூட நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன.
“என்னம்மா இப்பெல்லாம் நீங்கள் பேசிறதயே குறைச்சிற்றீங்கள் ஏனம்மா? பிடிக்கேல்லயா இங்கத்தே லைப்?
ஒரு நாள் மகன் கேட்டான்
அவனால் புரிந்து கொள்ள முடியாத மெல்லிய சிரிப்பொன்றை மட்டும் உதிர்த்தவளாய் “இல்ல மகன் அதெல்லாம் அப்பிடி இல்ல” பதிலளித்தாள்.
“சுத்தமான சுகந்தக் காற்றும் சுகமான மண்ணும், சுருண்டு படுக்கும் பாயும் சுதந்திரமான என்னூரும் ஏன் சுகமான என் மொழியும் கூட தொலை தூரத்தில் தான்….” தொண்டைவரை வந்த வார்த்தைகளை வாய்க்குள் விழுங்கிக் கொண்டாள்.
கிராண்மா வாய் (Grandma Bye) செல்லமாய் சிணுங்கிக்கொண்டு மருமகளின் பின்னால் ஒடிச்சென்று கொண்டிருந்த பேரனை பார்த்த பொழுது சற்று முன் தோன்றிய வேதனை மெல்ல தூங்கிப்போனது.
“அம்மா…. என்னம்மா கேட்டுக்கொண்டிருக்கிறன் நீங்கள் ஏதோ யோசிச்சுக் கொண்டு இருக்கிறீங்கள்” பையனின் குரலில் மீண்டும் சுதாகரித்தாள்.
“ம்ம்ம்…”
“வாங்க இண்டைக்கு பின்னேரம் பங்சன் ஒண்டுக்குப் போய்ற்று வருவம்”
“நானும் கட்டாயம் வரோணுமோ”விருப்பமற்றுக் கேட்டாள்
“ஒம் அம்மா வாங்க ஒரே இப்பிடி தனிய உட்காந்திருந்து என்ன செய்யப் போறீங்க? ஆனா எங்கட றோபோ ஜின் னுக்கு உங்களோட கதைக்கிறதுக்கு புறோகிறாம் பண்ணி வச்சிருக்கிறன். நாங்கள் வேலைக்கு போனா நீங்கள் அதோட கதைக்கலாம், பொழுது போக்கா இருக்கும் ஆனா நீங்கள் தான் அதோட கதைக்கிறீங்களில்ல”
பையன் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவளிடம் இருந்து மீண்டும் அதே சிரிப்பு ஆழமான சிரிப்பு..
“பையன படிக்க வைச்சு அவனுக்கு ஸ்கொலசிப் கிடைக்கிற அளவுக்கு முன்னேற்றி விட இப்ப றோபோவ எனக்கு துணையா விடுற அளவுக்கு படிச்சிருக்கிறான் ம் ம் …” வேதனை கலந்த சிரிப்பொன்றை சிந்தியவளாய்
“சரிப்பா நான் பங்சனுக்கு வாறன்”
என்றபடி மெல்ல நகர்ந்து தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு மெத்தையில் சரிந்தாள். “ஏதோ ஒரு நாட்டில இயந்திர மனித மாநாடு நடக்கப் போகுதாம் இன்னும் கொஞ்சக் காலத்தில மனிதர்களை எல்லாம் இயந்திர மனிதன் கட்டுப்படுத்துமாம்” உள்ளுர் பள்ளிக்கூடத்து வாத்தியார் ஊரில் சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. இதயம் கனத்தது. இமைகள் நனைந்தன. மெல்ல உறங்கிப்போனாள்.
“அம்மா றெடியா” மகனின் குரலில் துயில் கலைந்தபோது மாலை என்பது மனதில் உறைக்க “இதோ இப்ப கொஞ்ச நேரத்தில வாறன்” தனக்கு பழகிப்போன சேலையை சுற்றிக்கட்டிக் கொண்டு மகனின் குடும்பத்தோடு புறப்பட்டாள்.
மாலை நேரத்திற்குரிய விளக்குகளின் ஒளியில் கடிகாரமுள்ளின் சீரான ஓட்டம் உலகத்தின் தத்துவத்தை உரக்கச் சொல்லியது. மனிதர்களைப் போல் அன்றி இந்த முள் மட்டும் தான் ஏனோ என்றுமே ஒரே சீராய் ஓடிக்கொண்டிருக்கிறது. வண்ண வண்ண உடைகளோடு அலங்காரமாய் வந்திருந்த விருந்தினர்களை வரவேற்று அவர்களோடு சிற்றுண்டிகளைப் பரிமாறி புகைப்படங்களினை எடுத்துக்கொண்டிருந்த முதியவரின் அருகே அன்னம்மா பாட்டியும் தனது மகன் மருமகளுடன் புகைப்படமொன்றை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.
“என்ன நிகழ்ச்சி அது? ஏன் அவர் இப்பிடி விருந்து வச்சவர்” மெல்ல மகனிடம் கேட்டாள்
“அம்மா அது சேய் வாய் பாட்டி (Say Bye party) உங்களுக்கு விளக்கமா சொல்லோணு மெண்டா அது போய்ற்று வாறன் எண்டு சொல்ற பாட்டி”
“என்னது போய்ற்று வாறன் எண்டு சொல்ற பாட்டியோ புரியலப்பா” மீண்டும் கேட்டாள்
“யேஸ்(Yes) இங்க இப்பிடித்தான் வாழ்க்கையில எல்லாத்தையும் வாழ்ந்து முடிச்சிற்றன் எண்டு நினைக்கிற வயசு போன ஆக்கள் தங்களுக்கு இனியும் வாழ விருப்பம் இல்ல எண்டு தோணினா அத அரசாங்கத்துக்கு அறிவிச்சா அவேட விருப்பத்த அரசாங்கம் நிறைவேற்றி அவேட வாழ்க்கைய முடிச்சு வைக்கும். அப்பிடி வாழ்க்கைய முடிக்கிறதுக்கு முன்னால இப்பிடி ஒரு பாட்டி குடுத்து எல்லாரிட்டையும் இருந்து விடை பெறுவினம். இது இங்க சகஜம்”மகன் சொல்லிக்கொண்டிருந்தான்.
“ஆ….அப்பிடியா?” வேறு வார்த்தைகள் அற்று மௌனியானாள்.
“கிராண்மா..” என்று கூப்பிட்ட செல்லப் பேரனின் குரல் கூட அவளது காதுகளில் விழவில்லை.
மெத்தையில் புரண்டாள். தூக்கம் தொலைதூரம் போய் தொலைந்து போனது. சிரிப்புடன் விடைபெற்ற முதியவரின் முகம் மட்டும் நினைவுகளில் நிழல் ஆடியது. இனம்புரியாத வலி… ஏற்றுக்கொள்ள முடியாத நிலை.. நகரும் நாட்களில் நிசப்தமாய் இவள் பயணம்.
அலுவலகக் களைப்புடன் வீட்டிற்கு வருகின்ற மருமகளின் முகம் இன்று மட்டும் ஏனோ சற்று வித்தியாசமாய் கண்களில் நீர்க்கோர்ப்புடன்….
மொழி புரியாவிட்டாலும் உணர்வுகள் புரிந்தவளாய் மருமகளை உற்று நோக்கினாள். வேற்றுப் பெண் என்றாலும் தன்னை கடிந்து ஒரு வார்த்தை கூறாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்ற மருமகள் மீது அதீத அன்பொன்று இருக்கத்தான் செய்தது.
மாலையில் மகனிடம் மெல்ல வினவினாள்.
“அம்மா யசுசி சங் அழுததுக்கு காரணம் வேற. நாங்கள் ஒரு பொம்பிள பிள்ளைக்கு லாப்பில விண்ணப்பிச்சிருந்தம். அத தர ஏலாதெண்டு சொல்லிற்றாங்க. அதால தான் யசுசி சங் அழுதவா”
“என்ன லாப்பில விண்ணப்பிச்சனீங்களோ? விளையாடாத”
“ஆமாம்மா இங்க இப்பிடித்தான். எங்களுக்கு பிள்ளையள் வேணுமெண்டா அவைய வளக்கிறதுக்குரிய வசதி வாய்ப்புக்கள எல்லாம் செய்திற்று எப்பிடியான குழந்த வேணுமெண்டு லாப்பில விண்ணப்பிச்சா குளோனிங் முறையில உருவாக்கி வளத்து தருவினம்”
“உங்கட பேரன கூட இப்பிடித்தான் எடுத்தனாங்கள்”“போன வருசம் இப்பிடித்தான் ஒரு பொம்பிள பிள்ளைக்கு லாப்பில விண்ணப்பிச்சிருந்தம் எங்கட குடும்பத்தில மொத்தம் நாலு பேர் இருக்கிறதால ஆக்கள் கூட எண்டு றிஜக் பண்ணிற்றாங்க” மகன் சொல்லச் சொல்ல எழுந்து நடக்க இயக்கம் அற்றவளாய் கதிரையில் சரிந்தாள்.
உள்ளம் நடுங்க உணர்வுகள் ஒடுங்கி உடல் தள்ளாடியது. ஊரில் இருக்கின்ற போது அடிக்கடி உச்சரிக்கும் கடவுளைக் கூட கூப்பிட மனமின்றி தூரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தாள். இனம்புரியாத வலியோடு அவளின் உலகம் போர்க்களமாக மாறியது. ஓராயிரம் சிந்தனைகள் கண நேரத்தில் கருவெடுத்து கார்கால மேகங்களாகி கருமழை பொழிந்தன. பையனை படிக்கவைத்து விட்டேன் என்ற மகிழ்சியில் அவள் கட்டிய கோட்டை கண்முன்னே கரைந்து காணாமற்போனது.
நாட்டகள் மெல்ல நகர்ந்தன. வெறுமையாய் கழிந்த அவளின் வெற்றுப் பொழுதுகளிற்கு விடை கொடுத்து தன் மகனிற்கு மகிழ்வு கொடுக்கத் துணிந்தாள். தனது உள்ளத்து ஓட்டத்தினை ஒரு நாள் மகனிடம் வெளிப்படுத்தினாள்.
“தம்பி நாங்கள் ஒரு நாள் அந்த பாட்டிக்கு போனம் ஞாபகம் இருக்கா? அதே போல நானும் பாட்டி குடுக்கலாம் எண்டு இருக்கிறன். அப்பிடிச்செய்தா உங்களுக்கும் ஒரு பொம்பிளப்பிள்ளய எடுக்கலாம் தானே…”
மொனமாய் கேட்டுக்கொண்டிருந்த மகன் “சரி அம்மா.. உங்களுக்கு ஓகே எண்டா எனக்கும் ஓகே உங்களுக்கு எது விருப்பமோ அத நான் செய்றன்” என பதிலளித்தான்.
அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் அலங்கார ஆடைகளுடன் கதாநாயகியாய் நிமிர்ந்து நின்ற அன்னம்மாவின் கண்கள் தூரத்தில் விருந்தினர்களின் நடுவே சிற்றுண்டிகளை பரிமாறிக்கொண்டிருந்த மகனில் நிலைத்திருந்தது. சிறிய வயதில் தந்தையை இழந்ந அவனுக்கு குடும்ப வறுமை தாக்காது மடியோடிருத்தி மார்போடணைத்து அமுதூட்டிய கணங்கள் நினைவோடு நிழல்கோர்த்தது.
தனக்கு கிடைக்காத கல்வி தன் மகனுக்கு கிடைக்கவேண்டும் என்று அவள் கண்ட கனவு மெய்ப்பட்டு இன்று… இப்படி மெஞ்ஞானத்தின் விஞ்ஞானமாய்….
சேய் பாய் பாட்டி (Say Bye party) இதுநாள் வரை அவளது வாய்க்குள் வராத ஆங்கிலம் இன்று வந்தது மெல்லச் சொல்லிக் கொண்டாள்…“சேய் பாய் பாட்டி….உன்ர சந்தோசம் தான் என்ர சந்தோசம்” அவளது கண்கள் ஈரமாகி இருந்தன.
மகனே, என் அன்பு மகனே!
முதன் முதலாய் அவனை மடிமீது வைத்து மார்போடு அணைத்தவேளை தோன்றிய உணர்வோடு மெல்லத் தன் மொழியில் சொல்லிக்கொண்டாள் “போய்ற்று வாறன்”
முற்றும்.