காலச்சுவடுகள் 10-சுஜய் ரகு

காதல் வயசு
--------------------
கண்ணுக்குள் ஒரு சத்தம் - அது
கனவுகள் போடும் யுத்தம் - ஒரு
பெண்ணின் மனசு புரிபடாமல்
போராட்டம் தான் நித்தம்

சிந்தைக்குள் அவளி ருந்தாள் -தினம்
சிறகடித்துப் பறந்தாள் - என்ன
விந்தையிது இமை மூடியும்
விழிகளுக் குள்ளேத் தெரிந்தாள்

ஆணி யிறங்கா உள்ளம் - அட
அதிலா இன்று பள்ளம் - இள
வேனிற் காலம் உருவாகி
இடித்ததோ சிறு வெள்ளம்

அந்தியிற் பூக்கும் கனவு - ஆழ்
மனதில் உன் நினைவு - முழுச்
சந்திரன் வந்த பிறகும் கூட
சாகாமல் எத்தனை இரவு

பெண்களில் நீயொரு புதுமை - நீ
பேணிடத் தகுந்த பதுமை - உன்
கண்களைக் கண்ட காளயர்க்குக்
காணாது போகும் முதுமை

தெருமுனை வரைஉனைக் காத்தாய் - பின்
திரும்பி ஏனடி பார்த்தாய் - அந்த
ஒருநொடிப் பொழுதில் உலகையே-என்
உள்ளங் கையில் சேர்த்தாய்

சொல்லில் இனிமை தவழும் - அடி
சொர்க்கம் கூடக் கவிழும் - உன்
உள்ளில் தோன்றி உதட்டில் வருகிற
வார்த்தைக ளெல்லாம் பவளம்

புவியில் நிலவென வந்தாய் - அழகுப்
புன்னகை யொன்று தந்தாய் - என்
கவியில் விழுந்த பனித்துளிஎனினும்
கண்கள் குளிர்ந்து நின்றாய்

இமைகளில் இல்லை உறக்கம் - பெண்ணே
என்றுன் இதயம் திறக்கும் - அந்த
இமயம்கூட உன்னெழில் கண்டால்
இருப்புக் கொள்ளாமல் சறுக்கும்

வசந்தம் வந்த நேரம் - தமிழ்
வார்த்தைகள் ஏனோ தூரம் - அடி
நெசந்தான் உன்னைக் கவியில்பாடக்
கற்பனைக்கில்லை வீரம்

நடந்தால் இசைக்கும் கொலுசு - சற்றே
நழுவிப் போகுது மனசு - என்னைக்
கடந்தும் கண்முன் காட்சிதருகிறாய்
காரணம் காதல் வயசு !
---------------------------------------------------------
இத்தொடரில் எனக்கும் வாய்ப்பளித்த தோழர் திரு,கவித்தா அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன் ....!!

எழுதியவர் : சுஜய் ரகு (28-Mar-16, 8:46 pm)
பார்வை : 124

மேலே