எச்சில்
வண்டின் எச்சில் தேனாகும் - நல்
நத்தையின் எச்சில் முத்தாகும்
வெண்பாற் கடலைக் கடைகையிலே
விளைந்த எச்சில் அமுதாகும்!
சிலந்தியின் வாயில் வடிகின்ற
எச்சில் விரிக்கும் வலையாகும்.
நீள்சிறைப் பறவையின்* எச்சிலுமே * swift /swallow
கூட்டைக் கட்டும் சாந்தாகும்.
கன்றினை நக்கிடும் தாய்ப்பசுவின்
உமிழ்நீர் எச்சில் பன்னீரே!
நலிந்தோர் துயரால் கலங்குகின்ற
கண்களின் எச்சில் கண்ணீரே!
மேகத்தின் எச்சில் மழையாகும் - விஷ
நாகத்தின் எச்சிலும் மருந்தாகும்.
தேகங்கள் புணர்ந்து உணர்கின்ற சுக
போகத்தின் எச்சில் அன்றோ நாம்!.
வண்ணங்கள் குழைத்துத் தூரிகையால்
துப்பும் எச்சில் ஓவியமே!
எண்ணங்கள் இணைத்து எழுத்தாக
உமிழும் எச்சில் காவியமே!