கோடியில் தேடி என்ன பலன்
கழுகுகளும் காட்டேறிகளும்
மலிந்துபோன பூமியிலே
காணாமல்போன உறவுகளை
கோடியில் தேடி என்ன பலன்?
கண் துடைப்பு நாடகங்கள்
கச்சிதமாய் அரங்கேறுகையில்
சாட்சி சொல்லும் சாமானியர்களாய்
நொந்து புலம்பி என்ன பயன்?
மனிதம் தின்ற பூமியிலே
மனிதாபிமானத்தை பேசி முழங்கி
நியாயம் கேட்பதில் தான்
என்ன பயன்?
சிறுக்சிறுகச் சீண்டிச் சிதைக்கையிலே
சீறித் தோள் கொடுத்த
அன்னை இந்திராவின் இளையவர்கள்
இன்றிருந்தும் என்ன பயன்?
மாறித் தோழ் கொடுத்த
சூழ்ச்சி அரசியலில்
மானத் தழிழர்கள்
மறைமுகமாய் வதைக்கப்பட்ட
வன்கொடுமை வரலாற்றை
அறிந்திராமல் என்ன பயன்?
பூகோள போட்டியிலே
வீரங்கள் மறைக்கப்பட்டு
காட்டிக் கொடுக்கப்பட்ட
கசப்பான அரசியலை
தொப்புள் கொடி உறவுகள்தான்
கண்டு கொள்ளாமல்
என்ன பயன்?
உலகம் எங்கும் உதிர்ந்து வாழும்
எண்கோடி மக்களுக்கு
அமைதியான பூமி ஒன்று
தரணியில் இன்றி என்ன பயன்?
ஊர் துறந்து புலம் பெயர்ந்து
அன்னிய தேசத்தில்
அடைக்கலம் கொண்டதனால்
தம் பிள்ளைப்பருவத்து
தெருக்களை தொட்டிடாத
பிஞ்சுகளை எண்ணி
நெஞ்சு நொந்து என்ன பயன்?
பிஞ்சு சொல்லும் வார்த்தையிலே
பொதிந்திருக்கும் ஆங்கிலத்தில்
பிள்ளைத் தழிழ் இல்லை என்று
புழுங்கி அழுது என்ன பயன்?
புதிய சந்ததிகள்
நாளை புகலிடம் தந்த நாடுகளே
தாய் நாடென்று
தலை நிமிர்த்தி கூறுகையில்
கண் கலங்கி என்ன பயன்?
பயனின்றி பறி போகும்
பல்வேறு பக்கங்களை
பாதுகாக்க முன்விளைவோம்
வழியறிந்து வகை செய்வோம்
புறம்பேசும் நிலை மறந்து
நாமெல்லாம் ஒன்றிணைவோம்
கலங்கியழும் கண்துடைத்து
நெஞ்சுரத்தில் நிமிர்ந்து நிற்போம்
அஞ்சாமல் நீதி கேட்போம்
வெஞ்சினத்தில் வேள்வி செய்வோம்