அழியாத கோலம்
வழக்கம் போல் நடைபெறும் நிகழ்வுதான். இதோ இங்கே சாலையின் ஓரம் கல்லூரி சென்றுவிட்டு பேருந்து பிடிக்க வந்து கொண்டிருக்கும் பெண்ணை ஐந்து நிமிடமாக பின் தொடர்ந்து வந்தான் அவன். மூன்று வருடமாக கண்களால் மட்டுமே அவளைப் பின் தொடர்ந்தவன் இன்று காதலை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் கால்களாலும் காதலுடன் பின் தொடர்ந்து வந்தான். அதை உணர்ந்த அவளும் நடையில் வேகத்தைக் கூட்டிக்கொண்டே நகர்ந்தாள்.
“வேணி கொஞ்சம் நில்லு. உன்கிட்ட பேசனும்.”- முகிலன்.
அவள் பதில் ஏதும் அளிக்காமல் நடப்பதிலேயே குறியாய் இருந்தாள். சற்று வேகமாய்ச் சென்று அவளைக் குறுக்கிட்டான் முகிலன்.
“இப்ப எதுக்கு என் பின்னாடி வரீங்க. யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க. தயவு செஞ்சி என்ன போகவிடுங்க.” வேணி.
“நான் சொல்வத ஐந்து நிமிடம் கேளுங்க அதற்குப் பிறகு நான் பின்னாடி வரமாட்டேன்.”-முகிலன்.
“சரி சொல்லுங்க.”-வேணி.
“உங்கள எனக்கு பிடிக்கும். எனது வாழ்கைத் துணையா நீங்க வர சம்மதமா?”-முகிலன்.
“முதல்ல நீங்க யார்னே எனக்குத் தெரியாது.”-வேணி.
“மூனு வருடமா பின் தொடர்ந்து வரேன். என்ன உண்மையாலும் யார்னு தெரியாதா?”-முகிலன்.
“பின்னாடி சுத்துறவங்களெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல.” வேணி.
“சரி நானே சொல்றேன் என்னைப் பத்தி. என் பேரு முகிலன். நான் உங்க ஊருக்கு பக்கத்து ஊருதான். ஏன்னு தெரியல உங்கள எனக்கு பிடிச்சிருக்கு. நான் முதல்ல இது வயசுல வர கோளாறுனு நினைச்சேன். வயசுக் கோளாறுனா அது உங்க உடல் மீது மட்டும் தான வந்துருக்கனும். ஆனா இது உங்க உள்ளத்து மேலயும் தான் வந்துருக்கு. எனக்கும் தெரியும் நீங்களும் என்ன அடிக்கடி பார்ப்பிங்க. அதான் உங்களுக்கு என்னை பிடிச்சிருகா என்று கேட்க வந்தேன்.” -முகிலன்.
“இத பாருங்க நான் அந்த மாதிரி எல்லம் உங்கள நினைக்கல. எனக்கு அப்படி ஒரு எண்ணமும் உங்க மேல இல்ல. அதுவும் போக…” வேணி.
“அதுவும் போக …”-முகிலன்.
“நான் என்ன சாதினு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். நீங்க வேற சாதி. நானும் நீங்களும் பேசுறத பார்த்தாவே எங்க ஆளுங்க உங்கள அடிச்சு போட்டுருவாங்க. இதுக்கு மேல என் பின்னாடி வராதிங்க.” -வேணி.
“கொஞ்ச நேரம் முன்னாடிதான் என்ன யார்னே தெரியாதுனு சொன்னிங்க. இப்ப என் சாதி முதற்கொண்டு தெரிஞ்சு வச்சுருக்கீங்க. அப்பா! என்ன நடிப்பு!”-முகிலன்.
"ஆமா நடிப்புதான். உங்களுக்கு சொந்த வீடு கூட இல்ல. ஒருவேளை நான் உங்கள காதலிச்சு திருமணம் செஞ்சாலும் எப்படி என்ன காப்பத்துவிங்க." - வேணி.
"ஆமா இல்ல. ஆனா இப்ப சொந்த வீடு கட்டுற அளவுக்கும், அதுல உங்கள குடி வச்சு சிறப்பா வாழும் அளவுக்கும், தகுதியான வேலை கிடைச்சுடுச்சு. அதனால தான் சொல்றேன் என்ன பிடிச்சுருக்கா? இல்லையா?"-முகிலன்.
“இங்க பாருங்க. தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதிங்க. ஏற்கனவே எங்க வீட்ல நீங்க என் பின்னாடி சுத்துறிங்கனு தெரிஞ்சுடுச்சி. பிரச்சினையாகிடும் வேண்டாம்.”- வேணி.
“உங்க உதடுதான் என்ன வேண்டாம்னு சொல்லுது. உங்க கண்கள் வேண்டும் என்று சொல்லுதே.”-முகிலன்.
“அறிவாளித்தனமா பேசுறிங்கனு நினைப்பா. நீங்க செய்தி எல்லாம் பார்கறது இல்லயா? சாதி மாத்தி காதல் பண்றவங்கள திருமணம் பண்றவங்கள வெட்டி போடுறாங்க. அத பார்த்துக் கூட திருந்த மாட்டிங்களா? “வேணி.
“அதைப்பற்றி எனக்கு கவலை இல்ல. என் கண்ண பார்த்து, 'உன்னை எனக்கு பிடிக்கல, என் பின்னாடி சுத்தாதிங்கனு ' சொல்லுங்க நான் அதற்கு பிறகு உங்க கண்ல படவே மாட்டேன்.”-முகிலன்.
“ஒரு முறை சொன்னா புரியாதா? நமக்குள்ள காதல் என்ற பேச்செல்லாம் வேண்டாம்.”- வேணி.
“அதை ஏன் தலை குனிஞ்சுகிட்டு சொல்றிங்க. என்னை பிடிக்கலனு என் கண்ண பார்த்து சொல்லுங்க நான் போயிடுறேன்.”-முகிலன்.
அவளும் பிடிக்கவில்லை என்று சொல்ல முயற்சி செய்யும் போது வார்த்தைகள் வர தயங்க, மெளனமாகவே நின்றாள். அவள் இப்பொழுது சினம் கலந்த பார்வையுடன் அவனைப்பார்தாள். சிறிது நொடியிலேயே அந்த அனல் பார்வை தென்றலாய் வீச அவன் கேட்கவந்த கேள்வியையே மறந்து அவள் பார்வைகளை பதிலாக ஏற்றுக் கொண்டான். இந்த பார்வைகளின் பரிமாற்றத்திற்கு மதம், மொழி மற்றும் சாதி என்ற எதுவுமே கிடையாது. அவர்களின் பார்வைகள் பரிமாற்றத்தை கலைத்தது ஒரு கலகக்குரல்.
“வேணி இங்க வா.” அவளது அண்ணன்.
அவள் அவளது அண்ணன் அருகே சென்றவுடன் அவன் முகிலன் பக்கம் சென்றான்.
“டேய் என்னடா. பொண்ணு கிட்ட பிரச்சின பண்ணிக்கிட்டு இருக்க.” -அவளது அண்ணன்.
“நான் பிரச்சனை எல்லாம் பண்ணல அந்த பெண்ண எனக்கு பிடிச்சிருக்கு அதான் சொன்னேன். உனக்கும் பிடிச்சிருக்கானு கேட்டேன் அவ்ளோதான்.” -முகிலன்.
“நான் அந்த பொண்ணோட அண்ணன். என்கிட்டயே அவள பிடிக்கும்னு சொல்றியா?”-அவளது அண்ணன்.
“அப்படியா? “முகிலன்.
“நீ என்ன சாதி நாங்க என்ன சாதி. இப்ப நாட்டுல நடக்கிறதுலாம் தெரியும்ல. காதல் என்ற பெயரில் கல்யாணம் பண்ணி ஏமாத்துறவங்கள எப்படி வெட்டி கொன்னு போடுறாங்கனு.”-அவளது அண்ணன்.
“ஆமா தெரியும். நல்லா வாழனும்னு நினைக்கிறவங்கள தான வெட்டி போடுறாங்க வெறி பிடிச்சவங்க . “ முகிலன்.
“அடிச்சனா செவுள் திரும்பிக்கும் பார்த்துக்கோ. இப்படியே பேசிக்கிட்டு இருந்தா உன்னையும் வெட்டி கூறு போட்டுருவேன் பார்த்துக்க. “-அவளது அண்ணன்.
“பொது இடத்துல வெட்டுவேன் என்று மிரட்டுறிங்க.” முகிலன்.
“உன்ன வெட்டினா யாரவது காப்பாத்துவாங்கனு நினைக்கிறாயா? மத்தவங்க சுத்தி நின்னு வேடிக்கை மட்டும் தான் பார்ப்பாங்க.”-அவளது அண்ணன்.
“என்ன மட்டும் இல்ல யார வெட்டினாலும் நம் மக்கள் சுத்தி நின்னு வேடிக்கை மட்டும் தான் பார்ப்பாங்க. “முகிலன்.
“டேய்! திருந்தமாட்டடா நீ. ஒழுங்கா இன்னையோட இந்த பொண்ணு பின்னாடி சுத்துறத நிறுத்திக்கோ.”-அவளது அண்ணன்.
“உங்க பொண்கிட்ட என்ன பிடிக்கலனு சொல்லச் சொல்லுங்க. நான் அவள் பின் சுத்துறத நிறுத்திக் கொள்கிறேன் .” -முகிலன்.
“வேணி இங்க வா. அவன் முகத்துல கரிய பூசுற மாதிரி பிடிக்கலனு சொல்லுமா.”-அவளது அண்ணன்.
அவள் சிறிது நேர மௌனத்திற்கு பின்.
“அண்ணா வேண்டாம் ணா. "- வேணி.
“அதான் சொல்லிட்டாளா போடா.”-அவளது அண்ணன்.
“அண்ணா வேண்டாம் னா. பிரச்சினை வேண்டாம் னா. வீட்டுக்கு போகலாம்.” -வேணி.
இந்த பதிலை கேட்டு சற்று சினம் கொண்டவனாய்.
“ஏய் வேணி. இப்ப நீ அவன பிடிக்கலனு சொல்லு.”-அவளது அண்ணன்.
அவள் இப்பொழுது பதிலேதும் சொல்லாமல் மெளனமாகவே இருந்தாள். அவள் அண்ணன் அதட்டிக் கேட்டும் அவள் பதிலில், அவள் உறுதியாகவே நின்றாள். ஓங்கி வேணியின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான் வேணியின் அண்ணன். அவளது கண்ணீர் சத்தம் இல்லாமல் கண்களில் இருந்து கன்னங்கள் வழியே ஓடியது. அங்கு நிகழ்ந்த நிகழ்வை வேடிக்கைப் பார்க்க தொடங்கினர் சுற்றும் இருந்த சிலர்.
“அடி கிறுக்கி. உன்னால தான் இவ்ளோ பிரச்சினயா? அதான பார்த்தேன். ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நூழையும் னு. நீ வண்டில ஏறு வீட்டல போயி பேசிக்கிறேன். உன்ன பெத்தவங்களையும் சேர்த்து உதைக்கனும். அவங்க ஒழுங்கா வளர்த்தா நீ ஏன் இப்படி இருக்க? டேய் இவள வீட்ல போய் கவனிச்சுட்டு பிறகு உன்ன பேசிக்கிறேன்.”-அவளது அண்ணன்.
என்று திட்டிக்கொண்டே வேணியை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றான் அவள் அண்ணன். அடிப்பதும் மிரட்டுவதும் தான் வீரம் என்று நினைத்த அவளது அண்ணனுக்கு தனது மௌனம் தான் வீரம் என்று புரியவைத்தாள் வேணி. சாதியத்தில் அவளது மௌனம் கரியை பூசியது.
முகிலனோ என்ன செய்வதென்று தெரியாமல் அந்த வண்டி போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த வண்டியில் சென்ற அவள் சற்று பின்னே திரும்பி இவனைப்பார்த்தாள். அப்பொழுது கண்ணிலிருந்த கண்ணீர் காற்றிலே கரைந்து காதலை அவனிடம் வீசியது. அவளது அந்த புதுவிதமான பார்வை அவன் கேட்ட கேள்விக்குண்டான பதிலாய் 'எனக்குள்ளும் காதலிருக்கிறது' என்று சொல்லியது அவனது கண்களுக்கு. இதுவரை இருவருக்கும் மட்டும் உள்ள உணர்வை அவளது மௌனம் அறிவித்தது அங்கிருந்த அனைவருக்கும்.
அவனும் விடைகிடைத்த மகிழ்ச்சியில் மனம் முழுக்க காதலுடன் சென்றான். இனி மேல் வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் திறனை அவளது பார்வை அவனுக்கு வழங்கியது. எத்தனையோ காலங்கள் சாதியால் காதல் மணங்கள் கல்லறையை தொட்டாலும் கலங்காமல் காதல் மீண்டும் மீண்டும் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சாதியம் நினைத்துக் கொள்கிறது ஆணவக் கொலைகள் காதலைக் குறைக்கும் என்று. அதற்குத் தெரியாது நம் தமிழின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய திருக்குறளும் அகநானூறும் குறுந்தொகையும்.
எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் காதல் என்பது அழியாத கோலம்.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
-- செம்புலப் பெயல்நீரார்.