நத்தைவிடு தூது

டீச்சர்
பாடதிட்டத்தை பரிசீலியுங்கள் டீச்சர்
தொலையாமல் தேடலும்
புரியாமல் பாடமும்
அறியாமைபுரத்தின் அட்ரஸ் என்று
அறியுங்கள் டீச்சர்

குதிரை - வண்டி இழுக்கும்
கழுதை - பொதி சுமக்கும் என
கற்றுத் தந்தீர்கள்
நாங்கள் குழந்தைகளா ? கழுதைகளா ?
பிறகேன் இந்த
புத்தகப்பொதி சுமக்கும் விதி ?

கோலெடுத்தால் குரங்காடும் என்றீர்கள்
நாங்களும் ஆடுகிறோமே
டார்வின் கொள்கை தவரறா டீச்சர் ?
நாங்கள் மனிதனிலிருந்து வந்த குரங்குகளா ?

இடியின்குரலில்
"படி "என்பீர்கள்
படிக்கிறோம்
ஏடுகள் கிழிய கிழிய
எழுத்துகள் அழிய அழிய
எப்போதும் படிக்கிறோம்

வீட்டுப்பாடம் தந்துத்தந்து
வெண்டைக்காயாய் விரல் ஒடித்தீர்கள்

அறைகுள் எங்களை
இருத்தி, துருத்தி
தரைச் சிலுவையில்
அறைந்துவிட்டீர்கள்!

வகுப்பறையில் சிறை வைத்து
விடுதலைப்போராட்டத்தை
நீளமாய் நடத்துவீர்கள்
அப்போது
கடிகார காந்தி முள்
பொடி நடையாய் நடந்துவந்து
தற்காலிக சுதந்திரம்
பெற்று தரும்
அதை அவசரமாய்
அறிவிக்கும்
ஓர் தண்டவாளத் துண்டும் - அதை
முத்தமிடும் இரும்புத் தண்டும்.
அந்ந அறிவிற்ப்பிற்கே
செவிகள் தவமிருக்கும்!

கோணார் உரையின்
கேள்வி - பதில்களை
மனசுக்குள் நகலெடுக்கும்
மனித எந்திரங்களாய்
மாற்றியதைத் தவிர
வேறென்ன செய்தது
உங்கள் கல்வி?

பாடத் திட்டத்தைப் படைக்கும்
மனித பிரம்மாக்களே
அறிஞர் பெருமக்களே
மூளையின் கொள்ளளவு
தெரியும் உங்களுக்கு
மாணவனின் கல்லளவையும்
மனதிற் கொண்டால்
பாடமுறை சிருஷ்டிப்பில்
எள்ளளவும் குறைகள்
இருக்காது ஐயா!

மனித வெடிகுண்டு போல்
மனித உரை நூலாய்
தேர்வறையில் நுழையும்
நிர்பந்தம் நீக்குங்கள்

பேடுகளின் முதுகில்
ஏடுகளின் சமையை
ஏற்றி வைப்பதை நிறுத்துங்கள்

பாலைவனத்தில்
கிணறு தோண்டச் சொல்லும்
பாடத்திட்டத்தை மாற்றுங்கள்

நந்தவனத்தில் நடந்து கற்கும்
புதிய திட்டம் காட்டுங்கள்!

நத்தைவிடு தூது - இது
செவிசேர நாளாகலாம்
பாடத் திட்டமிதை பரிசீலித்தால்
பள்ளிக்கூடங்கள் பாஸாகலாம்!

எழுதியவர் : விநாயகன் (29-Mar-16, 6:27 pm)
சேர்த்தது : விநாயகன்
பார்வை : 323

மேலே