பெரும் பாழ் நிகழ்வினில்

பெரும் பாழ் நிகழ்வினில் சூது கொண்ட நாள் இது
சட்டென்று முறிந்து விட்டச்சொற்களால்
சில அச்சாரங்களுக்கு அபத்தமாக வாய்ப்பு
வழுகியும் விலகியும் நின்ற மனமரமொன்று
இக்கோடைகண்களுக்கு சரிவது நிதர்சனமாக்கப்பட்டு விட்டது
யாரேனும் சொல்லும் முன்பு
அமைதிக்குள் வந்துவிட்டது அந்தப்புயல்
இதன் உச்ச கோரமே ஊமைதான்
மூக்கறுபட்டவனின் விழிகள்
கீழ் நோக்கி பார்த்துப் பார்த்து
பின் வெறி நாயின் பார்வையாகி விட்டது.
வேடிக்கைப் பார்க்கும் ஜனத்தின்
பார்வை நீட்சிக்குள் பாவமும்
உள்ளார்ந்த சுய முள்ளும் குத்திக் கொண்டிருந்தது.
அத்தருணத்தில் தான் வந்தாள் மகாலட்சுமி
" சித்தப்பா, வீட்டுல பூசணிப்பூ இருக்கா
அம்மா நேத்திக்கே கேட்டுச்சுன்னு.
ஒத்த வரப்பு தான் எத்தனை வம்சக் காலடிகளை
வாங்கியிருக்கும். எப்படி வெட்டி வீச அக்கால்களை
என நினைத்தவர் பூசணிப்பூவை பறித்துக் கொடுத்து
மெல்ல வெளியேறினார் தன்னை விட்டு.

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (29-Mar-16, 5:58 pm)
பார்வை : 70

மேலே